1. home
  2. > Minnambalam
  3. > எல்லைகளை இல்லாமலாக்கும் குழந்தைகள்!
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

எல்லைகளை இல்லாமலாக்கும் குழந்தைகள்!

Aug 01, 2019 19:32 IST

இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைக்கோடு என்றால் துப்பாக்கி ஏந்திய இராணுவ வீரர்கள்தானே நினைவுக்கு வருகிறார்கள். ஆனால் அமெரிக்க, மெக்ஸிகோ எல்லையில் இரு நாட்டு குழந்தைகளும் குதூகலமாக விளையாடும் வகையில் ‘சீ-சா’வை நிறுவியுள்ளார் கட்டிடக் கலைஞர் ரொனால்ட் ரெயில். எல்லைகளில் சுவர்களை எழுப்பி அயல் நாட்டு மக்களை உள் நுழையாமல் தடுக்கும் மனித சிந்தனை, ஆதி காலம் தொட்டே தீராத நோய் போல தொடர்ந்து வருகிறது. இது ஒரு பழங்கால சிந்தனை என்றே வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கிறிஸ்து பிறப்புக்கு முன்பே இவை தொடங்கப்பட்டதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. முதல் சுவராக சிட்டி வால்ஸ் என அழைக்கப்படும் நகர சுவர்கள், 12,000 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முறையாக கட்டப்பட்ட பைபிள் நகரமான எரிகோ போன்ற முதல் நகரங்களிலிருந்தே தோன்றின. இப்போதும் தொடர்ந்து வரும் எல்லைகளில் சுவரெழுப்பும் வழக்கம் பல்வேறு காரணங்களுக்காக முன்மொழியப்படுகின்றன. குடியேற்றம், பயங்கரவாதம், எல்லைப் பாதுகாப்பு, சட்டவிரோத போதைப்பொருட்களைத் தடுத்தல் போன்றவை அவற்றில் முக்கியமாக கூறப்படுகின்றன. முதல் சுவரான எரிகோவின் சிட்டி வால்ஸ் முதல் தற்போதைய அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லை சுவர்கள் வரை இவையனைத்திற்குப் பின்னும் ஒரு பொதுவான காரணம் உள்ளது, அது வெளியாட்களை வெளியே வைத்திருத்தல். நேற்று(ஜூலை 30) மொரிசியோ மார்டினெஸ் என்ற மெக்ஸிகன் நடிகர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதன் பின், உலகமெங்கும் அவ்வீடியோ வைரலாகி வருகிறது. அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் ‘பிங்க்’ நிற ‘சீ-சா’க்களில் இரு நாட்டு குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருக்கும் காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றதே அதற்கான காரணம். டெக்சாஸின் எல் பாசோ, மெக்ஸிகோவின் சியுடாட் ஜுரெஸ் புறநகரில் உள்ள எஃகு எல்லை வேலியில் நிறுவப்பட்ட இந்த ‘சீ-சா’ பெர்க்லியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் கட்டிடக்கலை பேராசிரியரான ரொனால்ட் ரெயல், இணை பேராசிரியரான வர்ஜீனியா சான் ஆகியோரது கண்டுபிடிப்பாகும். அந்த வீடியோவில், குழந்தைகளும் பெரியவர்களும் வேலிகளின் இருபுறமும் விளையாடுவதையும், பேசிக்கொள்வதையும் காணலாம். இந்த நிகழ்வை பற்றி ரொனால்ட் ரெயல் பேசும்போது, "எல்லைச் சுவரில் மகிழ்ச்சி, உற்சாகம், ஒற்றுமையை இந்த ‘சீ-சா’ கொண்டுவருகிறது” என்று கூறினார். இந்த சுவற்றுக்கு ‘டீட்டர்-டோட்டர் வால்’ என பெயரிட்டுள்ளனர். மேலும் அவர், "ஒருபுறம் நடக்கும் செயல்கள் மறுபுறம் எவ்வாறு நேரடி விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை நாம் அங்கீகரிப்பதன் மூலம் இருபுறமும் அர்த்தமுள்ள வழிகளைக் கண்டுபிடிக்கலாம்" என்று கூறியுள்ளார். இந்த ‘டீட்டர்-டோட்டர் வால்’ பலவீனமடைந்து வரும் மனிதத்தின் சகிப்புத் தன்மை மீது நம்பிக்கை ஒளி பாய்ச்சுவது போல அமைந்துள்ளது.