சுபஸ்ரீ: ஜெயகோபால் சிக்கியது எப்படி? | Editorji
  1. home
  2. > Minnambalam
  3. > சுபஸ்ரீ: ஜெயகோபால் சிக்கியது எப்படி?
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

சுபஸ்ரீ: ஜெயகோபால் சிக்கியது எப்படி?

Sep 28, 2019 17:32 IST

சட்டவிரோதமாகப் பேனர் வைத்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை வரும் 11ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பேனரால் குரோம்பேட்டையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் பேனர் வைத்த முக்கிய குற்றவாளியான ஜெயகோபாலை தவிர்த்து லாரி ஓட்டுநர், காவல்துறை அதிகாரிகள், பேனர் அச்சிட்ட அச்சகம் என அனைத்து தரப்பு மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் ஜெயகோபால் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வந்த நிலையில் அவரை ஏன் கைது செய்யவில்லை என்று நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருந்தது. நீதிமன்றத்தின் அழுத்தத்தைத் தொடர்ந்து தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த ஜெயகோபாலை திருச்சி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் தேடி வந்தனர். நேற்று மாலை தேன்கனிகோட்டையில் ரிசார்ட்டில் தங்கியிருந்த அவரை கைது செய்தனர். சென்னை அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். இன்று (செப்டம்பர் 28) காலை, ஆலந்தூர் நீதிமன்ற நீதிபதி சார்லி முன்பு ஆஜர்படுத்தியுள்ளனர். அப்போது ஜெயகோபால் சட்டவிரோதமாகப் பேனர் வைத்தது தவறுதான் என ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை 14 நாட்கள் அதாவது அக்டோபர் 11ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதைதொடர்ந்து ஜெயகோபால் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதற்கிடையே பேனர் அமைக்க உதவிய 4 பேர் பள்ளிக்கரணை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொடி கட்டுதல், பேனர் அமைத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்ட பழநி, சுப்பிரமணி, சங்கர், லட்சுமிகாந்த் ஆகிய 4 பேரை பள்ளிக்கரணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.