ஓ.பன்னீரின் 'பொதுச் செயலாளர்’ திட்டம்: அதிர்ச்சியில் எடப்பாடி

  1. home
  2. > Minnambalam
  3. > ஓ.பன்னீரின் 'பொதுச் செயலாளர்’ திட்டம்: அதிர்ச்சியில் எடப்பாடி
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

ஓ.பன்னீரின் 'பொதுச் செயலாளர்’ திட்டம்: அதிர்ச்சியில் எடப்பாடி

May 25, 2019 18:10 IST

பொதுத் தேர்தல் முடிந்தபிறகு தலைமைச் செயலாளர், துறைச் செயலாளர்கள், முதல்வரின் செயலாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் முதல்வரை சந்திப்பது வழக்கம். ஏனென்றால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் அவர்கள் இதுவரை முதல்வரை சந்திக்க அவசியமில்லை. தேர்தல் முடிவுகளுக்குப் பின் தானாகவே தேர்தல் நடத்தை விதிமுறைகள் காலாவதியாகிவிடுவதால் உயரதிகாரிகள் முதல்வரையோ, பிரதமரையோ சந்திப்பது வழக்கம். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இதுவரை அப்படி உயரதிகாரிகள் சந்திக்கவில்லை. மக்களவைத் தேர்தல் முடிவுகளில் அதிமுக துடைத்து எறியப்பட்டுவிட்ட நிலையில், மாநில சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆட்சியைத் தக்க வைக்கத் தேவையான 9 இடங்கள் அதிமுகவுக்குக் கிடைத்துவிட்டன. என்றாலும் முதல்வர் எடப்பாடி திருப்தியாக இல்லை. அதனால்தான் அவர் அதிகாரிகளைக் கூட சந்திக்கவில்லை என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில். எடப்பாடியின் அதிர்ச்சி மற்றும் அப்செட்டுக்குப் பின்னால், தேர்தல் முடிவு மட்டுமில்லை, தேர்தல் முடிவுக்குப் பின்னால் அதிமுகவில் நடக்கும் இன்னொரு அரசியல் நகர்வும் இருக்கிறது. அதுபற்றி அதிமுக வட்டாரத்தில் விசாரித்தோம். “எடப்பாடியின் ஆட்சிக்கு எதிராகத்தான் தேர்தலில் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். 22 தொகுதி இடைத்தேர்தலில் 9 தொகுதிகளை எப்படிப் பெற்றோம் என்பது ஒவ்வொரு அதிமுக தொண்டனுக்கும் தெரியும். அவ்வளவு பணம் இறைக்கப்பட்டது. ஏற்கனவே எடப்பாடி மக்களவைத் தேர்தலில் தீவிர கவனம் செலுத்தவில்லை என்பது பாஜகவுக்கு புகாராகப் போனது. அதனால்தான் இப்படி ரிசல்ட் என்பதை பாஜகவினரும் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் இப்படித்தான் இருக்கும் என்று எதிர்பார்த்த ஓ.பன்னீர் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே காசி போய் சில நாட்கள் தங்கினார், டெல்லியில் சில நாட்கள் பாஜகவினருடன் பேசினார். அவரது திட்டம் பாஜகவில் சேர்வது அல்ல. தேர்தல் முடிவுக்குப் பின் அதிமுக என்ற கட்சிக்கு தான் பொதுச் செயலாளராக ஆக வேண்டும். அதிமுக பொதுக்குழு விரைவில் கூட்டப்பட வேண்டிய நிலையில் தன்னை பொதுச் செயலாளர் ஆக்குவதற்கான ஆதரவை தேர்தல் ஆணையம் மூலம் பாஜக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைதான் ஓ.பன்னீரின் காசிப் பயண அஜெண்டா. இந்த விஷயங்கள் இப்போது எடப்பாடிக்குத் தெரியவர ஆட்சி ஆட்சி என்றே சிந்தித்து கட்சி பற்றிய விஷயங்களில் கவனம் செலுத்தாமல் போய்விட்டோமே என்ற அப்செட்டில் இருக்கிறார். அதனால்தான் தேர்தல் முடிவுக்குப் பின் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே பார்த்தவர் அதிகாரிகளை எல்லாம் சந்திக்கவில்லை. திமுக 13 இடங்களை ஜெயித்ததன் மூலம் சட்டமன்றத்தில் அதிமுகவுக்கு வெகு அருகே வந்துவிட்ட நிலையில், ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான அனைத்து வேலைகளிலும் இறங்கிவிட்டது. ஒருவேளை விரைவில் சட்டமன்ற பொதுத் தேர்தல் வந்தால் ஓ.பன்னீர் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி அதிமுகவை முழுதாகத் தன் கைக்குள் கொண்டுவர இப்போதே திட்டமிட்டுக் காய்நகர்த்த ஆரம்பித்துவிட்டார். இதை அறிந்த எடப்பாடி அடுத்த கட்ட திட்டங்களில் ஈடுபட்டுள்ளார்” என்கிறார்கள். அலைகள் எப்படி ஓய்வதில்லையோ, அதுபோல அதிமுகவிலும் உட்கட்சி அலைகள் ஓய்வதில்லை.