முதல்வர் மாவட்ட கலெக்டர் மாற்றம் ஏன்? | Editorji
  1. home
  2. > Minnambalam
  3. > முதல்வர் மாவட்ட கலெக்டர் மாற்றம் ஏன்?
prev iconnext button of playermute button of playermaximize icon
mute icontap to unmute
video play icon
00:00/00:00
prev iconplay paus iconnext iconmute iconmaximize icon
close_white icon

முதல்வர் மாவட்ட கலெக்டர் மாற்றம் ஏன்?

Jun 29, 2019 17:18 IST

தமிழகத்தில் சென்னை, சேலம், வேலூர் மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட ஏழு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நேற்று (ஜூன் 27) இடமாற்றம் செய்யப்பட்டனர். இவர்களில் சேலம் மாவட்ட கலெக்டர் ரோஹினி தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைக் கல்லூரி பதிவாளராக மாற்றப்பட்டுள்ளதுதான் அரசியல் மற்றும் அதிகார வட்டாரங்களில் முக்கியமாக கவனிக்கப்படுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்ட கலெக்டராக இரு வருடங்களாக இருந்த ரோஹினி முதல்வரோடு இணக்கமாகத்தான் இருந்தார். ஆனால் அவர் ஏன் மாற்றப்பட்டார் என்று சேலம் அரசியல், அதிகார வட்டாரத்தில் விசாரித்தோம். “ சேலத்தின் முதல் பெண் கலெக்டரான ரோஹினி முதல்வர் இட்ட பணிகளை எல்லாம் செய்யக் கூடியவராகத்தான் இருந்தார். ஆனால் தேர்தல் நேரத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியாக அவர் பாரபட்சமின்றி கடமையாற்றினார். குறிப்பாக சேலத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வந்தார். கோட்டை மைதானத்தில்தான் பிரச்சாரக் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகேதான் கோட்டை மைதானம் இருக்கிறது. அங்கிருந்து எடப்பாடி வீடு இருக்கும் நெடுஞ்சாலை நகர் வரைக்கும் இரு புறமும் அதிமுக, கூட்டணிக் கட்சிக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. அது தேர்தல் விதிமுறை என்று சொல்லி அகற்ற ரோஹினி கலெக்டர் உத்தரவிட்டார். அதிமுக சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் சேலம் மேற்கு எம்.எல்.ஏ. வெங்கடாசலம் கேட்க, ‘கலெக்டர்தான் எடுக்க சொல்லிவிட்டாங்க’ என்று மாவட்ட வருவாய் அலுவலர் பதில் சொல்லியிருக்கிறார். இது முதல்வருக்கும் எடுத்து செல்லப்பட்டது. தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கையின் போது, தபால் ஓட்டு எண்ணிக்கையில் பல விசாரணை நடத்தினார் ரோஹினி. மற்ற மாவட்டங்களில் தபால் ஓட்டு ரிசல்ட் வந்தபிறகுதான் எண்ண ஆரம்பித்தார்கள். அந்த அளவுக்கு விதிகளை கடுமையாக அமல்படுத்தினார். தேர்தல் முடிவுக்குப் பின் இரண்டடுக்கு பாலம் துவக்க விழாவில் சேலம் திமுக எம்.பி. பார்த்திபனை முறைப்படி அழைக்க வேண்டும் என்று கலெக்டர் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. இதையும் அதிமுக விரும்பவில்லை. அதனால், அழைப்பிதழ் அச்சடிக்காமலேயே திடீரென விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அப்படியும் அந்த விழாவில் பார்த்திபன் பங்கேற்றார். இந்த விழா முடிந்தபிறகு ஒரு மணிக்கு கலெக்டர் முதல்வர் விட்டுக்கு சென்றார். அப்போது ‘எம்பியா பதவியேற்கறதுக்கு முன்னாடியே நீங்க இப்படி பண்ணலாமா?’ என்று கலெக்டரிடமும் கேட்டிருக்கிறார் முதல்வர். அடுத்த ஓரிரு நாட்களில் முதல்வர் சென்னை சென்ற பிறகு திமுக எம்.பி. பார்த்திபன் கலெக்டர் அலுவலகம் சென்று பார்த்தார். இதெல்லாம் சேர்ந்துதான் கலெக்டரை மாற்ற வைத்திருக்கின்றன” என்று கூறினார்கள். நேற்று மாற்றல் உத்தரவு வந்தபோதும் இன்று அலுவலகம் வந்து விவசாயிகளிடம் குறைகேட்டார் ரோஹினி. ’நேற்றுதான் எனக்கு பணியிட மாறுதல் உத்தரவு வந்தது. ஒரு நாள் லீவு எடுத்துக்கிட்டு அடுத்த டூட்டியில சேரலாம். ஆனால், இன்று விவசாயிகள் குறைதீர்ப்பு முகாம் என்பதால் வந்துவிட்டேன். இன்னிக்கு எனக்கு கொடுத்த சால்வைதான் எனக்கு பெரிய பெருமை. நான் ஒரு விவசாய வீட்டுப் பெண்ணா இதை பெருமையா நினைக்கிறேன்’ என்று கண் கலங்கிவிட்டார் கலெக்டர். வழக்கம்போல செய்தியாளர்களிடம் கலகலப்பாக பேசும் ரோஹினி, இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு, ‘எல்லாமே பிரஸ் ரிலீஸ் கொடுத்தாச்சு’ என்று சொல்லிவிட்டு அமைதியாகப் புறப்பட்டுவிட்டார்.