தண்ணீர் பஞ்சம்: ரயில்வே ஸ்டேஷனும் தப்பிக்கவில்லை! | Editorji
  1. home
  2. > Minnambalam
  3. > தண்ணீர் பஞ்சம்: ரயில்வே ஸ்டேஷனும் தப்பிக்கவில்லை!
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

தண்ணீர் பஞ்சம்: ரயில்வே ஸ்டேஷனும் தப்பிக்கவில்லை!

Jun 27, 2019 12:48 IST

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் என்று சொன்னபோது, பொய் என்றார்கள். குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தண்ணீர் விநியோகம் சரியாகச் செய்யப்படவில்லை என்று விளக்கம் கொடுத்தார்கள். பிறகு, சென்னை உள்ளிட்ட சில இடங்களில் தண்ணீர் இல்லை எனக்கூறி தமிழகத்தின் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து தண்ணீர் கொண்டுவர ஏற்பாடு செய்திருப்பதாகச் சொன்னார்கள். தமிழக அரசே, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சம் குறித்து மூடி மறைத்துப் பேசிக்கொண்டிருப்பதால், மத்திய அரசிடமிருந்து தண்ணீர் பஞ்சத்துக்கான எவ்வித உதவியும் கோரப்படவும் இல்லை; கொடுக்கப்படவும் இல்லை. இப்படிப்பட்ட நிலையில்தான், மத்திய அரசின் ரயில் நிலையங்களுக்கே தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது. எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் தற்போது தண்ணீர் வரவில்லை. ரயிலில் பயணிக்க தாம்பரம் சென்ற பல பயணிகளும், தண்ணீர் விநியோகிக்கப்படாதது குறித்து புகார் தெரிவித்ததையும், புலம்பிக்கொண்டிருப்பதையும் பார்க்க முடிந்தது. ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு, ரயில் நிலையங்களில் 8 ரூபாய்க்குக் கிடைக்கும் ஒரு லிட்டர் தண்ணீர் வரப்பிரசாதம். வீட்டிலிருந்தே பல லிட்டர்களை சுமந்துகொண்டுவரும் சிரமங்கள் இன்றி, ரயில் நிலையத்தில் கிடைக்கும் குளிர்ந்த நீர் பயணிகளின் சுமையைப் பெருமளவில் தீர்த்தது. அதிலும், கோடைக்காலத்தில் அதன் அருமையைப் பற்றிச் சொல்லவில்லை. ஆனால், அதே கோடைக்காலத்தில் தவித்துக்கொண்டிருக்கும் சென்னையின் சீற்றத்திலிருந்து, ரயில் நிலையமும் தப்பிக்க முடியவில்லை. ரயில் நிலைய நீர் விநியோக இயந்திரங்களில் நீர் வராததால், வெளியிலிருந்து 25 லிட்டர் கேன்களை வாங்கிக்கொண்டு வந்து அதன்மூலம் சிறிய தண்ணீர் கேன்களில் நிரப்பி விற்றுக்கொண்டிருக்கிறது இந்திய ரயில்வே துறை. அதிக விலைக்கு இந்த தண்ணீர் கேன்கள் வாங்கப்படுவதால், விற்கப்படும் தண்ணீரின் விலையும் அதிகரித்திருக்கிறது. ஒரு தண்ணீர் பாட்டிலின் சாதாரண விலையைவிடக் கூடுதலாக 2 ரூபாய் சேர்த்து விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. எப்போதும் 8 ரூபாய்க்கு வாங்கும் பாட்டிலின் விலை, 10 ரூபாய்க்கு விற்கப்படுவதால் தண்ணீர் விற்பவருடன், மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைக் காண முடிந்தது.