தொல்லியல் துறை அகழாய்வு நடத்தி வரும் கீழடியில், பல்வேறு தொன்மையான பொருட்கள் கிடைத்து வரும் நிலையில், அங்கு விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கீழடியில் 2015 முதல் தொல்லியல் துறை அகழாய்வு நடத்தி வருகிறது. பழமையான நகர நாகரிகம் கீழடியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. முதல் மூன்று அகழாய்வு பணிகளில் 7,818 தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன. 4 ஆம் கட்ட அகழாய்வில் 5,820 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கடந்த ஜூன் 13ஆம் தேதி முதல் 5ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 33 குழிகள் தோண்டப்பட்டுள்ளன, விரைவில் 6ஆம் கட்ட பணிகள் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று (செப்டம்பர் 27) கீழடியில் நடைபெறும் ஆய்வை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”கீழடியில் 5 ஆம் கட்ட பணிகள் மேலும் இரண்டு வாரங்களுக்கு நடைபெறும். 6ஆம் கட்ட அகழாய்வு பணிகள் மத்திய தொல்லியல் துறையுடன் இணைந்து தொடங்கப்படும். 11 விதமான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு ஆய்வு நடத்தப்படுகிறது. கீழடியில் விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். இதற்காக ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த அகழாய்வின் மூலம் இந்தியாவின் பல பகுதிகளுடனான தமிழரின் ஒற்றுமை தெரியவந்துள்ளது. 6ஆம் கட்ட அகழாய்வு கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் நடைபெறும். ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கை 2 மாதத்தில் வெளியிடப்படும். கீழடியின் சின்னம் என்பது திமிலுடன் கூடிய காளை ஆகும். இதற்கான எலும்புகள் கிடைத்திருக்கிறது. கைவினை மற்றும் நெசவுத் தொழில்கள் நடைமுறையிலிருந்துள்ளது. தந்தத்திலான பொருட்களை மக்கள் பயன்படுத்தியிருக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் மத்திய அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்த நிலையில் இன்று ரூ.15 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மதுரை வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கீழடி சென்று அகழாய்வு நடக்கும் இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மதுரை எம்.பி சு.வெங்கடேசன், முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். தான் பார்வையிடும் வீடியோவை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவேற்றி, “2600 ஆண்டுகளுக்கும் முற்பட்ட தமிழர் நாகரிகத்தை உலகுக்கு உணர்த்திய கீழடி நிலத்தைப் பார்வையிட்ட போது" என்று குறிப்பிட்டிருக்கிறார் ஸ்டாலின்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கி.மு 6 ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்களின் நாகரிகம் எப்படி இருந்தது என்பதை கீழடி அகழாய்வு மூலமாக அறிய முடிகிறது. தமிழர்கள் கலாச்சாரத்தை மத்திய அரசு காக்க வேண்டும். தமிழர்களின் கலாச்சாரத்தை மத்திய அரசு பாதுகாக்கத் தமிழக அரசு உரிய அழுத்தம் தர வேண்டும்” என்று வலியுறுத்தினார்.