தகர்ந்த நம்பிக்கை: குழந்தை சுஜித் உயிரிழப்பு! | Editorji
  1. home
  2. > Minnambalam
  3. > தகர்ந்த நம்பிக்கை: குழந்தை சுஜித் உயிரிழப்பு!
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

தகர்ந்த நம்பிக்கை: குழந்தை சுஜித் உயிரிழப்பு!

Oct 29, 2019 13:07 IST

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்க 80 மணி நேரத்திற்கும் மேலாக நடந்துவந்த மீட்புப் பணிகள் தோல்வியில் முடிந்தது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப் பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகள் நான்காவது நாளாக நேற்றிரவு வரை (அக்டோபர் 28) தொடர்ந்தது. குழந்தையை நலமுடன் மீட்க வேண்டும் என்று ஒரு பக்கம் தமிழக மக்கள் பிரார்த்தித்துக் கொண்டிருக்க, மறுபக்கம் மீட்புப் பணிகள் தீவிரமடைந்தன. பாறைகள் அதிகமாக இருந்ததால் ரிக் மற்றும் போர்வெல் இயந்திரங்கள் மாறி மாறி குழி தோண்டும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன. இந்த நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் குழி தோண்டுவதற்கான பணிகள் திடீரென நிறுத்தப்பட்டன. சிறிதுநேரத்தில் செய்தியாளர்களை சந்தித்த வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அதிர்ச்சிதரத்தக்க செய்தியைக் கூறினார். “நேற்றிரவு 9.30-10 மணியளவில் குழந்தை உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அங்கு நிரந்தரமாக இருந்தவர்கள் தெரிவித்தனர். மருத்துவக் குழுவினரை உள்ளே அனுப்பினோம். குழந்தையின் உடல் சிதைந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் குழி தோண்டும் பணி நிறுத்தப்பட்டுவிட்டது. உடலை எப்படி மீட்பது என்பது தொடர்பாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் வழிகாட்டுதல்படி அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து 88 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தை சுஜித்தின் உடல் இன்று (அக்டோபர் 29) அதிகாலை சுமார் 4.30 மணியளவில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. குழந்தையின் உடலை பேரிடர் மேலாண்மை குழுவீரர்கள் பாதுகாப்பாக மீட்டு துணியில் போர்த்தி கொண்டு வந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சிவராசு, “குழந்தை சுஜித்தின் உடலை தேசிய, மாநில பேரிடர் மேலாண்மை குழுக்கள் மீட்டன. தற்போது பிரேதபரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு் செல்லப்படுகிறது. இரண்டு ஆழ்துளை கிணறுகளும் சிமெண்ட் கான்கிரீட் மூலம் முழுமையாக மூடப்படும்” என்று குறிப்பிட்டார். சுஜித்தின் உடல் ஆம்புலன்ஸில் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு 1 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவர்கள் குழு பிரேத பரிசோதனை மேற்கொண்டது. அதன்பிறகு சிலுவை பொருத்தப்பட்ட சவப்பெட்டியில் சுஜித்தின் உடல் மருத்துவமனை வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டது. அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் அதிகாரிகள் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு குழந்தையில் உடல் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச்செல்லப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்குள்ள கல்லறைத் தோட்டத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. சுஜித் எப்படியாவது மீண்டும் வர வேண்டும் என தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் பிரார்த்தனைக் குரல்கள் ஒலித்த நேரத்தில், அனைவரின் நம்பிக்கையும் தகர்ந்து குழந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.