தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் -பிரேமலதா தம்பதியரின் திருமண நாளும், தேமுதிக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சந்திப்பும் இன்று (ஜனவரி 31) தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடபெற்றது.
இதில் விஜயகாந்த் -பிரேமலதா தம்பதியரை வாழ்த்தி, ‘அந்த வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவரே...இந்த பூமிய போல குணம் படைச்ச தென்னவனே’ என்ற பாடலுக்கு கலைக்குழுவினர் நடனமாடினர். இதைப் பார்த்து மகிழ்ந்த விஜயகாந்த் தன் உடல் நலம் காரணமாக மெதுவாக சிறிது நேரம் பேசினார்.
“வெற்றி பெற்ற எல்லாருக்கும் என் வாழ்த்துக்கள். நான் மீண்டும் வருவேன். மக்களுக்கு நல்லது செய்வதற்காக நான் மீண்டும் வருவேன்” என்று கூற அனைவரும் நெகிழ்ச்சியோடு ஆரவாரம் செய்தனர். விருந்து இருக்கு எல்லாரும் சாப்பிடணும் என்று விஜயகாந்த் கூற, நிர்வாகிகளோ, ‘கேப்டன் நீங்க பேசுறதே எங்களுக்கு விருந்துதான்’ என்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரேமலதாவின் பேச்சில் அரசியல் அனல் பறந்தது.
“தொண்டர்கள் தான் எங்கள் குடும்பம். எங்கள் திருமண நாளை உங்களுடன் கொண்டாட வேண்டும் என எண்ணி தான் இந்த நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கும் ஒரே கட்சி தேமுதிக தான். கூட்டணி என்பதால் குட்ட குட்ட குனிய மாட்டோம். குட்ட குட்ட குனியும் ஜாதி இல்லை தேமுதிக. நாம் கேப்டன் சொன்னபடி மீண்டு எழுவோம்
2021-ம் ஆண்டு தேர்தலுக்காக இப்போதே நாம் தயாராக வேண்டும். கிராமம் கிராமமாக சென்று சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும். கேப்டன் மீண்டும் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்வார். 2021 -ம் ஆண்டு தேர்தலில் தேமுதிக மிகப்பெரிய கட்சியாக வரும்.விஜயகாந்த் தலைமையில் நல்லாட்சி வருவது தான் நோக்கம். விஜயகாந்த் ஆட்சி வரும் வரையில் ஓயமாட்டோம்” என்று பேசினார்.
தேமுதிக நிர்வாகிகள் வட்டாரத்தில் பேசும்போது, “பொங்கலுக்கு முன்பு, பிரேமலதா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்குச் சென்று பொங்கல் நல்வாழ்த்துகள் சொன்னார். அப்போது, கட்சியை வளர்க்கவும், தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் எம்.பி, பதவியிருந்தால் நன்றாக இருக்கும். தலைவரும் அதான் விரும்புகிறார். மார்ச்சில் காலியாகபோகும் ராஜ்யசபா எம்.பி சீட்டில் எங்களுக்கு ஒன்று கொடுங்கள் என்று உருக்கமாகக் கேட்டுள்ளார், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கட்சியில் பேசிவிட்டு சொல்கிறேன் என்று பதிலளித்துள்ளார். ஆனால் அதன் பின் தேமுதிக தரப்பில் பலமுறை கேட்டும் பதிலே இல்லை. இந்த கோபத்தில்தான் இன்று பிரேமலதா குட்டக் குட்ட குனிய மாட்டோம் என்று பேசியிருக்கிறார்” என்கிறார்கள்.