சர்வதேச புலிகள் தினம் நேற்று (ஜூலை 29ஆம் தேதி) உலகெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை, சரணாலயங்களின் நிலை குறித்த அறிக்கையை சர்வதேச புலிகள் தினமான நேற்று பிரதமர் மோடி வெளியிட்டார்.
‘The Tiger Estimation Report 2018’ என்று பெயரிடப்பட்ட இந்த அறிக்கையை வெளியிட்டு சுமார் 3,000 புலிகளுடன், உலகிலேயே அதிக புலிகள் வசிக்கும் பாதுகாப்பான நாடாக இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும், தமிழகத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்திற்கு விருது வழங்கப்பட்டதோடு, களக்காடு - முண்டந்துறை, சத்தியமங்கலம், ஆனைமலை மற்றும் முதுமலை ஆகிய நான்கு சரணாலயங்களும் 82.03 புள்ளிகளுடன் வெரி குட் பிரிவு எனப்படும் சிறப்பாகச் செயல்படும் சரணாலயங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை, 2000ஆவது ஆண்டில் மிகக் கடுமையாகக் குறைந்து 1,700ஆக இருந்தது. இதைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் புலிகளைப் பாதுகாத்து அதன் எண்ணிக்கையைப் பெருக்கிட பல்வேறு முயற்சிகளை எடுத்தன. அதன் விளைவாக இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை கடந்த 2014ஆம் ஆண்டில் 2,226ஆக உயர்ந்தது. உலக அளவில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் 70 சதவிகிதம் இந்தியாவில் உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் கணக்கெடுப்பின்படி, 2018ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 2,967 ஆக உயர்ந்துள்ளதாக அறிக்கை வெளியீட்டு விழாவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அந்தப் புள்ளிவிவரங்களின்படி , 2006ஆம் ஆண்டு இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 1,411 ஆகவும், 2010ஆம் ஆண்டில் 1,706 ஆகவும் இருந்துள்ளது. உணவுச் சங்கிலியில் மிக முக்கிய உயிரினமாகக் கருதப்படும் புலிகளின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் இருமடங்காக உயர்ந்துள்ளது என்பது நிச்சயமாக மகிழ்ச்சியளிக்கக்கூடிய செய்தியாகவே உள்ளது. வன உயிரினங்களைப் பாதுகாப்பது அந்த உயிரினத்தின் எண்ணிக்கையைப் பெருக்குவதை அடிப்படையாகக் கொண்டது. அதையும் தாண்டி, அதன் வழி காடுகளின் பாதுகாப்புக்கும், மனிதர்களின் நல்வாழ்வுக்கும் கூட அடிப்படையாக உள்ளது.
ஆனால், நமது தேசிய விலங்கான புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதை எண்ணி மகிழ்வுடன் நாம் பெருமை கொள்ளும் அதே நேரத்தில் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி இணையதளத்தில் வைரலான ஒரு வீடியோவை நாம் கவனமுடன் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். புலி ஒன்றை மக்கள் ஒன்றுகூடி அடித்துத் தாக்குவதும் அதை ஒருவர் வீடியோ எடுத்து, அந்தத் தாக்குதல் குறித்து ரன்னிங் கமென்ட்ரி தருவதாகவும் அந்த வீடியோ அமைந்திருந்தது. அப்புலியை மீட்க முயற்சி செய்தவர்களையும் அந்த கும்பல் விரட்டிட அந்த ஆறு வயது பெண்புலி, மிகப் பரிதாபமாக உயிரிழந்தது.
கால்கள் உடைக்கப்பட்டு, நுரையீரல் சிதைக்கப்பட்டு, விலா எலும்புகள் நொறுக்கப்பட்டு மிகக் கொடூரமாக இந்தக் கொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிலிபைட் புலிகள் காப்பகம் பகுதியில் நிகழ்ந்துள்ளது என்பதுதான் அதிர்ச்சிகரமான விஷயம்.
புலிகளின் எண்ணிக்கை உயர்வு பெற்றதன் புள்ளிவிவரம் நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்றால் அதற்கு நேரெதிராக மனிதர்களால் கொலை செய்யப்பட்ட புலிகளின் எண்ணிக்கை உள்ளது. “Wildlife Protection Society of India” வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் 2019ஆம் ஆண்டு மட்டும் ஜூலை ஒன்றாம் தேதிக்குள் 21 புலிகள் வேட்டையாடப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகளின் பற்கள், நகம், தோல், எலும்பு என ஒவ்வோர் உறுப்பும் மருத்துவக் குணங்கள் கொண்டதாக இருப்பதனால் மிக அதிக விலைக்கு அவை விற்கப்படுகின்றன. இதற்காகவே புலி வேட்டை சட்டவிரோதமாக நடைபெற்று வருகிறது. புலிக்கு இரையாக உள்ள மற்ற சிறு விலங்குகளைக் கொன்று, அதன் மீது விஷம் தடவியும் புலிகளைக் கொலை செய்கிறார்கள்.
தேசிய புலிகள் பாதுகாப்பு அமைப்பு (NTCA), கடந்த 2012 முதல் 2018 வரையான காலகட்டத்தில் 657 புலிகள் உயிரிழந்துள்ளதாகக் கூறுகிறது. அதில் 35 புலிகள் விபத்து உள்ளிட்ட காரணங்களினாலும், 138 புலிகள் வேட்டையாடப்பட்டும் கொல்லப்பட்டுள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் விபத்து உள்ளிட்ட காரணங்களினால் 4 புலிகளும், வேட்டையாடப்பட்டு 10 புலிகளும் கொல்லப்பட்டுள்ளன.
இவ்வாறு புலிகளின் எண்ணிக்கை அதிகரித்த செய்தியும், புலிகள் கொலை செய்யப்படும் செய்தியும் வெறும் தேசிய விலங்கு என்னும் தேசப்பற்றோடு மட்டும் பார்த்துக் கடந்து செல்ல வேண்டிய விஷயமல்ல. புலிகள் உயிர்வாழ்வது அதன் இனப்பெருக்கத்தை மட்டுமின்றி, மனித வாழ்க்கைக்கே அடிப்படை என்றும் கூறிவிட முடியும்.
மனிதன் உயிர்வாழ்வுக்கு நீர் அடிப்படை. நீரின் ஆதாரமே நதிகள்தாம். நதிகளின் உற்பத்தி காடுகள் இன்றி சாத்தியமாகாது. காடுகளின் வளர்ச்சிக்குப் புலிகள் செய்யும் பங்கு அளவிட இயலாத ஒன்று. சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படும் வேளையில் புலிகள் மட்டுமின்றி அத்தனை உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டியது நமது பொறுப்பைத் தாண்டிய கடமை என்கிற புரிதல் நமக்கு ஏற்படுதல் அவசியம். இல்லை என்றால், மழையும் இன்றி மரமும் இன்றி மனிதனும் மறைந்து போகலாம்.