மோடி - ட்ரம்ப் சந்திப்பு: வர்த்தகப் பிரச்சினை தீருமா? | Editorji
  1. home
  2. > Minnambalam
  3. > மோடி - ட்ரம்ப் சந்திப்பு: வர்த்தகப் பிரச்சினை தீருமா?
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0
--

மோடி - ட்ரம்ப் சந்திப்பு: வர்த்தகப் பிரச்சினை தீருமா?

Jun 28, 2019 20:54 IST

ஜப்பான் நாட்டின் ஒசாகாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் சந்தித்துப் பேசியுள்ள நிலையில் இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகிலிருந்தே இந்தியா மீது பல்வேறு வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம், ஸ்டீல் உள்ளிட்ட பொருட்களுக்குக் கூடுதல் வரி விதித்ததோடு விசா கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டன. இதனால் இந்தியாவும் பதிலுக்கு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 29 பொருட்களுக்கான வரியை உயர்த்தியது. அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்வதில் முன்னுரிமை பெற்ற நாடுகளுக்கான பட்டியலில் இருந்து இந்தியாவை அமெரிக்கா நீக்கியது. ஜூன் 26ஆம் தேதி டொனால்டு ட்ரம்ப் இந்தியாவுக்கு எதிராக ட்வீட் செய்திருந்தார். இந்திய அரசு தொடர்ந்து அமெரிக்கா மீது அதிக வரிகளை விதித்து வருவதாகவும், அதை நிறுத்திக்கொள்ளுமாறும் எச்சரித்திருந்தார். மேலும், இது தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும் கூறியிருந்தார். இதுபோன்ற சூழலில் இன்று ஒசாகாவில் இரண்டு நாள் ஜி20 மாநாடு தொடங்கியுள்ளது. இம்மாநாட்டில் பிரதமர் மோடியும், அதிபர் ட்ரம்ப்பும் சந்தித்துப் பேசினர். இது, மோடி மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் ட்ரம்ப்புடனான முதல் சந்திப்பாகும். இருதரப்பு வர்த்தகப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கையில் ஈடுபடுமாறு ட்ரம்ப்பும் மோடியும் கேட்டுக்கொண்டனர். இம்மாநாட்டில் சவுதி அரேபிய அரசர் முகமது பின் சல்மான், தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் ஆகியோருடனும் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். ட்ரம்ப்புடனான சந்திப்பில் ஈரானுடனான உறவு, 5ஜி தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் ராணுவ உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்புக்கு முன்னர் இந்தியா மீதான ட்ரம்ப்பின் ட்வீட் எச்சரிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனெனில், உலக வர்த்தக அமைப்பின் வரையறைகளை விடக் குறைவான வரிகளையே இந்தியா விதிக்கிறது. இருப்பினும் இந்தியா மீது வரி உயர்வு குற்றச்சாட்டை அமெரிக்கா வைத்துள்ளது. தொழில் துறை உற்பத்திப் பொருட்களுக்கான இந்தியாவின் சராசரி இறக்குமதி வரி 10.2 சதவிகிதம் ஆகும். இந்தியாவின் சராசரி இறக்குமதி வரி விகிதமானது அர்ஜெண்டினா, பிரேசில், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பிடும் அளவில்தான் இருக்கிறது. இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்காவில்தான் கூடுதலாக வரி விதிக்கப்படுகிறது. அங்கு ஆல்கஹால் பானங்களுக்கு 150 சதவிகித வரியும், மோட்டார் சைக்கிளுக்கு 50 சதவிகித வரியும், செல்போன் பாகங்களுக்கு 20 சதவிகித வரியும், புகையிலைக்கு 350 சதவிகித வரியும், பட்டாணிக்கு 164 சதவிகித வரியும், காலணிகளுக்கு 48 சதவிகித வரியும் விதிக்கப்படுகிறது. ஆனால், இந்தியாதான் அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக அமெரிக்க அரசு குற்றஞ்சாட்டுகிறது. இந்நிலையில் மோடி - ட்ரம்ப் சந்திப்புக்குப் பிறகு இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.