சுஜித்தின் உடல் பாதிதான் மீட்கப்பட்டதா? ராதாகிருஷ்ணன் | Editorji
  1. home
  2. > Minnambalam
  3. > சுஜித்தின் உடல் பாதிதான் மீட்கப்பட்டதா? ராதாகிருஷ்ணன்
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

சுஜித்தின் உடல் பாதிதான் மீட்கப்பட்டதா? ராதாகிருஷ்ணன்

Oct 31, 2019 15:30 IST

குழந்தை சுஜித்தின் உடல் மீட்கப்பட்டது எப்படி என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தை மீட்க 4 நாட்களாக எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. நேற்று அதிகாலை 4.30 மணியளவில் சுஜித்தின் உடல் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. அதன்பிறகு பிரேத பரிசோதனை முடிந்த சற்று நேரத்திலேயே சுஜித்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால், சுஜித்தின் உடல் முழுமையாக மீட்கப்படவில்லை என்றும், கைகளும் குறிப்பிட்ட பகுதியும் மட்டுமே மீட்கப்பட்டிருப்பதாகவும் ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. மேலும், குழந்தையின் உடலை யாருக்கும் காட்டாமல் துணியால் மூடி எடுத்துச் சென்றது ஏன் எனவும் பலரும் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் சென்னையில் எழிலகத்தில் இன்று (அக்டோபர் 30) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் குழந்தை சுஜித்தின் உடல் முழுவதுமாக மீட்கப்படவில்லை, பாதிதான் மீட்கப்பட்டுள்ளது என்று சமூக வலைதளங்களில் வெளியான தகவல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “சுஜித் மீட்பு பணிகளில் முழுமையாக ஈடுபட்டும் விமர்சனங்களை எதிர்கொள்வது மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்களை கவலையடையச் செய்துள்ளது. ஸ்டேண்டிங் ஆபரேஷன் நடவடிக்கையை தீவிரமாக கடைபிடித்தோம். தேசிய பேரிடர் மீட்புக் குழு உள்ளிட்ட அனைத்து தரப்பும் அங்கு இருந்தோம். அதுபோலவே, பேரிடர் மீட்புக் குழுவின் வழிகாட்டு முறையை பின்பற்றிதான் குழந்தையின் உடலை மீட்டோம். சுஜித் துரதிருஷ்டவசமாக இறந்துவிட்டான். அந்த வேதனை அனைவருக்கும் உள்ளது” என்று தெரிவித்தார். குழந்தையின் உடலை யாருக்கும் காட்டவில்லையே என்ற கேள்விக்கு, “ஏற்கனவே கும்பகோணம் தீ விபத்தின்போது குழந்தைகளின் உடலை புகைப்படமாக காட்சிப் படுத்தியதால் உலகம் முழுவதிலும் இருந்து விமர்சனங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. அதன்பிறகு இறந்த உடலை மீட்பது தொடர்பாக மத்திய அரசு ஒரு வழிகாட்டுதல் முறையை கொண்டுவந்தது. போரில் இறந்த வீரர்கள் உள்பட யாராக இருந்தாலும் சிதைந்த நிலையில் இருக்கும் சடலத்தை மீட்பதற்கென வழிகாட்டுமுறை உள்ளது. உடலின் அனைத்து பாகங்களும் இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை ஆய்வு செய்யாமல், அதற்கென உரிய மரியாதையை அளித்துதான் உடலை அடக்கம் செய்தோம். குழந்தையின் உடலில் குறிப்பிட்ட பாகம் கிடைத்தது என்று குறிப்பிட்டால் நீதிமன்றம் எங்களை கேள்விக்குள்ளாக்கும்” என்று பதிலளித்த ராதாகிருஷ்ணன், “ஒவ்வொரு நொடியிலும் என்ன நடந்தது என்பதை சுஜித்தின் பெற்றோரிடம் தெளிவாக சொல்லியுள்ளோம். இந்த விஷயத்தில் ஆழமாக சென்றால் அது மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு எதிராக இருக்கும்” என்றும் தெரிவித்தார். மேலும், “குழந்தை மீட்புப் பணியில் இந்தியாவிலுள்ள அனைத்து தொழில்நுட்பங்களையும் நாங்கள் பயன்படுத்தினோம். பல கோடி ரூபாய் செலவு செய்தோம் என வாட்ஸ் ஆப்பில் வரும் தகவல் வெறும் வதந்திதான். மனித சக்திகளால் எந்தெந்த முயற்சிகளை மேற்கொள்ள முடியுமோ அவை அத்தனையையும் மேற்கொண்டோம்” என்றும் அவர் விளக்கம் அளித்தார்.