டிஜிட்டல் திண்ணை: துரைமுருகன்-பாஜக தலைவர்கள் ரகசிய சந்திப்பு! உதவிய ஓப | Editorji
  1. home
  2. > Minnambalam
  3. > டிஜிட்டல் திண்ணை: துரைமுருகன்-பாஜக தலைவர்கள் ரகசிய சந்திப்பு! உதவிய ஓப
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

டிஜிட்டல் திண்ணை: துரைமுருகன்-பாஜக தலைவர்கள் ரகசிய சந்திப்பு! உதவிய ஓப

Oct 31, 2019 15:05 IST

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டது. வாட்ஸ்அப் ஆன் லைனில் இருந்தது. லொகேஷன் டெல்லி காட்டியது. “திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் திமுக பொருளாளர் துரைமுருகனுக்கும் அவ்வப்போது ஊடல்கள் வருவதும் பின்பு அந்த ஊடல்கள் உடைந்து போவதும் வழக்கமான ஒன்றுதான். அறிவாலய வட்டாரத்தில் துரைமுருகனுக்கும் ஸ்டாலினுக்குமான சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் பற்றி பல்வேறு விவாதங்கள் வந்து போகும். அந்த வகையில் இப்போது பேசப்படும் விஷயம் கொஞ்சம் பெரிதாகத்தான் இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு அறிவாலயம் சென்ற துரைமுருகன் திமுக தலைவர் ஸ்டாலினிடம், ‘தம்பி உடம்பு கொஞ்சம் படுத்துது. ஒரு வாரம் நல்லா ஓய்வு எடுக்கலாம்னு இருக்கேன். லீவு வேணும்’ என்று தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாகக் கேட்டிருக்கிறார். இதைக் கேட்டதும் ஸ்டாலின், ‘ஏன் அப்படி கேக்கறீங்க. உடம்ப பாத்துக்கங்க. ஊருக்கு போறீங்களா? ஊர்ல போய் நல்லா ரெஸ்ட் எடுங்க. மத்ததெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்’ என்று அக்கறையாக சொல்லியிருக்கிறார். அதன்பிறகு ஒரு வாரமாக அறிவாலயம் பக்கம் துரைமுருகன் வரவில்லை. ஸ்டாலினும் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அலைபேசி அழைப்பும் செய்வதில்லை. இதற்கிடையில்தான் டெல்லியிலிருந்து ஸ்டாலினுக்கு கிடைத்த தகவல்கள் கொஞ்சம் அதிர்ச்சி அளிக்கக் கூடியவையாக இருந்தன. உடல்நிலை சரியில்லை என்று லீவு போட்டுவிட்டு துரைமுருகன் போனது காட்பாடிக்கோ, வழக்கமாகச் செல்லும் தன் நண்பரின் நட்சத்திர ஹோட்டலுக்கோ அல்ல, அவர் சென்றது டெல்லிக்கு. அங்கே மத்திய பாஜக அரசுக்கு நெருக்கமான சில வட புலத்துப் பிரமுகர்களையும் ஆர்எஸ்எஸ் புள்ளிகளையும் துரைமுருகன் சந்தித்துப் பேசி இருக்கிறார் என்பதுதான் ஸ்டாலினுக்கு டெல்லியில் இருந்து கிடைத்த தகவல். வேலூர் தேர்தல் கடந்த பொதுத் தேர்தலோடு நடந்திருக்க வேண்டிய நிலையில் அங்கே பணம் பறிமுதல் செய்யப் பட்டதால் தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்து வைத்தது. தேர்தல் ரத்தாகி அதன் பிறகு மறு தேர்தல் நடந்து அதில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வெற்றி பெற்று எம்பி ஆகிவிட்டார். ஆனாலும் துரைமுருகனின் நண்பர் பூஞ்சோலை சீனிவாசன் என்பவர் சிமெண்ட் குடோனில் 10 கோடி ரூபாய் அளவுக்கு பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வழக்கில் இருந்து காப்பாற்றுமாறு நண்பர் தரப்பிலிருந்து அவருக்கு நெருக்கடி அதிகரித்துக் கொண்டுள்ளது. இந்த விஷயத்துக்காக தான் டெல்லி வரை சென்று துரைமுருகன் சில முயற்சிகளை செய்துள்ளார் என்று ஸ்டாலினுக்கு தெரியவந்துள்ளது துரைமுருகனின் இந்த டெல்லி லாபிகளுக்கு ஏற்பாடு செய்தவர் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் என்பதுதான், ஸ்டாலினை இதைவிட அதிக அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது. துரைமுருகனுக்கு ஓபிஎஸ் உதவி செய்தாரா என்று புருவங்களை உயர்த்தி இருக்கிறார் ஸ்டாலின். இதற்குப் பின்னாலும் ஒரு சின்ன பிளாஷ்பேக் இருக்கிறது. துரைமுருகன் தமிழக சட்ட அமைச்சராக இருந்தபோது முந்தைய அதிமுக ஆட்சியின் அமைச்சர்களின் சொத்து குவிப்பு வழக்குகள் தொடர்பாக முதல்வர் கலைஞருடன் ஆலோசனை செய்துள்ளார். அப்போது பல அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோப்புகள் தயாரான நிலையில் ஓ பன்னீர்செல்வம் மீதான சட்ட நடவடிக்கைகள் குறித்து பெரிதாக எந்த கவனமும் செலுத்தப்படவில்லை. இது தொடர்பாக பிற்பாடு சட்ட மன்ற வளாகங்களில் பிறகு சந்தித்துக் கொள்ளும்போது துரைமுருகன் பன்னீர்செல்வத்திடம் மனம் விட்டு பேசி இருக்கிறார். இந்த ரீதியில் துரைமுருகனை பன்னீர்செல்வத்துக்கு மிகவும் பிடிக்கும். அந்த வகையில்தான் துரைமுருகனுக்கு பன்னீர்செல்வம் இப்போது தன்னால் ஆன இந்த உதவியை செய்திருக்கிறார் என்கிறார்கள். இதையெல்லாம் கேள்விப்பட்டு ஸ்டாலின் மிகவும் வருத்தத்தில் இருக்கிறார். ’நம்ம கிட்ட சொல்லி இருந்தா நாம உதவி பண்ண மாட்டோமா? டெல்லி போய் இந்த விஷயத்திற்காக அதிகாரிகளை பாக்க போறேன்னு சொல்லிட்டு போகலாமே இப்படி செஞ்சிட்டாரே?’ என்று துரைமுருகன் மீது மீண்டும் வருத்தத்தில் இருக்கிறார் ஸ்டாலின்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்துவிட்டு ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்.