Rajinikanth's Political Agenda Affected by 'Corona Lockdown' | Editorji
  1. home
  2. > Minnambalam
  3. > Rajinikanth's Political Agenda Affected by 'Corona Lockdown'
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

Rajinikanth's Political Agenda Affected by 'Corona Lockdown'

May 28, 2020 18:18 IST

நடிகர் ரஜினிகாந்த் கடந்த மார்ச் 12 ஆம் தேதி தனது மாற்று அரசியலை அறிவித்ததோடு, ‘மக்களிடம் எழுச்சி வரட்டும். அப்போ வர்றேன் அரசியலுக்கு’ என்று சென்னை லீலா பேலஸ் அரங்கத்தில் இருந்த போடியத்தை அடித்துச் சொன்னார். ரஜினிதான் முதல்வர் என்று லயித்திருந்த ரசிகர்களுக்கும், ரசிகர் மன்ற நிரவாகிகளுக்கும் ரஜினியின் இந்த மாற்ற அரசியல் ஏமாற்ற அரசியலானது. ஆட்சிக்கு ஒரு தலைமை கட்சிக்கு ஒரு தலைமை என்றெல்லாம் ரஜினி பேசப் பேச தலை சுற்றிக் கிடந்தார்கள் ரசிகர்கள்.

அதன் பின் நான்கு நாட்கள் மார்ச் 15 ஆம் தேதி கழித்து சாணக்யா விழாவுக்கு வந்த ரஜினி அங்கே, ‘நான் வைத்த புள்ளி இப்போது சுழலாகிறது. பின் சுனாமியாகும்’ என்று நம்பிக்கை தெரிவித்தார். அவ்வளவுதான்... அடுத்த ஒரு வாரத்தில் இந்தியா முழுதும் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மார்ச் 22 ஆம் தேதி மக்கள் ஊரடங்கு, அதன் பின் மார்ச் 25 முதல் நாடு முழுதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நான்காவது கட்டமாக இப்போது வரை நீடித்துக் கொண்டிருக்கிறது. 5 ஆம் கட்ட ஊரடங்கும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் ஊரடங்கு காலகட்டத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் தமிழகம் எங்கும் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்க ஏப்ரல் 14 ஆம் தேதி ட்விட்டர் மூலம், தனது ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவித்தார் ரஜினி. வேறு எந்த பெரிய அரசியல் நடவடிக்கையையும் அவர் ஊரடங்கு காலத்தில் மேற்கொள்ளவில்லை. ரஜினிக்கு ஏற்கனவே சிறுநீரகம் தொடர்பாக சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை, அமெரிக்காவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அவரது இந்த மருத்துவப் பின்னணியில் கொரோனா வைரஸ் காலத்தில் ரஜினி வீட்டிலேயே இருக்க வேண்டியது அவசியம் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். அதனால் ரஜினி முழுக்க முழுக்க குடும்பத்தோடே இருக்கிறார்.


கொரோனா ஊரடங்கால் ரஜினியின் பல்வேறு திட்டங்கள் தள்ளிப் போகின்றன, அதில் அவரது கட்சி ஆரம்பிக்கும் பணியும் முக்கியமானது என்கிறார்கள் ரஜினியைச் சுற்றியுள்ளவர்கள்.

இதுபற்றி விரிவாக விசாரித்தோம்.

“மார்ச் மாதம் தனது மாற்று அரசியலை அறிவித்த ரஜினி, ஏப்ரல் மாதம் அமெரிக்காவுக்கு சென்று மருத்துவ செக்கப்பை முடிக்கத் திட்டமிட்டிருந்தார். அரசியல் கட்சி துவங்குவது, அடுத்தடுத்து சுற்றுப் பயணம் என்ற முடிவில் இருந்த ரஜினி இதுபற்றி அமெரிக்க மருத்துவர்களிடம் ஒப்பினியன் கேட்கவும் திட்டமிட்டிருந்தார். ஏனெனில் ஏற்கனவே ராமச்சந்திராவில் இதய சிகிச்சை பெற்றவர் ரஜினி, அதன் பின் சிங்கப்பூர், அமெரிக்கா என்று சிறுநீரக சிகிச்சை பெற்றார். தனது இத்தகைய சிகிச்சைப் பின்னணியில் அரசியல் என்ட்ரி, அதன் பிறகான பயணங்கள் பற்றி மருத்துவர்களின் கருத்தறிய விரும்பினார் ரஜினி. இதற்காக அங்கே அப்பாயின்மென்ட் மற்றும் பயண ஏற்பாடுகள் எல்லாம் செய்து தயாராக இருந்தார்.

அமெரிக்கா சென்று வந்த பிறகு சினிமா ஷூட்டிங் பணிகளையும் சில மாதங்களில் இடைவிடாமல் மேற்கொண்டு செப்டம்பரில் முடிப்பது என்று ப்ளான் வைத்திருந்தார். அதன் பின் கட்சிப் பணிகள், 234 தொகுதிகளுக்கும் சென்று கொடியேற்று விழா என்று மிகத் துல்லியமாக பட்டியலிட்டு திட்டம் வகுத்து வைத்திருந்தார் ரஜினி. ஆனால் கொரோனா ஊரடங்கால் எல்லாமே முடங்கிவிட்டது. வரும் செப்டம்பர் மாதம் அவரை பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே ஷூட்டிங் கூட செப்டம்பருக்குப் பிறகுதான் என்பதே இப்போதைய நிலைமை.


ஆக அமெரிக்கா மருத்துவப் பயணம், ஷூட்டிங், கட்சி ஆரம்பிக்க வேண்டிய பணிகள் என எதையுமே திட்டமிட்டபடி செய்ய முடியாத நெருக்கடியில் இருக்கிறார் ரஜினி. ரஜினி அரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் என்று இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சொல்லி வந்தாலும், வந்துவிட்டேன் என்று சொல்லி அதற்கான வேலைகளை ஆரம்பித்த உடனே, இப்படி உலகமே இதற்கு முன் காணாத முடக்கம் ஏற்பட்டிருக்கிறது. கடவுளை பெரிதாக நம்பும் ரஜினியின் குடும்பத்தார் மனதிலும் இது சில சஞ்சலங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கெல்லாம் மேல்... ரஜினியின் அரசியல் என்ட்ரிக்கு தோள் கொடுப்பதாக சொல்லியிருந்த சில தொழிலதிபர்களும் கூட, ‘இனிமேல் தேர்தலுக்கு குறுகிய காலம்தான் இருக்கு. இதற்குள் ரஜினி என்ன செய்துவிட முடியும்?’ என்ற மனப்பான்மையில் சற்றே ஒதுங்கியிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

சில வருடங்களுக்கு முன் ஆந்திர நடிகரும், ரஜினியின் நெருங்கிய நண்பரும், அரசியல்வாதியுமான சிரஞ்சீவி ஒரு பேட்டியில், ‘ரஜினிக்கும் கமலுக்கும் என் அட்வைஸ் என்னவென்றால் அரசியலுக்கு வராதீர்கள். கமல் சென்சிடிவ்வான ஆள், ரஜினி அதை விட சென்சிடிவ்வான ஆள். அரசியலெல்லாம் உங்களுக்குத் தாங்காது’ என்று கூறியிருந்தார். அந்த பேட்டிக் காட்சிகளை கூட ரஜினி இந்த ஊரடங்கில் சில நாட்கள் போட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்கிறார்கள்.

தேர்தல் அடுத்த வருடம் மே மாதம்தான் என்பது உறுதியானால், ரஜினி இனிமேல் கட்சி தொடங்கி சமூக இடைவெளியுடன் மாநிலம் முழுதும் பயணித்து, தனது மாற்று அரசியலை மக்கள் முன் வைத்து அவர்களின் மனதை வெல்ல முடியுமா என்பது ஒரு கேள்விக்குறிதான். ஆக ரஜினியின் அரசியல் அஜெண்டாவை உடைத்துக் கொண்டிருக்கிறது ஊரடங்கு என்பதுதான் ரஜினியைச் சுற்றியுள்ளவர்கள் சொல்லும் செய்தி! அதே நேரம், ‘கொரோனா ஊரடங்கு எல்லாருக்கும்தானே... ரஜினிக்கு மட்டுமா என்ன? இதையெல்லாம் சமாளித்து ரஜினி வருவார் வெல்வார்’ என்று சொல்கிறார்கள் ரஜினிக்கு நெருக்கமான அரசியல் புள்ளிகள்.

-வேந்தன்