1. home
  2. > Minnambalam
  3. > ஓஎம்ஜி சுனில் விலகல்: ஸ்டாலினைச் சுற்றி என்ன நடக்கிறது?
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

ஓஎம்ஜி சுனில் விலகல்: ஸ்டாலினைச் சுற்றி என்ன நடக்கிறது?

Nov 27, 2019 19:51 IST

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு செயல் திட்ட வகுப்பாளராக செயல்பட்ட ’ஓஎம்ஜி’ (ஒன் மேன் குரூப்- என்றும் ஓ மை காட்’ என்றும் திமுக வட்டாரங்களில் அழைக்கப்படுகிறது) சுனில் நேற்று (நவம்பர் 26) முதல் ஸ்டாலினிடமிருந்து விலகிவிட்டார். திமுக நிர்வாகிகள் வட்டாரத்திலும், குடும்ப வட்டாரத்திலும் இதுவே தலைமையான பரபரப்புச் செய்தி. 2016 சட்டமன்றத் தேர்தலுக்கான முழு பொறுப்பையும் தானே ஏற்றுக் கொண்ட ஸ்டாலின் இதற்காக பிடித்த வியூக வகுப்பாளர்தான் சுனில். மாவட்டச் செயலாளர்களை விட ஸ்டாலின் அதிகம் ஆலோசிப்பது சுனிலிடம்தான். சுனில் ஆலோசனைப்படிதான் வெள்ளை வேட்டி சட்டை என்ற வழக்கமான உடையைத் தவிர்த்து நவீன ஷூ, கலர் கலர் சட்டைகள், சைக்கிள் பயணம், பைக் பயணம் என்று தமிழகம் முழுக்க நமக்கு நாமே பயணம் வந்தார் ஸ்டாலின். அறிவாலயத்தில் ஸ்டாலினுடைய அறையில் நடந்த கட்டமைப்பு மாற்றங்களில் தொடங்கி, ஸ்டாலினின் விரலில் மாறிய மோதிரம் வரை அனைத்துக்கும் சுனிலே காரணம் என்கிறார்கள் அறிவாலய ஊழியர்கள். நமக்கு நாமே பயணத்தை கலர் கலராய் ஃபிலிம் காட்டுகிறார் ஸ்டாலின் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தாலும், கட்சிக்குள் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் ஸ்டாலின். 2016 தேர்தலில் தோற்றதும் சுனில் மீதான விமர்சனங்கள் தலைமைக் கழக நிர்வாகிகள் வட்டாரத்தில் அதிகமாயின. ‘ஸ்டாலினை சுற்றி இரும்புச் சுவர் அமைத்திருக்கிறார்’ என்பது அதில் முக்கியமான புகார். ஆனாலும் ஸ்டாலின் தினமும் சந்தித்து ஆலோசிக்கும் நபராக இருந்தார் சுனில். தேர்தல் பிரசாரம், ஸ்டாலின் பயணம் மட்டுமல்ல, வேட்பாளர் தேர்வு வரைக்கும் சுனிலின் கரங்கள் நீண்டதால் அவரை மாசெக்கள் சிலர் கொஞ்சம் நெருடலோடுதான் பார்த்தனர். 2019 எம்.பி. தேர்தலில் சுனில் அமைத்துக் கொடுத்த தேர்தல் கள வியூகம் வெற்றியளித்தது. அண்மையில் நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு வன்னியர்களுக்கு ஆதரவாக ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டார் ஸ்டாலின். வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு, இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் பலியான வன்னியர்களுக்கு மணிமண்டபம் என்ற ஸ்டாலினுடைய அறிவிப்புதான், தேர்தல் களத்தையே திமுக வுக்கு பாதகமாக மாற்றிவிட்டது என்று பின்னாட்களில் கூட்டணிக் கட்சித் தலைவரான திருமாவளவனே கூறினார். இந்த அறிக்கைக்குப் பின்னால் இருந்தவரும் சுனில்தான். பாமகவை வீழ்த்தலாம் என்று சுனில் நகர்த்திய காய், பாமகவை பலப்படுத்தியதோடு திமுகவுக்கு எதிராக பஞ்சமி நிலம் வரை இறங்கியடிக்கும் துணிச்சலையும் கொடுத்துவிட்டது. இதன் பிறகு சபரீசன், உதயநிதி ஆகியோர் ஸ்டாலினிடம், “எடப்பாடி பிரசாந்த் கிஷோரோடு ஒப்பந்தம் போடும் முயற்சியில் இருக்கிறார். ஒருவேளை அது நடந்துவிட்டால் நாம் நம்முடைய ஸ்டேட்டர்ஜியில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இன்னும் ஒரு நல்ல டீமை அமர்த்துவோம். அவர்களோடு சுனில் இணைந்திருக்கட்டும்” என்று கூறியிருக்கிறார்கள். இதை ஏற்ற ஸ்டாலின் சுனிலிடம் இதை தெரியப்படுத்தியிருக்கிறார். ஆனால் சில மாதங்களாகவே ஏதோ வருத்தத்தில் இருந்த சுனிலோ, “இதுபோன்ற விஷயங்களில் இன்னொரு டீமுடன் இணைந்து பயணிப்பதில் எனக்கு விருப்பமில்லை. அது சரியாகவும் வராது. எனவே நான் விலகிக் கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டார் . இப்போது ஹைதராபாத்தில் இருக்கும் சுனில், இதுபற்றி இப்போதைக்கு யாரிடமும் வெளிப்படையாய் பேசத் தயாராக இல்லை.