Nayanthara's Mookuthi Amman Covers Sabarimalai And Religious Issue | Minnambalam.com
EXCLUSIVE: நயன்தாராவை கலங்க வைத்த செருப்பு சென்டிமென்ட்!
EXCLUSIVE: நயன்தாராவை கலங்க வைத்த செருப்பு சென்டிமென்ட்!
மூக்குத்தி அம்மன் ஷூட்டிங்குக்கு பிரேக் கொடுத்துவிட்டு, விக்னேஷ் சிவனுடன் டூருக்குச் சென்றுவிட்டார் நயன்தாரா. கிறிஸ்துமஸ், நியூ இயர் கொண்டாட்டம் எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு தான் வருவேன் என்று சொல்லிவிட்டுக் கிளம்பியிருக்கிறார் என்பதால் படக்குழுவினர் கொஞ்சம் ரிலாக்ஸாக இருந்த சமயத்தில் அவர்களிடம் பேச்சு கொடுத்தபோது சில தகவல்கள் கிடைத்தன.
முதலில் ஷூட்டிங்குக்கு இடையே கோவில்களுக்குச் சென்றபோது நயன்தாராவை பா.ஜ.க-வை சேர்ந்த சிலர் சந்தித்துப் பேசியது பற்றிக் கேட்டபோது “பா.ஜ.க பிரமுகர்களை சந்திப்பது, அவர்களுடன் நல்ல நட்பில் இருப்பது என எப்படி இருந்தாலும் மூக்குத்தி அம்மன் படம் ரிலீஸாகும்போது சில பிரச்சினைகளை பா.ஜ.க தரப்பிலிருந்தே நயன்தாரா சந்திக்கவேண்டியது இருக்கும். அதற்குக் காரணம், மூக்குத்தி அம்மன் படத்தின் கதை. பக்தித் திரைப்படமாக இருந்தாலும், பக்தியின் பெயரால் நாட்டில் நடக்கும் அத்தனை பிரச்சினைகளைப் பற்றியும் படம் பேசுகிறது. நேரடியாக கடவுள்களைக் கிண்டலடிக்கவில்லை என்றாலும் கடவுளின் பெயரால், தன்னையே முன்னிருத்தும் பலருக்கும் இந்தப்படம் அதிருப்தியைக் கொடுக்கும்” என்று கூறுகின்றனர் படக்குழுவினர்.
கடவுளின் பெயரைச் சொல்லிக்கொண்டு அமைப்புகளை நடத்தும் பலரையும் தமிழ் சினிமாவில் அதிகமுறை கிண்டலடித்துவிட்டனர். ஆனாலும், அவற்றை கண்டுகொள்ளாமல் தங்களது பாதையில் பயணித்துக்கொண்டே தான் இருக்கின்றனர். இதில் என்ன சுவாரசியம் இருந்துவிடப்போகிறது என்று கேட்கும்போது, சீரியஸான பல பிரச்சினைகளையும் கூட இந்தப்படத்தில் விட்டுவைக்கவில்லை என்கின்றனர். உதாரணம் சொல்லுங்கள் எனும்போது “ஆண்கள் மட்டும் செல்வதால் பல பிரச்சினைகளை சந்தித்த சபரிமலை சர்ச்சை இந்தப் படத்தின் முக்கிய கரு. சபரிமலைக்கு ஆண்கள் மட்டுமே செல்லவேண்டும் என்பதுபோல, பெண்கள் மட்டுமே செல்லக்கூடிய கோவிலாக படத்தில் மூக்குத்தி அம்மன் கோவில் வருகிறது” என்கின்றனர்.
“சபரிமலை சர்ச்சையில், கேரளாவில் ஆளுங்கட்சியாக இருக்கும் பினராயி விஜயனின் கம்யூனிஸ்டு கட்சியின் உத்தரவுகளுக்கு எதிராகவே செயல்பட்டு வந்தது அங்கிருக்கும் பா.ஜ.க. அதனை முழு மனதுடன் தமிழக பா.ஜ.க-வும் ஆதரித்தது. எனவே, சபரிமலை சர்ச்சையை ஒட்டி மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் வசனங்களும் காட்சிகளும் இடம்பெற்றால் அது சர்ச்சையை உண்டாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. படத்தின் புரமோஷனுக்கும் இது உதவும் என்று சீரியஸான மேட்டரையும் வேடிக்கையாகவே நாங்கள் கடந்துவிட்டோம்” என்கின்றனர்.
அடுத்ததாக, திரைப்படத்துக்காக நயன்தாரா விரதங்கள் மேற்கொள்வதாக வெளியான தகவல் குறித்து விசாரித்தபோது “நயன்தாரா ஆரம்பத்தில் கொஞ்சம் விளையாட்டுத்தனமாகவே இருந்தார். அது இந்தப்படத்தின் கதையின் தன்மை அப்படி என்பதால். ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் நடைபெற்ற ஒரு சம்பவத்துக்குப் பிறகு மிகவும் ஸ்டிரிக்டாக மாறிவிட்டார் நயன்தாரா” என்கின்றனர். அப்படி என்ன நடந்தது என்று கேட்கும்போது விவரிக்கத் தொடங்கினார்கள்.
“நயன்தாராவும் மற்ற எல்லா நடிகைகளைப் போலவும் ஷூட்டிங் ஸ்பாட்டின் எல்லா இடங்களிலுமே செருப்பு அணிந்துகொண்டே தான் செல்வார். அவர் மறந்தாலும், செருப்பு அணிந்துகொள்ளும்படி மற்றவர்கள் நியாபகப்படுத்துவார்கள். இதற்குக் காரணம், பலவிதமான பொருட்களை அங்குமிங்கும் எடுத்துச் செல்லும் ஸ்பாட்டில் எப்போது வேண்டுமானாலும் அவரது பாதங்களில் ஆணிகளோ அல்லது ஏதாவது உடைந்த பொருட்களோ ஏறிவிடலாம். திரைப்படத்தில் அதிகம் செலவு செய்யப்பட்டது நயன்தாராவின் சம்பளம் தான். ஒரு நாள் கால்ஷீட் போனாலும் மிகப்பெரிய பணவிரயம் ஏற்படும் என்பதால் இந்த கவனிப்பு எப்போதும் இருக்கும். எனவே, அன்றொருநாள் எப்போதும் போல செருப்பு அணிந்துகொண்டே ஸ்பாட்டுக்குள் வந்தார் நயன்தாரா. அன்று ஷூட்டிங் நடைபெற்றது ஒரு கோவிலுக்குள். செருப்பு அணிந்துகொண்டே கோவிலுக்குள் செல்லும் நயன்தாராவைப் பார்த்த அந்தப்பகுதி மக்கள், ‘ஏன்மா நீ மட்டும் செருப்பு போட்டுக்கிட்டு கோவிலுக்குள்ள போறியே’ என்று குரல் கொடுத்தனர். குரல் வந்த திசை நோக்கித் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடந்த நயன்தாரா, திடீரென கால் தடுக்கி கீழே விழுந்திருக்கிறார். ஸ்பாட்டில் இருந்தவர்கள் உடனே வந்து அவருக்கு உதவினாலும் மனம் கேட்காத நயன்தாரா ஒரு நாள் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குச் சென்றுவிட்டார். அவரை சமாதானப்படுத்த படக்குழுவினர் எவ்வளவோ முயன்றாலும், என்ன இருந்தாலும் நான் அப்படி செய்திருக்கக்கூடாது என்று வருத்தப்பட்ட நயன்தாரா அதன்பிறகு ஸ்பாட்டுக்குள் வரும்போதும், அம்மன் வேடத்துக்கு மாறும்போதும் செருப்பு அணிவதையே தவிர்த்துவிட்டார்” என்று எத்தனை ஈடுபாட்டுடன் நயன்தாரா இந்தப்படத்தில் நடிக்கிறார் என்று விளக்குகின்றனர்.
மொத்தத்தில் வடக்கே பாபா ஆசாராம் முதல் தெற்கே நித்தியானந்தா வரை ஒருவரையும் படத்தில் விட்டுவைக்கவில்லை. டிரெய்லர் வரும் பாருங்க நெருப்பு மாதிரி என்கின்றனர் மகிழ்ச்சி கொப்பளிக்க. மூக்குத்தி அம்மன் உருவாக்கப்போகும் நெருப்பு படத்தை ஊரெல்லாம் கொண்டுசெல்லப் போகிறதா அல்லது சர்ச்சை நெருப்புகளை உருவாக்கப்போகிறதா என்று பார்க்கக் காத்திருப்போம்.