கதவடைத்த பன்னீர்: திமுகவில் இணையும் தங்கம் | Editorji
  1. home
  2. > Minnambalam
  3. > கதவடைத்த பன்னீர்: திமுகவில் இணையும் தங்கம்
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

கதவடைத்த பன்னீர்: திமுகவில் இணையும் தங்கம்

Jun 28, 2019 18:08 IST

அமமுகவில் இருந்து வெளியேறிய தங்க தமிழ்ச்செல்வன், இன்று (ஜூன் 28) திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார். தினகரனுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப் பகைத்துக் கொண்டதால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் தங்க தமிழ்ச்செல்வன். தினகரனுக்கும் அவருக்கும் இடையில் தேர்தல் முடிவுகளுக்குப் பின் கருத்து வேறுபாடுகள் அதிகமானது. இதைப் பயன்படுத்தி தங்கத்தை அதிமுகவுக்குக் கொண்டுவரும் பணியில் வேகம் காட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தேனி மாவட்ட அதிமுகவில் ஓ.பன்னீரை வெளிப்படையாக எதிர்த்து அரசியல் செய்துவந்தவர் தங்கம். அவரை மீண்டும் தாய்க் கழகத்துக்குள் கொண்டுவருவதன் மூலம் பன்னீருக்கும் எம்.பி.யான அவரது மகன் ரவீந்திரநாத்துக்கும் செக் வைக்கலாம் என்று கருதினார் எடப்பாடி. இதற்காக அமைச்சர் தங்கமணி மூலமாக தங்கத்திடம் பேச்சுவார்த்தை நடந்து அதிமுகவுக்குத் திரும்பும் முடிவுக்கு வந்துவிட்டார் தங்கம். அதன் வெளிப்பாடாகத்தான், ‘அண்ணன் எடப்பாடி அரசாங்கத்தின் பிளாஸ்டிக் ஒழிப்பு ரொம்பப் பிடிக்கும். தேர்தல் வியூகத்தில் தினகரனை மிஞ்சிவிட்டார் அண்ணன் எடப்பாடி’ என்றெல்லாம் பேட்டி கொடுத்தார். ஆனால் தங்கம் அதிமுகவுக்குள் வருவதை ஓ.பன்னீர் விரும்பவில்லை. கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அவரே இருப்பதால் தங்கத்தை உள்ளே விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியிடமும் இதுபற்றி தெளிவாகக் கூறிவிட்டார். பன்னீரின் சொந்த மாவட்டமான தேனி மாவட்ட அதிமுக, ‘தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவுக்கு வருவதை அனுமதிக்கக் கூடாது’ என்று தீர்மானமே நிறைவேற்றியது. இந்த நிலையில் திடீரென திமுக தங்கத்தை நெருங்க ஆரம்பித்தது. ஏற்கனவே அமமுகவில் இருந்து வெளியேறி திமுகவுக்குச் சென்ற செந்தில்பாலாஜி அடிக்கடி தங்க தமிழ்ச்செல்வனுடன் பேசிவந்திருக்கிறார். சில நாட்களுக்கு முன் கடைசியாக, ‘அண்ணே... உங்களுக்கு இது இறுதி வாய்ப்புண்ணே... தேனி மாவட்டம் மட்டுமில்ல, தென்மாவட்ட திமுகவிலேயே நீங்க கொடி நாட்ட அரிதான சந்தர்ப்பம் வந்திருக்கு. இத மிஸ் பண்ணிடாதீங்க’ என்று கேட்டிருக்கிறார். அதிமுகவில் சேருவதற்காக நடந்த பேச்சுவார்த்தையில், தங்கம் தனக்கான சில தேவைகளை முன் வைத்தார். ஆனால், அதிமுக அவர் கேட்டதைவிட குறைத்தது. இந்த நிலையில் பன்னீர் எதிர்ப்பு வேறு கிளம்பியதால் செபா மூலம் திமுக பக்கம் கவனம் திருப்பினார் தங்கம். ஏற்கனவே, ‘நான் விவரம் அறிஞ்சதுலேர்ந்தே கருணாநிதி ஒழிகனு சொல்லியே அரசியல் பண்ணவன். அதனால திமுக எனக்குச் சரிப்பட்டு வராது என்று வெளிப்படையாக மறுத்தவர் தங்கம். மேலும் திமுகவுக்குச் சென்றால் அமமுகவில் செலவு பண்ணியதைப் போலவே அங்கேயும் பண்ண வேண்டும், வருமானமே இருக்காது என்றும் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வந்திருக்கிறார். இதனால்தான், அதிமுக பக்கம் போக முடிவெடுத்தவருக்கு ஓ.பன்னீர் கதவுகளை அடைத்ததால், வேறு வழியின்றி திமுக செல்கிறார். இன்று காலை சட்டமன்றம் கூடியதும் சட்டமன்ற மறைந்த உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு சில நிமிடங்களில் அவை ஒத்தி வைக்கப்படும். அதன்பின் அறிவாலயத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. அப்போதே அறிவாலயத்துக்கு தங்க தமிழ்ச்செல்வன் செல்கிறார். மு.க.ஸ்டாலினைச் சந்தித்து திமுகவில் இணைகிறார் என்பதே தங்கத்தின் தற்போதைய திட்டம். திமுகவுக்குச் செல்வது என்ற முடிவெடுத்துவிட்ட தங்க தமிழ்ச்செலவ்ன், நேற்று இரவு தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் கவர் போட்டோவாக தினகரனுடன் தான் இருந்த படத்தை மாற்றி, தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தும் படத்தை புதிய கவர் போட்டோவாக வைத்திருக்கிறார். தென்மாவட்டத்தில் திமுகவுக்கு முக்குலத்தோர் வாக்குகளைக் கொண்டுவரும் வேலையில் ஈடுபடுவேன் என்பதை இதன் மூலம் சூசகமாகச் சொல்கிறாரோ தங்கம் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.