RajiniKanth's Confession On His Money Lending Business | Editorji
  1. home
  2. > Minnambalam
  3. > RajiniKanth's Confession On His Money Lending Business
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

RajiniKanth's Confession On His Money Lending Business

Jan 30, 2020 17:48 IST

நடிகர் ரஜினிகாந்த் மீதான வருமான வரி வழக்குகளை கடந்த ஜனவரி 28 ஆம் தேதி வருமான வரித்துறை வாபஸ் பெற்றதன் பின்னணியில் ரஜினி தெரிவித்திருக்கும் முக்கிய காரணம், ‘நான் வட்டிக்கு கடன் கொடுத்தேன்’ என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து இன்று ட்விட்டரில், ‘கந்து வட்டி ரஜினி’ என்ற ஹேஷ்டேக் டிரண்டிங் ஆகியுள்ளது.

வருமானம் தொடர்பான முழு விவரங்களை வழங்கவில்லை என்றும் தவறான தகவல்களை அளித்தார் என்பதற்காகவும் நடிகர் ரஜினிகாந்துக்கு 66.21 லட்சம் ரூபாயை வருமான வரித் துறை அபராதமாக விதித்தது. இதை எதிர்த்து ரஜினி வருமான வரிகள் மேல்முறையீட்டு வாரியத்துக்கு செல்ல ரஜினிக்கு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்தது. இதை எதிர்த்து வருமான வரித் துறை தரப்பிலிருந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.


இந்த வழக்குகள் நீதிபதிகள் வினித் கோத்தாரி, ஆர்.சுரேஷ் குமார் ஆகியோர் முன்பு ஜனவரி 28 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.சுவாமிநாதன், ‘அபராதத் தொகை ஒரு கோடி ரூபாய்க்கு குறைவாக இருந்தால், சட்ட நடவடிக்கைகள் மூலம் வழக்கை கைவிடலாம் என்று மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டதைக் கருத்தில்கொண்டு வழக்குகளை வாபஸ் பெறுகிறோம்’ எனத் தெரிவித்தார். அவரது கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.


இதுபற்றிய விரிவான செய்தியை இன்று காலை மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் ரஜினி - வருமானத் துறை - வழக்கு - வாபஸ்: பின்னணி என்ன?வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இந்த விவகாரத்தில் வருமான வரித்துறைக்கும் ரஜினிக்கும் நடந்த தகவல் பரிமாற்றங்கள் தொடர்பாக மேலும் சில முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

“தனது வருமானம் தொடர்பாக ரஜினி அளித்த திருத்தப்பட வருமானம் பற்றிய தகவலில், 2 .63 கோடிக்கு கடன் வழங்கியதாகவும், 2002-2003 மதிப்பீட்டு ஆண்டில் அதற்காக 1.45 லட்சம் வட்டி பெற்றதாகவும், நிகர லாபம் 1 .19 லட்சம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.


கே.கோபாலகிருஷ்ண ரெட்டிக்கு 18% வட்டி விகிதத்தில் 1.95 கோடி கடன் வழங்கினார். அர்ஜுன்லால் என்ற ஃபைனான்சியருக்கு 60 லட்சம், சஷி பூஷனுக்கு 5 லட்சம், மற்றும் சோனு பிரதாப்பிற்கு 3 லட்சம் என்று குறிப்பிட்டிருக்கிறார் ரஜினி. மேலும், 2003-04 ஆம் ஆண்டிற்காக தாக்கல் செய்யப்பட்ட ஐ-டி வருமானத்தில், நடிகர் முரளி பிரசாத்துக்கு வழங்கப்பட்ட மற்றொரு 10 லட்சம் கடன் தொகையை சேர்த்திருக்கிறார் ரஜினி. அந்த ஆண்டில், அவர் 1.99 லட்சம் வட்டி பெற்றதாகக் கூறி, நிகர லாபம் 1.64 லட்சம் என்று அறிவித்தார்.

இருப்பினும், 2004-05 ஆம் ஆண்டில் 1.71 கோடி ரூபாய் அளித்த கடன்களை ரஜினியால் திரும்பப் பெற முடியவில்லை. இதன் காரணமாக, அவர் அந்த ஆண்டில். 3.93 லட்சம் இழப்பை சந்தித்ததாகக் கூறியிருக்கிறார்.

வருமான வரித்துறையின் நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக, ‘கொடுத்த கடனை வசூலிக்க முடியவில்லை’ என்ற காரணம் சொல்லித் தப்பிக்கும் நடைமுறையை பலர் பின்பற்றி வருகின்றனர். எனவே ரஜினியும் அந்த காரணத்தைப் பயன்படுத்தி தப்பிக்கப் பார்க்கிறாரா என்பதற்காக வருமான வரித்துறை ரஜினிகாந்தை விசாரித்தது.


அப்போது ரஜினிகாந்த், ‘நான் 2002 முதல் 2005 வரை எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை. பிறகு எப்படி எனக்கு வருமானம் வரும்?’ என்று கேட்டிருந்தார். மேலும் தனது ராகவேந்திரா திருமண மண்டபம் மற்றும் சென்னையில் கோடம்பாக்கத்தில் உள்ள அருணாச்சலா விருந்தினர் மாளிகை ஆகியவற்றிலிருந்து வருவாய் ஈட்டியதாக அவர் கூறியிருந்தார். மேலும் 2002 திரைப்படமான பாபா நட்டம் அடைந்ததாகவும் ரஜினி அந்த விசாரணையில் தெரிவித்திருந்தார்.

அந்த விசாரணையின் போது வட்டிக்கு விடுவதை பிசினஸாக செய்கிறீர்களா என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்டதற்கு, “இல்லை. நான் சிலருக்கு கடன் மற்றும் அட்வான்ஸ் கொடுத்திருக்கலாம், ஆனால் இதை பிசினஸாக செய்யவில்லை.மேலும்தான் பணம் கொடுத்தவர்கள் அனைவரும் தன்னுடைய நண்பர்கள் என்றும், அவர்களுக்கு வழங்கப்பட்ட கைமாற்றெல்லாம் வட்டிக்கு விடுவதில் ஈடுபடுவதற்குப் பொருந்தாது என்றும் கூறியிருக்கிறார் ரஜினி.


அப்படியென்றால் ஃபைனான்சியர் அர்ஜுன் லாலுக்கு 60 லட்சம் கொடுத்தது கடன் இல்லையா என்று ஐடி அதிகாரிகள் கேட்டபோது... ‘ஒரு ஃபைனான்சியருக்கு குறிப்பிட்ட ஒரு பரிவர்த்தனைக்காக பணம் கொடுப்பது தொழில் ரீதியான வட்டிக்கு விடுதல் ஆகாது’ என்றும் ரஜினி தெரிவித்ததாக ஐடி வட்டாரங்கள் கூறுகின்றன. அதே நேரம் ரஜினியின் அக்கவுன்ட்டன்ட் டி.எஸ். சிவராமகிருஷ்ணனோ, கணக்குப் புத்தகங்களின்படி ரஜினி ஆறு நபர்களுக்கு கடன் கொடுத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இந்த ஆவணங்களின் அடிப்படையிலும் ரஜினி பண வணிகம் செய்யும் உரிமம் பெற்றவர் அல்ல என்ற அடிப்படையிலும் விசாரணை அதிகாரிகள் ரஜினி கைமாற்றாகத்தான் கடன் கொடுத்திருக்கிறார் என்றும் தொழில் ரீதியாக அவர் யாருக்கும் கடன் கொடுக்கவில்லை என்றும் ஒரு முடிவுக்கு வந்தனர்.

ஆனால் அதன் பின் ரஜினி வருமான வரித்துறைக்கு எழுதிய கடிதத்தில், “நான் வட்டிக்கு விடுதல் என்றால் பான் புரோக்கிங் மட்டும்தான் என்ற தவறான புரிதலில் இருந்திருக்கிறேன். அதனால்தான் அப்போது என்னால் தெளிவுபடுத்தமுடியவில்லை. நான் தொழில் ரீதியாகத்தான் கடன் கொடுத்திருக்கிறேன் என்பதை இப்போது உணர்கிறேன். எனது வரி செலுத்திய வருமானத்தில் இருந்து எழுந்த எனது சொந்த நிதியைப் பயன்படுத்தி, இந்த நிதி வணிகத்தை நான் மேற்கொண்டு வருகிறேன். கடன் வழங்கல் மற்றும் வட்டி விகிதம் நபருக்கு நபர் மாறுபடும். தெரிந்தவர், மற்றும் ஏற்கனவே கடன்களை திருப்பி செலுத்திய விவரத்தின் அடிப்படையில் வட்டி விகிதம் மாறுபடும். மேலும் நான் காசோலை மூலம் மட்டுமே கடன் கொடுத்தேன் ”என்று சமர்ப்பித்தார்.

இதற்குப் பின் பிப்ரவரி 14, 2005 அன்று திருத்தப்பட்ட வருமானத்தை தாக்கல் செய்தார். அதில் தான் முன்பு தெரிவித்திருந்த விவரமான 1.71 கோடி ரூபாய் கடனை திரும்பப் பெற முடியவில்லை என்பதை வாபஸ் பெறுவதாகத் தெரிவித்தார். கடன் தொகையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை இன்னும் மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.

மேலும் 2004-05 ஆம் ஆண்டிற்கான தனது வருமானம் உண்மையில் 1.46 கோடி என்று அறிவித்தார். இருப்பினும், மூன்று நிதி ஆண்டுகளுக்கான மதிப்பீட்டு அதிகாரிகள் அவர் கடன் வழங்கும் தொழிலில் இல்லை என்ற முடிவுக்கு வந்தனர், எனவே, அவரது கடன்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தை ‘வணிக வருமானம்’ என்ற தலைப்பில் மதிப்பிட முடியாது. கைமாற்று கடன்களின் வட்டி, பிற மூலங்கள் மூலம் வருமானம்’ என்று மட்டுமே மதிப்பிட முடியும் என்று அவர்கள் முடிவு செய்தனர். ஆனால் நடிகர் ரஜினி பின்னர் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்து, டிசம்பர் 2009 இல் பணக் கடன் நடவடிக்கைகளின் வருமானத்தை 'வணிக வருமானம்' என்று மதிப்பிட வேண்டும் என்று ஒரு உத்தரவைப் பெற்றார்.

இந்தப் பின்னணியில்தான் ரஜினி வருமான வரி வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன.