TNPSC Scam - What Happens In Strong Room ? | Editorji
  1. home
  2. > Minnambalam
  3. > TNPSC Scam - What Happens In Strong Room ?
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0
--

TNPSC Scam - What Happens In Strong Room ?

Feb 29, 2020 19:33 IST

டிஎன்பிஎஸ்சி முறைகேடுகளில் பணம் கொடுத்து வேலைக்குச் சேர்ந்தவர்களையும் பணம் வாங்கிக் கொடுத்த இடைத்தரகர்களையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்து வருகின்றனர்.

அதேசமயத்தில் பணம் பெற்றுக்கொண்டு விடைத்தாளைத் திருத்தி மதிப்பெண் போட்டு தேர்வர்கள் தேர்ச்சியடைய உடந்தையாக இருந்த டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளையும், விடைத்தாள் ஸ்கேன் மற்றும் பிரிண்ட் செய்வதற்கு டெண்டர் எடுத்த எஸ்விஎன் இமேஜிங் லிமிடெட் நிறுவனத்தை நடத்தி வரும் செல்வக்குமாரையும் இன்னும் கைது செய்ய முடியாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.


டிஎன்பிஎஸ்சி முறைகேடுகளைப் பற்றி தமிழின் முதல் மொபைல் தினசரி மின்னம்பலம்.காம் புலனாய்வு செய்து தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரையிலும், சிபிசிஐடி போலீசாரும் செல்வக்குமார் மீது குற்றம்சாட்டுவதற்கு என்ன காரணம் என்று டிஎன்பிஎஸ்சி வட்டாரத்தில் விசாரித்தோம். இதற்குப் பதிலளித்தவர்கள், “நாங்கள் எங்கள் அதிகாரிகளுக்குக் கூடப் பயப்படமாட்டோம். ஆனால் செல்வக்குமாருக்குத்தான் பயப்படுவோம். செல்வக்குமாரைப் பார்த்தால் அதிகாரிகளே அஞ்சுவார்கள்” என்கின்றனர்


அப்படியென்றால், டிஎன்பிஎஸ்சி முறைகேட்டுக்கும் செல்வக்குமாருக்கும் என்ன தொடர்பு என்று கேட்டதற்கு, “விடைத்தாள் (ஓ.எம்.ஆர் ஷீட்) அச்சடிக்கும் டெண்டரும், விடைத்தாள்களை

ஸ்கேன் செய்யும் டெண்டரும் செல்வக்குமாருக்குச் சொந்தமான எஸ்விஎன் இமேஜிங் லிமிடெட் நிறுவனம்தான் எடுத்துள்ளது. குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4 தேர்வு நடந்ததும் தமிழகம் முழுவதுமுள்ள தேர்வு மையங்களிலிருந்து சீல் வைக்கப்பட்ட விடைத்தாள்கள் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்திற்கு வரும். டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் விடைத்தாள்களைத் திருத்தி மதிப்பெண் போடுவதற்கு ஸ்ட்ராங் ரூம் (பாதுகாப்பான அறை) உள்ளது. இங்குதான் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்து திருத்தப்பட்டு மதிப்பெண் போடப்படும். இதற்காக டெண்டர் எடுத்துள்ள செல்வக்குமார், 5 அல்லது 6 ஸ்கேனிங் மிஷின்களையும், ஸ்கேன் செய்வதற்காக ஒரு மிஷினுக்கு ஒரு ஆளையும் அழைத்து வருவார்.


இந்த ரூமில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் சிலர் மட்டும் தான் இருப்பார்கள் அவர்கள் பெரும்பாலும் செல்வக்குமாருடன் மிக நெருக்கமாக இருக்கக்கூடியவர்கள். ஒரு நாளைக்கு ஒரு மிஷினால் 25 ஆயிரம் விடைத்தாள்களை தான் ஸ்கேன் செய்து மதிப்பெண்கள் போடமுடியும். ஆறு மிஷின் என்றால் நாளொன்றுக்கு 1.50 லட்சம் விடைத்தாள்கள் தான் ஸ்கேன் செய்யமுடியும். விடைத்தாளை ஸ்கேன் செய்யும் போது ஒவ்வொரு முறையும் அதிகாரிகள்தான் கீ வேர்டு கொடுப்பார்கள். அப்படி ஸ்கேன் செய்யும்போதுதான் அனைத்து முறைகேடுகளும் நடந்திருக்கும். அப்போது ஸ்கேன் செய்பவர்களும் உடனிருக்கும் அதிகாரிகளும் சேர்ந்துதான் கூட்டு முயற்சியில் முறைகேடுகள் செய்திருக்க வேண்டும்” என்கிறார்கள்.

இதுமட்டுமின்றி, ”ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. அதில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து பார்த்தால் செல்வக்குமார் ஆட்கள் யார் யார் உள்ளே வந்தது. அப்போது எந்தந்த அதிகாரிகள் உடனிருந்தார்கள், கீ வேர்டு கொடுக்கும் அதிகாரிகள் யார். ஸ்கேன் ஸ்கிரின் பக்கம் சிசிடிவி கேமராக்கள் இருந்ததா என்பதெல்லாம் தெரியவரும் . ஆனால் சிசிடிவியில் பதிவான அனைத்து காட்சிகளும் இருக்கிறதா என்பதும் கேள்விக் குறிதான்” என்று சந்தேகம் தெரிவிக்கின்றனர் டிஎன்பிஎஸ்சியில் பணியாற்றும் சில நேர்மையான அதிகாரிகள்.


மேலும், தற்போது சிபிசிஐடி அதிகாரிகளும் அந்தக்கோணத்தில் தான் விசாரிக்க முயற்சி செய்து வருகிறார்கள். அதன்படி, டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் 2016லிருந்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் காப்பி செய்து வைத்துள்ளார்களா அல்லது அழித்துவிட்டார்களா என்பது விரைவில் தெரியவரும்” என்கிறார்கள்.

இந்நிலையில், ஸ்ட்ராங் ரூமில் என்ன நடந்தது என்பது குறித்து அறிய செல்வக்குமாரின் நெருங்கிய நண்பர்கள் வாயிலாக அவரை தொலைபேசியில், தொடர்புகொண்டோம். அப்போது, எதிர்முனையில் பேசியவர் செல்வக்குமார்தான் என்பதை உறுதி செய்து கொண்டு, டிஎன்பிஎஸ்சி விடைத்தாள் பிரிண்டிங் செய்வதும் ஸ்கேன் செய்வதும் நீங்கள்தானே என்று கேட்டதும், அவசரமாக நான் இல்லை என்று லைனைத் துண்டித்தார், அதன் பிறகு அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. சிபிசிஐடி கவனம் தற்போது செல்வக்குமார் பக்கம் திரும்பியிருக்கிறது.

முன்னதாக, இடைத்தரகர் ஜெயக்குமார் கைதாகும் வரை அவர்தான் டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் முக்கிய புள்ளி என்று கூறப்பட்டது. அதன்படி அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் செல்வக்குமார் விவகாரம் வெளியில் வந்தது. தற்போது செல்வக்குமார் கைது செய்யப்பட்டால், டிஎன்பிஎஸ்சியில் பணியாற்றும் உயரதிகாரிகளே சிக்குவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

-வணங்காமுடி