குழந்தை சுஜித்: மீண்டும் மீண்டும் பொய் சொல்லும் அரசு! | Editorji
  1. home
  2. > Minnambalam
  3. > குழந்தை சுஜித்: மீண்டும் மீண்டும் பொய் சொல்லும் அரசு!
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

குழந்தை சுஜித்: மீண்டும் மீண்டும் பொய் சொல்லும் அரசு!

Oct 31, 2019 19:43 IST

கடேசியா முகம் பாக்குறவங்க பாத்துக்கங்கப்பா...’ -ஒவ்வொரு இறப்பிலும் இறுதி நிகழ்ச்சியின்போது உச்சரிக்கப்படும் வார்த்தைகள் இவை. தாமதமாக வருகிறவர்கள் தவறவிடக் கூடாது என்பதால் உடலையெல்லாம் மூடினாலும் கடைசியில் முகத்தை மட்டும் மூடாமல் வைத்திருந்து கடைசி கணப்பொழுதிலேயே மூடுவார்கள். இது இறந்துபோனவருக்குக் கொடுக்கப்படும் கௌரவம். பல நூறு கிலோ மீட்டர்கள் தாண்டி ஓடோடி வந்தவர்களுக்கு அந்த ஆறுதலாவது இருக்கட்டுமே என்பதற்கான ஆதாரமே இந்த முகம் காட்டுதல்தான். நடுக்காட்டுப்பட்டி சுஜித் 25 ஆம் தேதி மாலை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிட்டான் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு, தமிழகத்தின் ஒவ்வொரு பெற்றோரும் சுஜித்தை தங்களின் பிள்ளையாகவே வரிக்கத் தொடங்கினார்கள். ஐயோ பிள்ளைக்கு என்னாச்சோ, ஐயோ கடவுளே சீக்கிரம் உயிரோடு மீட்டுக் கொடு என்று சமூக வலை தளங்கள் மட்டுமல்ல, தமிழகத்தின் தெருமுனைகள், டீக்கடைகள், பெண்கள் கூடுமிடங்கள், ஆண்கள் கூடுமிடங்கள், ஏன் குழந்தைகள் கூட பேசிக் கொள்ளும் ஒற்றை வார்த்தை சுஜித்தாகவே இருந்தது கடந்த வாரம் முழுதும். தமிழகத்தின் பிள்ளை சுஜித் ஒவ்வொரு நாளும், இரவும் அனைத்து செய்தி ஊடகங்களும் சுஜித்தைப் பற்றியே பேசின. ஆனால் நான்காம் நாள் ஊடகங்கள் ஏன் மௌனித்தன? சுஜித்தை தனது பிள்ளையாக நினைத்த, பேரனாக நினைத்த, தம்பியாக நினைத்த எத்தனை எத்தனையோ மக்களுக்கு இந்த சுஜித் பற்றிய சந்தேகம் எழுந்ததா இல்லையா? ”சுஜித் நூறு அடிக்கும் கீழ் ஆழத்துக்குச் சென்றுவிட்டதால் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. அவரது உடலையும் முழுமையாக மீட்கமுடியவில்லை. டி கம்போஸ் ஆகிவிட்டது. முடிந்தவரை முயற்சி செய்தோம்,. முடியவில்லை” என்று அறிவிப்பதில் அரசுக்கு என்ன தயக்கம் இருக்க வேண்டும்? அக்டோபர் 28 ஆம் தேதி நள்ளிரவு தொடங்கி, அதிகாலை வரை ஆலோசித்து ஊடகங்களை இரண்டு மணி நேரம் கேமராக்களை ஆஃப் செய்யச் சொல்லிவிட்டு, மீட்பு நடவடிக்கையில் இரண்டு மணி நேரத்தை இருட்டில் தள்ள அரசுக்கு அப்படி என்ன நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது? வேக்குவம் க்ளீனரை அந்த ஆழ்துளைக் கிணற்றுக்குள் செலுத்தி அதன் மூலம் கிடைத்த சிற்சில உடல் பாகங்களை மட்டுமே சவப்பெட்டியில் வைக்கப்பட்டதாக நடுக்காட்டுப் பட்டி மக்கள் சொல்கிறார்கள். ஆனால் அரசோ வேறு மாதிரி வார்த்தைகளில் இதை சித்திரிக்கிறது. டெக்னிகல் வார்த்தைகளில் ஓளிந்தாலும் உண்மையை கசிய விட்ட ராதாகிருஷ்ணன் இதையெல்லாம் கேட்டால் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கும்பகோணம் சம்பவத்தை எடுத்து வருகிறார். ஸ்டேண்டர்டு ஆபரேடிங் புரொசீஜர் என்றும் போஸ்ட் ஈவன்ட் அனாலிசிஸ், மேனேஜ்மெண்ட் ஆஃப் டெட் போன்ற டெக்னிகல் வார்த்தைகளில் ஒளிந்துகொள்கிறார். ஆனால் அதேநேரம் அக்டோபர் 30 ஆம் தேதி சென்னை எழிலகத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ராதாகிருஷ்ணன் தன் இயல்பான ஆங்கிலத்தில் உண்மையை எடுத்துச் சொல்லிவிட்டார். ”டிஸ்மெம்பர்டு பாடியாக இருக்கும்போது அதில் அனைத்து பார்ட்டும் இருக்கா இல்லையா என்ற அனாலிசிஸ் பண்ணாம அதற்குரிய மரியாதையோடு ரிலிஜியஸ் மரியாதையோடு நாம பண்ணிட்டோம். அதுக்கும் மேல இதை கும்பகோணம் சம்பவம் மாதிரி காமிச்சா கைடுலைன்களை மீறியதாக கோர்ட் கேள்வி கேட்கும்” என்று சுற்றி வளைத்து உண்மையைத் தொட்டுச் சொல்லியிருக்கிறார் ராதாகிருஷ்ணன். ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணன் எப்போதுமே வெளிப்படையான, பிரஸ் ஃப்ரண்ட்லி என்று சொல்லப்படும் அதிகாரி. அவருக்கே இப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான நிலைமையை உண்டாக்கிவிட்டது அரசின் செயல்பாடுகள். ஆக, சுஜித்தின் உடல் டிஸ்மெம்பர்டு பாடி என்ற உண்மையை சொல்வதுதான் சுஜித்துக்கும், அவரது ரத்த சம்பந்தமுள்ள குடும்பத்துக்கும், சுஜித்துக்காக மனமிரங்கிய கோடானுகோடி மக்களுக்கும் அரசு நியாயம் செய்த மாதிரி இருக்கும். ஆனால் அதை ஏன் அரசு மூடி மறைக்க வேண்டும் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. இந்த நேரத்தில், ‘இயந்திரத்தை வைத்து அரசு இனியும் ஏமாற்றக் கூடாது’ என்று மீட்புப் பணிகளுக்கு இடையே ஓப்பனாக சொன்ன கரூர் எம்.பி. ஜோதிமணியின் வார்த்தைகளையும் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. சுஜித் குடும்பத்துக்கு முதல்வர் தரும் நெருக்கடி! இன்று (அக்டோபர் 31) சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. அவர் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கேட்பதாக ஸ்டாலினை விமர்சித்தார். இந்தப் பேட்டியில் ஸ்டாலினை விமர்சிக்கும்போதெல்லாம் உறுதியான குரலில் சரளமாக உறுதியாகப் பேசினார் முதல்வர். ஆனால், உடலைக் காட்டவில்லை என்று சர்ச்சை எழுந்துள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்தபோது ஊடகத்தினரிடம் சற்றே நீக்குபோக்கோடுதான் பேசினார். “நீங்கதான் 24 மணி நேரமும் அங்கயே இருக்கீங்க. நீங்களும், அரசு அதிகாரிகளும் சொல்றதை வச்சிதான் நாங்க பேசறோம்” என்று அதிகாரிகள் குரலையே தான் பிரதிபலிப்பதாக ஒப்புக்கொள்கிறார் முதல்வர். பின், “ பெற்றோர்களே ஒத்துக்கிட்டாங்க. கண்முன்னாடி வந்தான்னு சொல்றாங்க” என்ற முதல்வர் சொல்லும்போது வார்த்தைகளில் லேசான ஒரு குழப்பம் தெரிந்தது. ‘மீண்டும் மீண்டும் இப்படி கிளப்பிவிட்டு குழப்பம் வேண்டாம். ஒரு முற்றுப் புள்ளி வைங்க’ என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் முதல்வர். அதிகாரிகள் சொன்னதை சொல்வதாக கூறும் முதல்வர், பிறகு குழந்தையின் பெற்றோரே அந்த குழந்தையின் உடலை பார்த்ததாக தன்னிடம் சொன்னதாகக் கூறுகிறார். இதன் மூலம் அந்தக் குடும்பத்துக்கு ஒரு தார்மீக ரீதியான நெருக்கடியை முதல்வர் கொடுக்கிறாரோ என்றும் கேள்விகள் எழுகின்றன. உள்ளாட்சித் தேர்தலுக்காக அரசு மறைக்கிறதா? மீட்புப் பணியை பற்றி யாரும் கேள்வி கேட்கவில்லை. அரசாங்கத்தின் துடிப்பான பணிகளை யாரும் குறை கூறவில்லை. விஜயபாஸ்கர் ராவெல்லாம் வேட்டியின் ஒரு நுனியெடுத்து முகம் துடைத்துக் கொண்டு திண்ணையில் அமர்ந்திருந்தை யாரும் குறை கூறவே இல்லை. ஆனால் இவ்வளவு செய்த அரசாங்கம், சுஜித்துக்கு நியாயம் செய்திருக்க வேண்டும் என்றால், ‘சுஜித்தின் உடலை மீட்க முடியவில்லை. இயற்கையோடு போராடி இயந்திரங்கள் மூலம் வெல்ல முடியவில்லை’ என்ற உண்மையையாவது சொல்லியிருக்க வேண்டாமா? அதை விட்டுவிட்டு குழிக்குள் ஷெட்டை போட்டு மூடி இரண்டு மணி நேரம் கேமராக்களை கண்மூடச் செய்து, அந்தக் குடும்பத்தினரை நெருக்கடிக்கு உள்ளாக்கி தன் மகனின் உடலை பெற்றோர் பார்த்ததாக தன்னிடம் சொன்னார்கள் என்று முதல்வரே சொல்வதென்றால், இங்கே அரசுதான் அரசியல் செய்கிறது என்று பொருளாகிறது. ஒரு குழந்தையின் உடலைக் கூட மீட்க முடியவில்லையா என்ற குற்றச்சாட்டு இன்றைய நவீன ஊடகங்கள் மூலம் அரசுக்கு எதிராக முன் வைக்கப்படும்போது அதை உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் எதிர்கொள்வது மிகப் பெரிய சவாலாகிவிடும் என்று அரசு நினைத்து கடைசி நேர உண்மையை மட்டும் மக்களிடம் இருந்து மறைக்கிறது. அதிகாலையில் கைப்பற்றப்பட்ட உடலைக் காட்டும்படி யாரும் அரசிடம் கோரவில்லை. அதைக் காட்டுவது ஊடக நெறிமுறைகளுக்கோ, சமூக தள வரன்முறைகளுக்கோ உகந்தது அல்ல என்பது யாவருக்கும் தெரியும். அதேநேரம் அதுபற்றிய உண்மைகளை சொல்லாமல் மறைப்பதைதான் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. திமுக குடும்பமும் நன்றி அரசியலும் சுஜித்தின் குடும்பமே திமுகவைச் சேர்ந்த குடும்பம் என்றும் அவர்கள் வீட்டில் ஸ்டாலின் படம் போட்ட காலண்டர்தான் இருக்கிறது. அதேநேரம் மீட்புப் பணியெல்லாம் முடிந்துபோன நிலையில், அந்தப் பெற்றோர் எல்லாருக்கும் நன்றி என்று அறிவிக்கிறார்கள். அதில் முதல்வர், துணைமுதல்வர், மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி என்று சொல்கிறார்களே தவிர, நேரில் வந்து ஆறுதல் சொல்லி பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி செய்த திமுக தலைவர் ஸ்டாலின் பெயரை அவர்களால் பகிரங்கமாக குறிப்பிட முடியவில்லை. இதுவே ஒரு அரசியல்தானே. முதல்வர் வார்த்தையைப் பொய்யாக்கிய சுஜித் பெற்றோர்! தங்கள் மகனின் உடலை பார்த்ததாக தன்னிடம் பெற்றோர் கூறினார்கள் என்று ஓமலூரில் பேட்டியளித்த முதல்வர் கூறுகிறார். ஆனால், நடுக்காட்டுப் பட்டியில் சுஜித்தின் உடலை சவப்பெட்டியில் வைத்து எடுத்துக் கொண்டு போய் நல்லடக்கம் செய்துவிட்ட பின்னர்... அந்த சிறுவனின் பெற்றோர் அரக்க பறக்க தங்கள் மகனைக் காவு வாங்கிய, அப்போது மூடப்பட்டுவிட்ட அந்த ஆழ்துளைக் கிணற்றின் மேல் வந்து நிற்கிறார்கள். ஒரு பெரிய மாலையை வைத்து அங்கேயே அமர்ந்து கதறி அழுகிறார்கள். தங்கள் மகனின் உடலை அவர்கள் பார்த்திருந்தால், அமைச்சர்களும், அதிகாரிகளும் அஞ்சலி செலுத்திய அந்த சவப்பெட்டி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில்தானே பெற்றோர்கள் கதறியிருக்க வேண்டும்? ஆனால் எல்லாம் முடிந்தபின் ஏன் அந்த ஆழ்துளைக் கிணற்றின் மீது மாலையிட்டுக் கதறுகிறார்கள்? அவர்களின் கண்ணீரை யாரும் அரசியலாக்க முடியாது. அரசியலாக்கக் கூடாது. ஆனால் தங்கள் சொந்த மகனின் உடல் புதையுண்ட இடத்தில் பூப்போட்டு அழக் கூட, அமைச்சர்கள், அதிகாரிகள் எல்லாம் போகட்டும் என்று காத்திருந்து பிறகு அங்கே போய் கதறுகிறார்களே? இந்த புகைப்படத்துக்கு என்ன பதில் சொல்லப் போகிறது இந்த அரசு?