வேலூர்: அதிமுகவின் சுயேச்சை வியூகம்! | Editorji
  1. home
  2. > Minnambalam
  3. > வேலூர்: அதிமுகவின் சுயேச்சை வியூகம்!
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

வேலூர்: அதிமுகவின் சுயேச்சை வியூகம்!

Jul 31, 2019 19:21 IST

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் அதிமுக வேட்பாளராக புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகமும், திமுக வேட்பாளராக துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தும் போட்டியிடுகின்றனர். இதுதவிர, நாம் தமிழர் கட்சியின் தீபலட்சுமி உட்பட 28 பேர் களத்தில் உள்ளனர். இவர்களில் 11 இஸ்லாமியர்களும் சுயேச்சையாகக் களமிறங்கியுள்ளனர். அதில் முக்கிய வேட்பாளராகக் கருதப்படும் பேரணாம்பட்டு அப்துல் ரஷீத் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் செல்வாக்குள்ள நபராக இருக்கிறார். இஸ்லாமிய சமூகத்தின் வாக்குகளைச் சிதறவைக்க வியூகம் வகுத்த அதிமுகதான், இந்த 11 பேரையும் களமிறக்கியுள்ளதாகக் கூறுகிறார்கள் தேர்தல் களத்தில் உள்ளவர்கள். ஏனெனில் மக்களவை பொதுத் தேர்தலில் பெரும்பாலான சிறுபான்மையினர் வாக்குகள் திமுக கூட்டணிக்கே பதிவாகியிருப்பதாக தகவல் வெளியானது. இதைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு வெளிப்படையாகவே கூறிய அமைச்சர் சி.வி.சண்முகம், பாஜகவுடன் கூட்டணி வைத்ததுதான் அதிமுகவுக்கு சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காததற்குக் காரணம் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் திமுகவுக்கு விழும் முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளைப் பிரிக்கவே இந்த இஸ்லாமிய வேட்பாளர்கள் வியூகத்தை அதிமுக கையிலெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. தொகுதி நிலவரம் ஏப்ரலில் நடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது அதிமுக வேட்பாளர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் யாரும் இஸ்லாமிய சமுதாயத்தினர் வசிக்கும் பகுதிக்குள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், தற்போது அதிமுகவினர் இஸ்லாமியர் வசிக்கும் பகுதிக்குச் சென்று வாக்கு சேகரிப்பதைப் பார்க்க முடிகிறது. அந்த நேரத்தில் கூட்டணிக் கட்சியான பாஜகவின் கொடியை கவனமாகத் தவிர்த்துவிடுகிறார்கள். வாக்கு கேட்க வருபவர்களை மசூதிக்குள் அழைத்துச் சென்று மரியாதை செய்துவிட்டு, “விருப்பப்படுபவர்கள் வாக்களிப்பார்கள்” என்று அனுப்பிவைக்கிறார்கள். வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தொகுதிக்கு ஐந்து அமைச்சர்கள், 14 எம்.எல்.ஏ.க்கள், அவர்களுக்கு கீழ் முக்கிய நிர்வாகிகள் என்று அதிமுகவினர் தீவிரமாகத் தேர்தல் பணியாற்றிவருகிறார்கள். திமுகவில் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் போன்ற சீனியர்கள் தலைமையில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 10 மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களும் களப்பணியாற்றி வருகிறார்கள். அணைக்கட்டு தொகுதி வன்னியர்கள் நிறைந்த பகுதி என்பதால் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் என பலரும் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இந்தத் தொகுதியில் திமுகவின் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், புவனகிரி எம்.எல்.ஏ, சரவணன் ஆகியோரும் பணியாற்றி வருகிறார்கள். அதிமுக வேட்பாளரும், அதிமுக தலைமையும் தாராளமாகத் தேர்தல் செலவுகளைச் செய்து வருகிறார்கள். ஆனால், திமுக வேட்பாளரோ பூத் கமிட்டி செலவுகளுக்குக் கூட முடிச்சை அவிழ்க்கவில்லை என்கிறார்கள். வெளியூர் திமுக நிர்வாகிகளைக் கண்காணிக்க துரைமுருகன் தரப்பிலிருந்து கூடவே ஒருவர் வருவதால், பல நிர்வாகிகள் அதிிருப்தியில் இருக்கிறார்களாம். அதிமுக தரப்பில் தேர்தல் பணிகளில் அவ்வளவாக ஆர்வம்காட்டாமல் இருந்துவந்த அமைச்சர் வீரமணியை அழைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் பணிகளைத் துரிதப்படுத்தச் சொல்லியுள்ளார். தற்போதைய நிலவரப்படி திமுக, அதிமுக என இரண்டு வேட்பாளர்களுக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.