டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய செல்போன் ஆபரேஷன் - சிக்கும் திமுகவி | Editorji
  1. home
  2. > Minnambalam
  3. > டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய செல்போன் ஆபரேஷன் - சிக்கும் திமுகவி
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய செல்போன் ஆபரேஷன் - சிக்கும் திமுகவி

Oct 29, 2019 16:50 IST

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. “விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தல்களில் திமுக கூட்டணி தோற்றுப் போனதை திமுக தலைவர் ஸ்டாலினால் ஜீரணித்துக் கொள்ளவே இயலவில்லை. இரு தொகுதிப் பொறுப்பாளர்களிடமும் தோல்வி ஏன் என்று அறிக்கை கேட்டிருக்கிறார். அந்த வகையில் நாங்குநேரி தொகுதிப் பொறுப்பாளரான திமுக துணைப் பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் ஆகியோர் நாங்குநேரி தோல்வி குறித்து அறிக்கை தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். தொகுதிப் பொறுப்பாளர் ஐ.பெரியசாமி, மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் ஆகியோரோடு சுமார் 25 நாட்களுக்கும் மேலாக தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த திமுக முக்கிய நிர்வாகிகள், காங்கிரஸ் நிர்வாகிகள் எனப் பல்வேறு தரப்பில் விசாரித்ததில் நாங்குநேரி தேர்தல் பற்றிய பல்வேறு தகவல்கள் கிடைத்தன. காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் தரப்பில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்கு உட்பட தேர்தல் செலவுகளுக்காகப் பணம் திமுகவிடம் கொடுக்கப்பட்டுவிட்டது. அதை ஒட்டி திமுகவும் குழுக்கள் அமைத்து பண விநியோகம் நடத்தியது. சில பகுதிகளில் பண விநியோகக் குழுவில் இடம்பெற்ற காங்கிரஸார் விநியோகத்தின்போது கூட்டிச் செல்லப்படவில்லை என்ற புகார் எழுந்தது. இதுகுறித்து அப்போதே ‘பணப்பட்டுவாடா: திமுக மீது காங்கிரஸ் சந்தேகம்’ என்று மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். காங்கிரஸ் தரப்பில் இதுபோன்ற புகார்கள் தொடரக் கூடாது என்பதாலும், பணம் உள்ளபடியே சென்று சேர வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்த ஐ.பெரியசாமியும், ஆவுடையப்பனும் திமுகவினரின் பணப்பட்டுவாடாவைக் கண்காணிக்க ஒரு சிறப்பு மெக்கானிசத்தை இம்முறை நாங்குநேரியில் அறிமுகப்படுத்தியிருந்தார்கள். இந்த யோசனையைக் கொடுத்தது திமுக ஐடி விங். அதன்படி நாங்குநேரி தொகுதியில் ஓட்டுக்கு 1,000 ரூபாய் என்று வாக்காளர்களுக்கு வழங்கும்போதே திமுகவினர் ஒவ்வொரு குடும்பத்தின் சார்பிலும் ஒருவரது மொபைல் எண்ணை கேட்டுப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர். பணப்பட்டுவாடா செய்யப்பட்ட பூத்களின் ஒவ்வொரு வீட்டு எண், அந்தக் குடும்பத்தில் ஒருவரது மொபைல் எண் ஆகியவற்றைப் பட்டியலிட்டு தேர்தல் பிரச்சாரம் முடிவதற்கு சில நாட்கள் முன்பே தொகுதிப் பொறுப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவு. அந்தப் பட்டியலை வைத்துக்கொண்டு தேர்தலுக்கு மூன்று நாட்கள் இருக்கும்போதே 20 புதிய செல்போன் நம்பர்கள் வாங்கி, ஒவ்வொரு பூத்திலும் ரேண்டமாக போன் நம்பர்களுக்குப் போன் போட்டு, ‘நாங்க திமுகவுலேர்ந்து பேசுறோம். கட்சிக்காரங்க வீட்டுக்கு வந்தாங்களா?’ என்று கேட்டு செக் செய்திருக்கிறார்கள். இப்படி தொகுதி முழுக்க ஆயிரக்கணக்கான போன் நம்பர்களுக்கு போன் செய்து திமுகவினர் விசாரித்துள்ளனர். இந்த போன் ஆபரேஷனில்தான் மிகப்பெரிய பூதம் நாங்குநேரியில் வெடித்திருக்கிறது. மூலக்கரைப்பட்டி பகுதியில் கொடுக்கப்பட்ட போன் நம்பர்களுக்குக் கண்காணிப்புக் குழுவினர் போன் செய்தபோது பாதி பேருக்கு மேல், ‘திமுககாரங்க எங்க வீட்டுக்கே வரலை’ என்று சொல்லியிருக்கிறார்கள். மேலும் பல போன்கள் சுவிட்ச் ஆஃப், இந்த எண் உபயோகத்தில் இல்லை என்று வந்திருக்கிறது. மூலக்கரைப்பட்டியில் மொத்தம் 9,000 ஓட்டுகள் இருக்கின்றன. இவற்றில் சுமார் 7,000 ஓட்டுகளுக்கு காங்கிரஸ் வேட்பாளருக்காக திமுகவினர் மூலம் பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், திமுக கண்காணிப்புக் குழு நடத்திய போன் ஆய்வில் பாதி ஓட்டுகளுக்கு மேல் பணம் கொடுக்கப்படாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அங்கே பொறுப்பிலிருந்த பூங்கோதை, கிரகாம்பெல் ஆகியோரிடம் ஐ,பெரியசாமி கேட்டிருக்கிறார். அதற்கு அவர்கள் சொன்ன பதிலையடுத்து வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ‘ஏம்மா தலைமைக்கும் காங்கிரஸுக்கும் கணக்கு சொல்லணும்ல’ என்று ஐ.பி கேட்டிருக்கிறார். விருட்டென்று எழுந்து வெளியே போய்விட்டார் பூங்கோதை. இதேபோல ஏர்வாடியில் மட்டும் அதிமுக ஒரு கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறது. ஆனால் திமுக சார்பில் பணம் முழுமையாகச் செலவிடப்படவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏர்வாடியை டிபிஎம் மைதீன்கான் கவனித்துக்கொண்டிருந்ததால் அவரிடமும் இதுபற்றி பொறுப்பாளர்கள் பேசியிருக்கிறார்கள். அவர் தரப்பிலும் பணப்பட்டுவாடாவுக்கான போன் நம்பர்கள் தரப்படவில்லை. ரிசல்ட்டிலும் ஏர்வாடியில் திமுகவுக்கு எதிர்பார்த்த வாக்குகளை விட குறைந்த வாக்குகளே பதிவாகியிருக்கின்றன. இதுபோல பணப்பட்டுவாடாவுக்கு போன் நம்பர்கள் கொடுக்காத பகுதிகள் பட்டியல் எடுக்கப்பட்டு ஸ்டாலினுக்குக் கொடுக்கப்பட இருக்கும் அறிக்கையில் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடாவில் இப்படி பிரச்சினை என்றால், திமுக இளைஞரணித் துணைச் செயலாளர் துரை தொடர்பாகவும் தொகுதிப் பொறுப்பாளர்கள் தலைமைக்குப் புகார் அனுப்பியுள்ளனர். தேவேந்திரகுல வேளாளர்கள் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டம் அறிவித்திருந்த நிலையில் நாங்குநேரி வந்த ஸ்டாலினிடம் தேவேந்திர குல வேளாளர்கள் சிலர் மனு கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார் துரை. ஸ்டாலினிடம் மனு கொடுத்த அனைவருமே நாங்குநேரி தொகுதியைச் சேர்ந்தவர்கள் அல்ல. இதையறிந்த தேவேந்திர குல வேளாளர் சங்கங்கள் ஸ்டாலின் மீது கடுமையான கோபத்திலிருந்தனர். இந்த நிலையில் ஸ்டாலினைப் போராட்ட கிராமங்களில் ஒன்றான உன்னங்குளம் கிராமத்துக்கு அழைத்துச் செல்லவும் இளைஞரணித் துணைச் செயலாளர் ஏற்பாடு செய்துவிட்டார். ஸ்டாலினும் அங்கே சென்று கொண்டிருந்த நிலையில் மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன், அங்க நிலைமை சரியில்லை என்று சொல்லித் தடுத்துவிட்டார். ஒருவேளை ஸ்டாலின் அங்கே போயிருந்தால் நிலைமை விபரீதமாகியிருக்கும். இதேபோல இளைஞரணியினர் தொகுதியில் செய்த குழப்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. தேர்தல் பணிகளில் நிர்வாகிகள் ஈடுபட்டிருக்கும்போது இளைஞரணி நிர்வாகிகள் வந்து, ‘உதயநிதி வர்றாரு. அவருக்கு கார்பெட் இந்த இடத்துலேர்ந்து போடணும். குறைஞ்சது 2,000 பெண்களாவது வரணும். கேமராவெல்லாம் இந்த ஆங்கிள்லதான் இருக்கணும்’ என்பன போன்ற உத்தரவுகளையே நிர்வாகிகளுக்குப் பிறப்பித்தனர். உதயநிதியின் பிரச்சாரத்துக்கு செய்த ஏற்பாடுகளால் தேர்தல் வேலைகள் பாதிகப்பட்டதுதான் மிச்சம் என்றும் தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு ரிப்போர்ட் போயிருக்கிறது. இதுமட்டுமல்ல கனிமொழி தேர்தல் பிரச்சார நேரத்தில் செர்பியாவுக்குப் பயணம் மேற்கொண்டது ஏன் என்றும் திமுக நிர்வாகிகளிடம் சிலர் கேட்டிருக்கிறார்கள். கனிமொழி ஒதுங்கிக்கொண்டாரா அல்லது ஒதுக்கப்படுகிறாரா என்ற கேள்விகளும் திமுகவினர் மத்தியில் ஒலித்து வருகிறது. தொகுதிப் பொறுப்பாளர்கள் ஸ்டாலினுக்கும் அனுப்பும் அறிக்கையில் இதெல்லாம் இடம்பெறுமா என்பதுதான் லோக்கல் திமுகவினரின் கேள்வி. தேர்தல் முடிவுக்குப் பின் நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஸ்டாலின் அழைத்துப் பேசியிருக்கிறார். அப்போது அவரும் பல விஷயங்களை ஸ்டாலினிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார். இதற்கிடையில் நாங்குநேரி தொகுதிப் பொறுப்பாளர்கள் ஐ.பி - ஆவுடையப்பனின் அறிக்கை ஸ்டாலினுக்கு விரைவில் அனுப்பப்படும் என்கிறார்கள். இதன் அடிப்படையில் ஸ்டாலின் தவறு செய்த திமுகவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் உள்ளாட்சித் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் இதேபோன்ற ‘வேலைகள்’ தொடரும், அது திமுகவுக்கே பாதகமாக அமையும் என்கிறார்கள் நாங்குநேரியில் தேர்தல் வேலை பார்த்து இடுப்பு ஒடிந்துபோன திமுக நிர்வாகிகள்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைனுக்குப் போனது வாட்ஸ் அப்.