முடிவுக்கு வந்த நேர்கொண்ட பார்வை பிசினஸ்!

home > முடிவுக்கு வந்த நேர்கொண்ட பார்வை பிசினஸ்!
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

முடிவுக்கு வந்த நேர்கொண்ட பார்வை பிசினஸ்!

Aug 01, 2019 19:28 IST

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தப் படம் தொடங்கிய நாள் முதல் பரபரப்பாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. படத்துக்குத் தலைப்பு வைத்து, தணிக்கை சான்றிதழ் பெறப்பட்ட பின்னரும் இந்தப் படத்தின் வியாபாரம் முடிவடையாமல் இழுத்துக்கொண்டிருந்தது. விஜய் நடித்த பிகில் படம் 74 கோடி ரூபாய்க்குத் தமிழக உரிமை விற்பனை செய்யப்பட்டிருந்தது. அதே அளவுக்கு நேர்கொண்ட பார்வை படம் வியாபாரம் செய்ய வேண்டும் என அஜித் வலியுறுத்தியதால் தயாரிப்பு நிறுவனம் கூறிய விலை கேட்டு விநியோகஸ்தர்கள் படத்தை வாங்க ஆர்வம் காட்டவில்லை. தமிழ் சினிமாவில் செயல்பட்டுவரும் முன்னணி திரைப்பட விநியோக நிறுவனங்களிடமும், விநியோகஸ்தர்களிடமும் படத்தைத் தமிழகத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவுட்ரேட் முறையில் நேர்கொண்ட பார்வை படத்தை வாங்க யாரும் தயாராக இல்லை. இந்த நிலையில் நேற்று (ஜூலை 31) ஜெமினி நிறுவனம் இந்தப் படத்தின் உரிமையைப் பெற்றிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இரு வாரங்களாக நீடித்து வந்த இழுபறி வியாபாரம் முடிவுக்கு வந்துள்ளது. இந்தப் படத்தின் தென்னிந்தியத் திரையரங்க உரிமையை சுமார் 42 கோடி ரூபாய்க்கு ஜெமினி நிறுவனம் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், ஜெமினி நிறுவனத்திடமிருந்து தமிழகத்தின் ஏரியா உரிமை மற்றும் கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களின் உரிமைகளை வியாபாரம் செய்வதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.