அரியலூா் மாவட்டம், திருமானூர் அருகே வேட்பாளர்கள் அளித்த பரிசுப் பொருட்களைக் கோயிலில் ஒப்படைத்துவிட்டு, சுதந்திரமாக வாக்களிக்கப் போகிறேன் என்று ஒருவர் கூறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இன்று (டிசம்பர் 27) நடைபெறும் முதற்கட்ட வாக்குப் பதிவுக்கான பிரச்சாரம் புதன்கிழமை மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், வேட்பாளர்கள் ஒலிபெருக்கி இல்லாமல் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் வேலையில் ஈடுபட்டனர். கீழக்கவட்டாங்குறிச்சி வார்டு எண் 1இல் போட்டியிடும், கிராம ஊராட்சித் தலைவர் வேட்பாளர்கள் மற்றும் கிராம வார்டு உறுப்பினர் வேட்பாளர்கள் சிலா் பரிசுப் பொருட்களை அந்தப் பகுதியில் வசிக்கும் வாக்காளர்களுக்குக் கடந்த சில தினங்களாக விநியோகம் செய்திருக்கின்றனர். வார்டு எண் 1இல் வசிக்கும் தையல் தொழிலாளி பச்சமுத்து (48) என்பவரின் வீட்டில் உள்ள ஆறு வாக்குகளுக்கும் அங்கு போட்டியிடுபவர்கள் காமாட்சி விளக்குகளைப் பரிசுப் பொருட்களாக வழங்கியுள்ளனர். இதனால் மனக்குழப்பத்துக்கு ஆளான பச்சமுத்து, வேட்பாளர்கள் வழங்கிய பரிசுப் பொருட்களை அங்குள்ள மாரியம்மன் கோயிலில் வைத்து, விழுந்து கும்பிட்டுவிட்டு பரிசுப் பொருட்களைக் கோயிலிலேயே ஒப்படைத்துச் சென்றார். இதுகுறித்து பச்சமுத்து கூறுகையில், “இங்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் எனக்கு நன்கு தெரிந்தவர்கள். எனவே, தங்களுக்குக் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் எனக்கூறி சிலர் பரிசுப் பொருள்களை அளித்து செல்கின்றனர். பரிசுப் பொருள்களைப் பெறாவிட்டால், தனக்கு வாக்களிக்க மாட்டாரோ என சந்தேகப்படுகின்றனர். வேண்டாம் என்று கூறினாலும் திரும்பப் பெற மறுக்கின்றனர். இதனால் கடந்த நான்கு நாட்களாக மனக் குழப்பத்துக்கு உள்ளானேன். எனது தூக்கமும் கெடுகிறது. சரியாக வேலை பார்க்க முடியவில்லை. பெரிய சங்கடம் ஏற்பட்டது. எனவே, இந்தப் பரிசுப் பொருட்களைக் கோயிலில் ஒப்படைத்தேன். அனைவரும் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும். ஆனால், ஒரு சிலர் இப்படிச் செய்வதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுபோல், பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்க தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். முன்னதாக கடலூர், விருத்தாசலம் ஆகிய இடங்களில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான காமாட்சி விளக்குகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.