தொழிற்துறை என்பது சுரங்கம், உற்பத்தி, எரிசக்தி, கட்டுமானம் முதலிய துறைகளைக் கொண்டது. இந்தியாவில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாகவே, தேச மொத்த உற்பத்தியில் உற்பத்தித் துறையின் பங்கு சராசரியாக 15 விழுக்காடாகவும், ஒட்டுமொத்தத் தொழிற்துறையின் பங்கு சராசரியாக 27 விழுக்காடாகவும் இருந்து வந்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் நடந்துவிடவில்லை. இதை மாற்றிக்காட்டுவோம் என்று மோடி அரசு “மேக் இன் இந்தியா” திட்டத்தை அறிவித்தது.
2022 க்குள் உற்பத்தித் துறையில் ஆண்டுக்கு 12-14 விழுக்காடு வளர்ச்சி, தேச மொத்த உற்பத்தியில் அத்துறையின் பங்கை 25 விழுக்காடாக உயர்த்துவது, அத்துறையில் 10 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது இத்திட்டத்தின் குறிக்கோள்கள்.
மேக் இன் இந்தியா இதுவரை எதையும் சாதிக்கவில்லை என்பதைப் புள்ளிவிவரங்களோடு நிறுவுகிறார் பொருளாதார அறிஞர் ஆர். நாகராஜ்.
தொழில் தொடங்குவதற்கும், தொழில் நடத்துவதற்கும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள், நெறிமுறைகள் இருப்பதால்தான் இந்தியாவில் தொழில் செய்வதற்கேற்ற சூழல் உருவாகவில்லை; அதன் விளைவாக முதலீடுகளும் வருவதில்லை என்று சொல்லப்பட்டது. தொழில் செய்வதற்கு எந்தெந்த நாடுகளில் ஏதுவான சூழல் இருக்கிறது என்பதன் அடிப்படையில் உலக வங்கி ஒவ்வொரு ஆண்டும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலை (Ease of Doing Business Index) வெளியிடும். 190 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில் 2014இல் இந்தியா 142 ஆம் இடத்தைப் பிடித்தது.
இந்தப் பட்டியலில் முன்னேறினால்தான் அந்நிய நேரடி முதலீடுகள் இந்தியாவில் பெருகும் என்று கூறி, ஒன்றிய அரசும் பல மாநில அரசுகளும் தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களை நீர்த்துப்போகச் செய்தன. தொழிற்சாலைகளில் இருக்கும் இயந்திரங்கள், உபகரணங்கள் பாதுகாப்பானதாக இருக்கின்றனவா என்பதை அரசு மேற்பார்வையாளர் சோதித்துப் பார்க்கத் தேவையில்லை என்றும் சட்டம் மாற்றப்பட்டது.
2018இல் இந்தப் பட்டியலில் இந்தியா 77 ஆவது இடத்தைப் பிடித்தது. இது இந்த அரசின் முயற்சிகளுக்கான வெற்றியாகப் பார்க்கப்பட்டது. ஆனால், அப்பட்டியலைத் தயாரிக்கும் முறையில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களால்தான் இந்தியா 77 ஆவது இடத்தைப் பிடித்தது என்றும், அந்த மாற்றங்கள் விவாதத்திற்கு உரியவை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உற்பத்தித் துறை வேகமாக வளர, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு பெரியளவில் அரசு செலவு செய்ய வேண்டும்; தெளிவான தொழிற்துறைக் கொள்கை ஒன்று வேண்டும்.
இவற்றையெல்லாம் செய்யாமல், சட்டங்களை, கட்டுப்பாடுகளை நீர்த்துப்போகச் செய்வதால், அந்நிய முதலீடுகள் இந்தியாவிற்குள் வரும் என்று பகல்கனவு காண்பது வீண். தொழில் செய்வதற்கு சாதகமான சூழல் உள்ள நாடுகளின் பட்டியலில் மக்கள் சீனம் முன்னிலையில் இல்லாதபோதும் அங்கு உற்பத்தித் துறை வளர்ச்சி மிகச்சிறப்பாக இருந்தது. அதற்கான காரணங்களை நாம் ஆராய வேண்டும்.