சாதி மோதலைத் தூண்டும் முகநூல் பதிவுகள் | Editorji
  1. home
  2. > Minnambalam
  3. > சாதி மோதலைத் தூண்டும் முகநூல் பதிவுகள்
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

சாதி மோதலைத் தூண்டும் முகநூல் பதிவுகள்

May 30, 2019 15:36 IST

சமூக வலைதளங்களில் சாதி மோதலை உருவாக்கும் வகையில் பதிவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரியலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விசிக தலைவர் திருமாவளவன் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சந்திரசேகரைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். நள்ளிரவு தாண்டி அறிவிக்கப்பட்ட திருமாவளவனின் வெற்றியை விசிகவினர் கொண்டாடிவரும் அதே வேளையில், சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறித்து சமூக வலைதளங்களில் திமுக - விசிகவினர் மத்தியில் கருத்து மோதல்கள் ஏற்பட்டன. இதையடுத்து விசிக தலைவர் திருமாவளவன், “சமூக வலைதளங்களில் கூட்டணி கட்சியினர் குறித்து விசிகவினர் விமர்சனம் செய்யக் கூடாது” என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். இது ஒருபுறமிருக்க திருமாவளவனின் வெற்றியை மையப்படுத்தி, அரியலூர் மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருக்கும் இரு சமூகத்தினரும் ஒருவரையொருவர் கடுமையாகத் திட்டி டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டும் முகநூலில் பதிவிட்டும் வருகின்றனர். இதுபோலவே பானை சின்னத்துக்கு வாக்களித்ததாக திமுகவிலுள்ள தங்களது சமூகத்தினரை விமர்சித்துக் குறிப்பிட்ட சமூகத்தினர் பதிவிட்டுவருகின்றனர். இதைத் தடுக்க வேண்டுமென அரியலூர் திமுக சார்பில் காவல் கண்காணிப்பாளர், உதவி ஆட்சியர் ஆகியோரிடம் நேற்று (மே 29) புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், “நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலை முன்வைத்து சிலர் இரண்டு சமுதாயத்தின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் விதத்திலும், சாதிய மோதலை உருவாக்கும் நோக்கிலும் முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அருவருக்கத்தக்க வகையில் பேசியும் எழுதியும் வருகின்றனர். மேலும், திமுக தலைமை குறித்தும், திமுக குறித்து அவதூறாகப் பதிவு செய்து வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் பொது அமைதிக்குப் பங்கம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாவட்ட, ஒன்றிய அளவில் அனைத்துக் கட்சி நிர்வாகிகளை அழைத்துப் பேசி சாதி மோதல் உருவாகாமல் தடுத்திட வேண்டும் என்றும், மோதல் உருவாவதற்குக் காரணமாக இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தியுள்ளனர். திமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் பெருநற்கிள்ளி மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக ஒன்றியச் செயலாளர்கள் இந்தப் புகாரை அளித்துள்ளனர். இதுதொடர்பாக தா.பழூர் ஒன்றிய திமுக செயலாளர் க.சொ.க.கண்ணனிடம் பேசினோம். “தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மீன்சுருட்டி அருகேயுள்ள முத்துச்சேர்வமடம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபர் வன்னியர் சமூகத்தினரைக் கடுமையாக திட்டி வீடியோ வெளியிட்டிருந்தார். அவர் தன்னை விசிக என்றும் கூறிக்கொள்கிறார். இதேபோல செந்துறையில் பாமகவைச் சேர்ந்த ஒருவர், பட்டியலினத்தவர்களுக்கு எதிராக வன்முறையாகப் பேசி வீடியோ பதிவிட்டிருக்கிறார். இதுபோல சமூக வலைதளங்கள் மூலம் சாதி மோதலை உருவாக்கும் நோக்கில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். ஏற்கனவே அரியலூர் மாவட்டம் சாதிய பதற்றம் நிறைந்த பகுதி. இதுபோன்ற சிலரின் செய்கையால் மோதல் ஏற்பட்டு அது சாதிய பிரச்சினையாக உருவாகும் அபாயம் உள்ளது. அதைத் தடுக்கும் பொருட்டே புகார் அளித்தோம்” என்றார். மேலும், “திமுக தலைவர்களை இழிவாக விமர்சித்து தமிழகம் முழுவதிலும் இருந்து சமூக வலைதளங்களில் பலர் இழிவான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்” என்றும் அவர் தெரிவித்தார். சமூக வலைதளங்களில் சாதிக் கலவரத்தை உண்டாக்கும் வகையில் அவதூறு பரப்பினால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என அரியலூர் மாவட்ட எஸ்பி சீனிவாசன் எச்சரித்திருக்கிறார். சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் இதுபோன்ற கருத்துகளால் அரியலூர் மாவட்டத்தில் பொன்பரப்பி சம்பவம் போல மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுவிடக் கூடாது. இரு சமூகத்தினரிடையே அமைதி நிலவ வேண்டும் என்பதுதான் பொதுவானவர்களின் கருத்தாக உள்ளது.