உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இந்திய குடியரசுக் கட்சித் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செ.கு. தமிழரசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கால், தேர்தல் நடக்குமா என்ற கேள்விக்கு இன்னும் வலிமை கூடியிருக்கிறது. செ.கு.தமிழரசன் நேற்று (நவம்பர் 26) சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் 15 மாநகராட்சிகள், 33 மாவட்ட ஊராட்சி, 152 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள் உள்பட 13,870 பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு நிலைக்குழுக்களும் உள்ளன. ஆனால், இவற்றில் பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை. துணை மேயர், துணைத் தலைவர் பதவிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டால், நான்கு மாநகராட்சிகளில் துணை மேயர், 46 நகராட்சிகளில் துணைத் தலைவர், 168 பேரூராட்சிகளில் துணைத் தலைவர்கள், மாவட்ட பஞ்சாயத்தில் ஒரு துணைத் தலைவர், 3,786 கிராம பஞ்சாயத்து துணைத் தலைவர் பதவிகள் பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களுக்கு கிடைக்கும். எனினும் துணைமேயர், துணைத் தலைவர் பதவிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரி அரசுக்கு மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ள செ.கு.தமிழரசன், ”உள்ளாட்சி அமைப்புகளின் துணை மேயர், துணைத் தலைவர் பதவிகளில் இடஒதுக்கீடு வழங்கும் வரை உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இதனையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் செயலாளர், மாநிலத் தேர்தல் ஆணையம் ஆகியோர் ஜனவரி 7க்குள் பதில் அளிக்க வேண்டுமென உத்தரவிட்டனர். இந்த வழக்கைத் தொடுத்த செ.கு. தமிழரசனிடமே மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி சார்பாக பேசினோம். “இந்த விவகாரத்தில் இப்போது முடிவெடுக்க வேண்டியது முதல்வர்தான். அவர் உச்ச நீதிமன்றத்துக்கு உத்தரவாதம் கொடுத்த மாதிரி தேர்தலை நடத்துவேன் என்று முடிவெடுத்தால், நானும் உச்ச நீதிமன்றம் செல்லத்தான் வேண்டும். அரசு என்ன வினையாற்றுகிறதோ அதைப் பொறுத்தே என் வினையும் இருக்கும். என் கோரிக்கை நியாயமானது, சட்டபூர்வமானது. இவ்வளவு நாள் இதைக்கொடுக்காமல் இருந்ததே தவறு பக்கத்தில் ஆந்திராவில் இருக்கிறது, கர்நாடகாவில் இருக்கிறது, மகாராஷ்டிர, பஞ்சாப்,ஒடிசா, உத்திரப்பிரதேசம் என்று பல மாநிலங்களில் இது நடைமுறையில் இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் இட ஒதுக்கீடு வழங்காதது அரசியல் சாசனத்தின் அடிப்படை நோக்கத்தையே கேள்விக்குரியதாக மாற்றியிருக்கிறது” என்றவரிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, “எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் செ.கு. தமிழரசன் இந்த வழக்கைத் தொடர்ந்திருப்பார்”என்று கூறியிருப்பது பற்றிக் கேட்டோம். “ஒரு சமூகத்தின் சட்ட ரீதியான கோரிக்கையை ஆதிக்க உணர்வோடு கொச்சைப்படுத்துகிறார் அழகிரி. முதலில் இந்தக் கோரிக்கையை அவர் ஏற்றுக் கொள்கிறாரா இல்லையா என்பதை அறிவிக்கச் சொல்லுங்கள். காங்கிரஸ் கமிட்டியின் எஸ்சி எஸ்டி பிரிவு இதை ஏற்கிறதா இல்லையா என்று கேட்கச் சொல்லுங்கள். அவர் இந்தக் கருத்தைத் திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.