1. home
  2. > Minnambalam
  3. > விமர்சனம்: தேவராட்டம்!
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

விமர்சனம்: தேவராட்டம்!

May 02, 2019 11:47 IST

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் கெளதம் கார்த்திக், மஞ்சிமா மோகன், சூரி நடித்துள்ள படம் தேவராட்டம். மதுரையில் வக்கீலுக்குப் படித்துக்கொண்டிருக்கும் கெளதம் கார்த்திக் எங்கு அநியாயம் நடந்தாலும் முன்னே வந்து தட்டிக்கேட்பவர். இதே குணத்தால் இவரது அப்பா (வேல ராமமூர்த்தி) இறந்ததால், கெளதமை வன்முறையின் பக்கம் சேராமல் சிவில் லாயரிடம் பயற்சி எடுக்க அனுப்புகிறார் அக்கா (விநோதினி). அங்கே ஆறு அக்காக்கள், தாய்மாமன்கள் என அமைதியாக வாழ்கிறார் கெளதம். கூட்டுப் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட தனது மகளுக்கான நீதி கோரித் தந்தை அல்லாடுகிறார். எங்குமே நியாயம் கிடைக்காமல் பரிதவிக்கும் அவரை, கௌதமின் காதலி மஞ்சிமா மோகன் கௌதமிடம் அழைத்து வருகிறார். குற்றவாளி மதுரையில் கட்டப் பஞ்சாயத்து செய்துகொண்டிருக்கும் வில்லன் பெப்சி விஜயன் மகனிடம் தஞ்சமடைகிறான். குற்றவாளியைக் காப்பாற்ற வில்லன் செய்யும் கொடூரமான கொலைகளால் உசுப்பப்படும் கௌதம், வில்லனை எதிர்கொள்ள எதற்கும் தயாராகிறான். அதன் பின் நடக்கும் ரத்த அத்தியாயமே மீதிக் கதை. மிகவும் பழக்கப்பட்ட சினிமாவை முத்தையா தனது வழக்கமான அம்சங்களான சென்டிமென்ட், குடும்ப உறவுகள், நீதி சார்ந்த வசன வகுப்புகள், ரத்தம் ஆகியவற்றைக் கலந்து தருகிறார். தன் மீது சாதி சார்ந்த விமர்சனங்கள் எழும்போது முத்தையா அதை மறுக்கிறார். ஆனால், ‘கண்டவுடன் காதலிக்கலாம். ஆனா, கண்டவனைத்தான் காதலிக்கக் கூடாது’, ‘இவனுக நானூறு ரூவா ஜீன்ஸையும், இருநூறு ரூவா பனியனையும் போட்டுக்கிட்டு புள்ளைகள ரோட்டுல நடமாட விட மாட்டேங்குறானுக’ என்பது போன்ற வசனங்கள் அவருடைய சாதிச் சார்பை அப்பட்டமாகக் காட்டிவிடுகின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாடெங்கும் பரவிவரும் வேளையில் அதை மையப்படுத்திக் கதையமைத்திருப்பது கவனிக்கவைத்தாலும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், இல்லையேல் கருவறுக்கப்பட வேண்டும் என முடித்திருப்பது மேலோட்டமான வன்முறைத் தீர்வாகவே நிற்கிறது. படத்தையும் அதேபோன்ற மேலோட்டமான மனநிலையோடுதான் எடுத்திருக்கிறார்கள். பாலியல் வன்முறைக்குத் தீர்வு பதில் வன்முறைதான் என்னும் அணுகுமுறை ஆக்கபூர்வமான எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. வில்லனாக பெப்சி விஜயனை அறிமுகப்படுத்தும்போது காரணமேயில்லாமல், எதற்காக அவர் அத்தனை கொலைகளைப் புரிய வேண்டும் எனத் தெரியவில்லை. குடும்பம் சார்ந்த படமா இல்லை வன்முறை கலந்த ஆக்ஷன் சினிமாவா என்ற குழப்பம் படம் நெடுகிலும் உள்ளது. கெளதம் கார்த்திக்கின் எனர்ஜி பாடல்கள், சண்டைக் காட்சிகளில் நன்கு கைகொடுக்கிறது. ஆனால், உணர்வுபூர்வான காட்சிகளில் முதிர்ச்சியின்றியே வெளிப்படுகிறார். மஞ்சிமா மோகனுக்குப் பெரிய பங்கில்லை என்றாலும் கொடுத்திருக்கும் கதாபாத்திரத்துக்குச் சரியாகவே பொருந்தியிருக்கிறார். படத்தின் பலம் என்றால் அக்கா மாமாவாக வரும் விநோதினியும் போஸ் வெங்கட்டுமே. தங்களது நடிப்பினால் பெரிய அளவில் படத்தைக் காப்பாற்ற முயன்றிருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையில் பாடல்களும் பின்னணியிசையும் படத்தின் வேகத்துக்கும் உணர்ச்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றன. டெக்னிக்கல் குழு (ஒளிப்பதிவு சக்தி சரவணன்) கடுமையாக உழைத்திருக்கிறது. குடும்ப சென்டிமென்டாக நன்றாக வந்திருக்க வேண்டிய படம், நிரம்பி வழியும் வன்முறை காட்சிகளாலும், பிற்போக்குத்தனமான அணுகுமுறையினாலும் மனதில் நிற்கத் தவறுகிறது.