கோட்சேவை தேசபக்தர் என அழைத்த பிரக்யா சிங் தாகூருக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். மக்களவையில் நேற்று எஸ்பிஜி பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா தொடர்பான விவாதத்தில் திமுக எம்.பி, ஆ.ராசா, காந்தியைக் கொன்ற கோட்சேவின் வாக்குமூலம் குறித்து பேசிக்கொண்டிருந்தபோது குறுக்கிட்ட பாஜக எம்.பி பிரக்யா சிங் தாகூர், “தேசபக்தரான கோட்சே குறித்த உதாரணம் எதையும் இங்கு கூற வேண்டாம்” எனத் தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஏஎன்ஐ ஊடகத்திற்கு பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா அளித்த பேட்டியில், “மக்களவையில் கோட்சேவை தேசபக்தர் என பிரக்யா தாகூர் கூறியது கடும் கண்டனத்திற்குரியது. இதுபோன்ற பேச்சுக்களையோ அல்லது சித்தாந்தங்களை பாஜக ஒருபோதும் ஏற்காது. பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவிலிருந்து பிரக்யா தாகூர் நீக்கப்படுவார். இந்த அமர்வின் நாடாளுமன்றக் கூட்டங்களில் அவர் அனுமதிக்கப்பட மாட்டார்” என்று குறிப்பிட்டார். இதுதொடர்பான பிரச்சினையை மக்களவையில் இன்று (நவம்பர் 28) எழுப்பிய காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “காங்கிரஸை பயங்கரவாத கட்சி என்று பிரக்யா தாகூர் அழைத்தார். காங்கிரஸின் ஆயிரக்கணக்கான தலைவர்கள், நாட்டின் சுதந்திரத்திற்காக பல தியாகங்களை செய்தவர்கள். தற்போது என்ன நடக்கிறது? மகாத்மா காந்தியை கொன்றவரை தேசபக்தர் என்று அழைக்கிறார். இதுகுறித்தும் இந்த அவை மவுனமாக இருக்குமா?” என்று கடுமையாக சாடினார். உடனே மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, “பிரக்யா சிங் தாகூர் பேசியது அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. அவைக்குறிப்பில் இல்லாத விவகாரம் குறித்து எவ்வாறு விவாதம் நடத்துவது” எனக் கேள்வி எழுப்பினார். காங்கிரஸின் கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என யாராவது கருதினால் அதனை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. மகாத்மா காந்தி எங்களின் அடையாளம். எங்களுக்கு வழிகாட்டும் வெளிச்சமாக அவர் இருந்தார். அப்படியே இருப்பார்” என்று கூறினார். எனினும் பிரக்யா தாகூரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். ராகுல் பதில் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம், ‘கோட்சே தேசபக்தர்’ சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. “பிரக்யா தாகூருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை” என்று தெரிவித்துவிட்டு அவர் புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில், “தீவிரவாதி பிரக்யா சிங், தீவிரவாதியான கோட்சேவை தேசபக்தர் என அழைக்கிறார். இது இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் துக்கமான தினம்” என்று தெரிவித்துள்ளார். அகில இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி, பிரக்யா தாகூர் இவ்வாறு பேசுவது இது முதல் முறையல்ல என்றும், அவருக்கு எதிராக அவை உரிமை மீறல் பிரச்சினையை எழுப்பவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.