டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி ஏமாற்றுகிறார் - மோடி வரை சென்ற புகார்!

home > டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி ஏமாற்றுகிறார் - மோடி வரை சென்ற புகார்!
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி ஏமாற்றுகிறார் - மோடி வரை சென்ற புகார்!

Oct 01, 2019 16:19 IST

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது. “நடக்க இருக்கும் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தலை ஒட்டி சில நாட்களாகவே பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் ஒரு மோதல் போக்கு போன்ற நிலைமை ஏற்பட்டது. கூட்டணிக் கட்சியினரை ஆதரவு கேட்டு அணுகுவதில் அதிமுக பாரபட்சம் பார்ப்பதாகவும் பாஜகவை விட்டு மெல்ல மெல்ல விலகுவதற்கான ஒத்திகையில் அதிமுக ஈடுபட்டிருப்பதாகவும் தமிழக பாஜக பிரமுகர்கள் கருதத் தொடங்கிவிட்டார்கள். அதன் விளைவுதான் இடைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று முடிவு செய்யவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திரும்ப திரும்ப சொல்லி வந்தார். நாங்குநேரியில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிட வாய்ப்பு இருக்கிறது என்பதையும் சில தலைவர்கள் சூசகமாக வெளிப்படுத்தி வந்தனர். இந்த நிலையில்தான் பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தார். அதிமுகவும் பாஜகவும் கூட்டணியாகத்தான் இருக்கின்றன என்று நேற்று முன்தினம் சேலத்திலிருந்து பேட்டிக் கொடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி இப்போதைக்கு பாஜகவை இம்மியளவும் பகைத்துக்கொள்வது நல்லதல்ல என்று கருதுகிறார். அதனால், மோடியிடம் தங்களது நல்ல எண்ணத்தை எப்படிக் காட்டுவது என்று யோசித்த எடப்பாடி பழனிசாமி இரண்டாவது முறை பிரதமராகி முதன்முறை சென்னைக்கு மோடி வருவதால் அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் மோடியை வரவேற்க விமான நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்படியே எடப்பாடி பழனிசாமி ஆரம்பித்து ஒட்டுமொத்த அமைச்சர்களும் நேற்று கையில் ஒற்றை ரோஜாவுடன் மோடியை வரவேற்றனர். மோடி வருவதற்குள் தமிழக பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே நிலவுவதாகச் சொல்லப்படும் பிரச்சினையைப் பேசித் தீர்த்து விட வேண்டும் என்று முடிவு செய்த எடப்பாடியும் பன்னீர்செல்வமும் நேற்று முன்தினமே பாஜகவின் தமிழகப் பொறுப்பாளர் முரளிதர ராவுக்கு போன் போட்டிருக்கிறார்கள் தமிழக பாஜக தலைவர்கள் இடைத் தேர்தல் பற்றி ஊடகங்களில் பேசுவது பற்றியும் நாங்குநேரியில் பாஜக சார்பில் வேட்பு மனு வாங்கிச் சென்றது பற்றியும் முரளிதர ராவிடம் அவர்கள் பேசியிருக்கிறார்கள். ஏற்கனவே தமிழக சீனியர் பாஜக தலைவர்கள் மீது கடுமையான அதிருப்தியில் இருக்கும் டெல்லி தலைமை, ‘அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை இல்லை. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்று முரளிதர ராவ் மூலமாக எடப்பாடியிடமும் ஓபிஎஸ்ஸிடமும் தெரிவித்திருக்கிறார்கள். அதையடுத்துதான் ஒட்டுமொத்த அமைச்சரவையும் திரண்டு மோடியை வரவேற்க விமான நிலையம் சென்றது. அதேநேரம், ‘மோடி முன் பவ்யமாக காட்டிக்கொள்ளும் எடப்பாடி, தேர்தல் களங்களில் மோடியின் பெயரைச் சொல்லுவதே இல்லை, எடப்பாடியும், பன்னீரும் நம்மை ஏமாற்றுகிறார்கள், இதுபற்றி கேட்க கூட எங்களுக்கு உரிமை இல்லையா?’ என்று தமிழக பாஜக தலைவர்களும் முரளிதர ராவிடம் மனம்விட்டு கூறியிருக்கிறார்கள். அவரோ எல்லாம் மோடிஜிக்குத் தெரியும் என்று பதில் சொல்லி அவர்களைச் சமாதானப்படுத்தியிருக்கிறார். அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இன்னும் உறவு இயல்பாகவில்லை என்பதையே இது காட்டுகிறது” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.