திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பயணி ஒருவரை, பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களும் சேர்ந்து சரமாரியாகத் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜய், இவர் திண்டுக்கல் மாவட்டம் காமராஜர் பேருந்து நிலையத்தில் இருந்து தேனி செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார். அவர் பேருந்தில் காத்திருந்த நேரத்தில் பேருந்து ஓட்டுநர் தினகரன் மற்றும் நடத்துநர் மணிகண்டன் ஆகிய இருவரும் பேருந்தின் பின் பக்கமாக ஏறி பேருந்திற்குள் உடையைமாற்ற முற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைப்பார்த்த விஜய் அவர்களிடம், உங்களுக்கு உடைமாற்றம் செய்ய தனியாக அறை எதுவும் ஒதுக்கப்படவில்லையா, ஏன் பேருந்திற்குள் பயணிகள் மத்தியில் உடை மாற்றுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் விஜய்யுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து விஜய் பேருந்திலிருந்து கீழே இறக்கி விடப்பட்டார். அதன் பின்னரும் வாக்குவாதம் தொடர்ந்துள்ளது. இதனைப் பார்த்துப் பேருந்து நிலையத்தில் இருந்த பிற நடத்துநர்களும் ஓட்டுநர்களும் அவர்களைச் சூழ்ந்து கொண்டார்கள். ஆத்திரமடைந்த நடத்துநர், பயணி விஜய்யின் கன்னத்தில் அறைந்துள்ளார். அவரும் பதிலுக்கு நடத்துநரைத் திருப்பித் தாக்க, கண நேரத்தில் சுற்றி இருந்த அனைவரும் சேர்ந்து விஜய்யை சரமாரியாகத் தாக்க ஆரம்பித்தனர். மேலும் விஜய்யைப் பிடித்துத் தள்ளி, கீழே விழச் செய்து கால்களால் எட்டி மிதித்தும் கொடூரமாகத் தாக்கினர். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பயணிகளின் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.