உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்தியா உட்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன. இத்தொடர் தொடங்க இன்னும் ஓரிரு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பங்கேற்கும் அணிகளின் நிறை குறைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து மின்னம்பலத்தில் தொடராகப் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று, 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் கோப்பையை இழந்த இலங்கை அணியின் நிறை குறைகள் குறித்துக் காண்போம். இலங்கை அணி ஒருநாள் போட்டிகளில் தலைசிறந்த அணிகளில் ஒன்றாக இருந்த இலங்கை அணி இப்போது பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. சங்கக்கரா, ஜெயவர்த்தனே போன்ற அனுபவ வீரர்களின் ஓய்வுக்குப் பிறகு போதிய அனுபவமற்ற வீரர்களுடன் விளையாடி வரும் அந்த அணி பெரும் சரிவுகளைச் சந்தித்துள்ளது. தற்போது ஐசிசி ஒருநாள் போட்டி அணிகளுக்கான பட்டியலில் ஒன்பதாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளபோதும், இந்த உலகக் கோப்பையை வென்று மீண்டும் தங்களை நிரூபிக்கும் முனைப்பில் இலங்கை அணி வீரர்கள் உள்ளனர். அபாயகரமான அணியாக இருக்காவிட்டாலும், 1996ஆம் ஆண்டு உலகக் கோப்பையை யாரும் எதிர்பார்க்காத வகையில் வென்ற அந்த அணி இத்தொடரில் விஸ்வரூபம் எடுத்தாலும் ஆச்சரியமில்லை. அணியின் பலம் அனுபவ வீரரான ஏஞ்சலோ மேத்யூஸ் முழு உடல் தகுதியுடன் அணிக்குத் திரும்பியுள்ளது அந்த அணிக்குப் பலமாகும். அதேபோல, இறுதி ஓவர்களின் ஸ்பெஷலிஸ்ட் பவுலர் மலிங்கா அந்த அணிக்குக் கூடுதல் பலம் சேர்க்கிறார். சிறிது இடைவெளிக்குப் பிறகு அணிக்குத் திரும்பிய மலிங்கா சமீப காலங்களில் சிறப்பாகப் பந்துவீசி நம்பிக்கையளிக்கிறார். ஐபிஎல் தொடரில் கோப்பை வென்ற மும்பை அணியின் வெற்றிப் பயணத்தில் மலிங்காவின் பங்களிப்பும் மிக முக்கியமானதாகும். அவர் மொத்தம் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பலவீனம் இலங்கை அணியில் வீரர்கள் தேர்வு விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. வீரர்கள் ஓய்வில்லாமல் விளையாடுவது, விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லாவைத் தேர்ந்தெடுக்காதது போன்ற காரணங்கள் அந்த அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தலாம். நட்சத்திர வீரர்களோ, நம்பிக்கைக்குரிய வீரர்களோ அந்த அணியில் குறிப்பிடும்படியாக இல்லை. சுழல் பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தமுடியாமல் தடுமாறி வருவது அந்த அணியின் மிகப் பெரிய பலவீனமாகும். 2011 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியில் போராடித் தோல்வியுற்ற இலங்கை அணி, இந்த ஆண்டில் கோப்பையை வெல்லுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.