நாகர்கோவிலில் அரசுப் பேருந்து நடத்துனரைக் காவலர்கள் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் ராணி தோட்டம் கிளையில் நடத்துநராகப் பணிபுரிபவர் ரமேஷ். இவர் பணியில் ஈடுபட்டிருக்கும் போது நெல்லை ஆயுதப்படை காவலர்களான தமிழரசன் மற்றும் மகேஷ் ஆகியோர் அந்த பேருந்தில் ஏறியுள்ளனர். பேருந்தில் பயணம் செய்வதற்கான டிக்கெட் எடுக்க மறுத்த காவலர்களிடம் வாரண்டை தன்னிடம் காண்பிக்குமாறு நடத்துநர் கேட்டுள்ளார். சீருடையில் இருந்த காவலர்கள், தங்களுக்குரிய இலவச பயண அட்டையை நடத்துநரிடம் காண்பிக்க மறுத்ததோடு அவரை தாக்கவும் ஆரம்பித்தனர். இந்த சம்பவத்தில் ரமேஷின் முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. ஆத்திரமடைந்த நடத்துநர் காவலர்களை கோபமாகத் திட்டியதுடன், தன்னைத் தொடர்ந்து அவர்கள் தாக்க முயற்சி செய்ததையும் தடுத்துள்ளார். மேலும் ரத்தக் காயத்துடன் தன்னை காவலர்கள் தாக்கிய சம்பவத்தை தனது மொபைல் ஃபோனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து காவலர்கள் மகேஷ், தமிழரசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.