நான் தமிழன்: இந்தியை எதிர்த்த சுப்பிரமணியன் சுவாமி | Editorji
  1. home
  2. > Minnambalam
  3. > நான் தமிழன்: இந்தியை எதிர்த்த சுப்பிரமணியன் சுவாமி
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

நான் தமிழன்: இந்தியை எதிர்த்த சுப்பிரமணியன் சுவாமி

Aug 31, 2019 13:29 IST

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் நடந்த குறுக்கு விசாரணையில் இந்தி கேள்விகளுக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆட்சேபம் தெரிவித்ததால் நீதிமன்றத்தில் பரபரப்பு நிலவியது. முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை பதிப்பை நிறுத்தி கொள்வதாக அதனை நடத்தி வந்த அசோசியேட் ஜர்னல்ஸ் லிமிடெட் (ஏஜேஎல்) நிறுவனம் 2008ஆம் ஆண்டு அறிவித்தது. ஆனால் இந்த நிறுவனம், காங்கிரஸ் கட்சிக்கு 90.25 கோடி கடன் பாக்கி தரவேண்டி இருந்ததால் அக்கட்சி, நிறுவனத்தைக் கையகப்படுத்தியது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது தாயார் சோனியா காந்தி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் யங் இந்தியா லிமிடெட் நிறுவனம் மூலமாக ரூ.50 லட்சம் முதலீட்டில் நேஷனல் ஹெரால்ட் நிறுவனத்தின் ரூ.2000 கோடி மதிப்புள்ள சொத்தை 2010ஆம் ஆண்டு தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாகவும் ஏஜேஎல் நிறுவனத்தின் பங்குதாரர்களின் ஒப்புதல் இல்லாமல், அதைக் கையகப்படுத்தும் உரிமை புதிய நிறுவனத்துக்கு எப்படி அளிக்கப்பட்டது எனவும் அப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் பொருளாளர் மோதிலால் வேரா உள்ளிட்டோருக்கு எதிராக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி 2012ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் டெல்லி பெருநகர கூடுதல் தலைமை நீதிபதி நீதிமன்றத்தில் நீதிபதி சமர் விஷால் முன்னிலையில் இன்று (ஆகஸ்ட் 30) பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் சோனியா காந்தி தரப்பிலிருந்து மூத்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.சீமா மற்றும் தரன்னம் சீமா ஆகியோர் கேள்விகளை எழுப்பினர். வழக்கறிஞர் சீமா தனது கேள்விகளை இந்தியில் அடுக்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுப்பிரமணியன் சுவாமி, “ஆங்கிலத்தில் பேசுங்கள். நீதிமன்றத்தின் மொழியும் ஆங்கிலம்தான்” என்று தெரிவித்தார். இடையில் குறுக்கிட்ட நீதிபதி விஷால், “இந்தியும் ஆங்கிலமும் நீதிமன்ற மொழிதான். இந்தி நமது தேசிய மொழியும் கூட” என்று குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் சீமாவும் இந்தியிலேயே தனது கேள்விகளை தொடர்ந்தார். இதனால் கோபமடைந்த சுப்பிரமணியன் சுவாமி, “தயவு செய்து ஆங்கிலத்தில் பேசுங்கள். இந்த நேரத்தில் நான் தமிழன் என்பதை உங்களிடம் நினைவுபடுத்த விரும்புகிறேன்” என்று சொன்னார். இதனையடுத்து சீமா கேள்விகளை ஆங்கிலத்திலேயே தொடர்ந்தார். இதனால் சிறிது நேரம் நீதிமன்றத்தில் பரபரப்பு நிலவியது.