இலங்கை குண்டுவெடிப்பு சம்பந்தமான விசாரணையில் இலங்கைப் புலனாய்வுத் துறையும், இந்தியப் புலனாய்வுத் துறையும் கிட்டத்தட்ட ஒரே புள்ளியை நோக்கிச் செல்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
கடந்த 26ஆம் தேதி கொழும்பில் சர்வதேச செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் சிறிசேனா, “போதை மருந்துக் கடத்தலுக்கு எதிராக நான் தொடர்ந்து பரப்புரை செய்துவருகிறேன். போதை மருந்துகளுக்கு எதிரான போருக்கும், இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கும் என்பதை மறுக்க முடியவில்லை.
போதைப் பொருளுக்கு எதிரான தேசம் தழுவிய பிரச்சாரத்தை இலங்கை கடந்த சில நாட்களாக தீவிரப்படுத்தியிருக்கிறது. 2020ஆம் ஆண்டுக்குள் போதை மருந்து இல்லாத இலங்கையை உருவாக்க வேண்டும் என்பது எனது இலக்கு. இந்த போதை மருந்துக்கு எதிரான எனது போர், தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்குக் காரணமாக இருக்கக் கூடும்” என்று தெரிவித்தார் அதிபர் சிறிசேனா.
இதைத் தவிர, “இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை ஐஎஸ் ஐஎஸ் இயக்கத் தொடர்புடையவர்கள் என்ற கோணத்தில் விசாரித்துவருகிறோம். எங்களுக்கு மேலும் இருக்கும் முக்கிய சந்தேகம் என்னவெனில் இந்தத் தற்கொலைப் படையினரில் சிலர் இந்தியாவில் கற்பிக்கப்பட்டும், பயிற்சி அளிக்கப்பட்டும் இங்கே அனுப்பப்பட்டிருக்கலாம் என்பதே. அதிலும் குறிப்பாக அவர்களின் தளம் தமிழ்நாடாக இருக்கலாம் என்பதே எங்கள் சந்தேகம்” என்று அடையாளம் தெரிவிக்க விரும்பாத மூத்த புலனாய்வு அதிகாரி ஒருவர் கூறியதாக தி இந்து தகவல் வெளியிட்டிருக்கிறது. இதுபற்றி மின்னம்பலத்தில், ‘ஹாஷிம் தமிழகத்தில் பயிற்சி பெற்றவரா?’ என்ற தலைப்பில் எழுதியிருந்தோம்.
இலங்கை அதிபர் சிறிசேனா, இலங்கை ராணுவப் புலனாய்வுத் துறையினரின் சந்தேகங்களுக்கும் யூகங்களுக்கும் வலு சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது நேற்று (ஏப்ரல் 29) ஆம் தேதி மத்திய அரசின் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) நடத்திய ஆபரேஷன்.
பயங்கரவாதத் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் என்.ஐ.ஏ. கடந்த ஞாயிற்றுக் கிழமை கேரளாவில் மூன்று இடங்களில் ஐ.எஸ். இயக்கத்தின் ஆதரவாளர்கள் இருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து சோதனை நடத்தினார்கள்.
இலங்கை குண்டுவெடிப்புகளை ஒருங்கிணைத்த ஜஹ்ரன் ஹாஷிம் தென்னிந்திய, தமிழகத் தொடர்புகளைப் பெற்றிருந்தது பற்றி தகவல் கிடைத்ததைத் தொடர்ந்தே இந்தச் சோதனைகளை நடத்தியது என்.ஐ.ஏ.
காசர்கோடு பகுதியில் உள்ள இருவர், பாலக்காட்டில் ஒருவர் என்று மூன்று நபர்களைக் குறிவைத்து என்.ஐ.ஏ. தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. இரண்டு நாட்கள் தொடர்ந்த சோதனையில் நேற்று பாலக்கட்டில் ரியாஸ் அபுபக்கர் என்பவரை பிடித்தது என்.ஐ.ஏ. அவரிடம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஜாஹிர் நாயக்கின் உரை அடங்கிய வீடியோக்கள் மட்டுமல்ல, இலங்கை குண்டுவெடிப்பின் சூத்திரதாரியாக கருதப்படும் ஜஹ்ரன் ஹாஷிம் மத வெறியைத் தூண்டும் வகையில் பேசிய வீடியோக்களும் ரியாஸிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ. வட்டாரங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.
இன்று ரியாஸ் கொச்சியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
ஜஹ்ரன் ஹாஷிம் தென்னிந்தியாவில் சில மாதங்கள் இருந்திருக்கிறார் என்று இலங்கை புலனாய்வுத் துறை தெரிவித்திருந்தது. இலங்கை குண்டுவெடிப்புக்கான வெடிபொருட்கள் விமானத்தில் எடுத்துச் செல்லப்படுவது கடினமான நிலையில் கடல் வழியாக இலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட்டதா என்ற கோணத்தில் இப்போது விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கிறது என்.ஐ.ஏ. இந்தக் கடல் வழி வெடிபொருட்களுக்கு போதை மருந்துக் கடத்தல் கும்பலே உதவி செய்திருக்க வேண்டும் என்றும் என்.ஐ.ஏ.வுக்கு தகவல் கிடைத்திருப்பதால் அந்தத் திசை நோக்கி விசாரணை தீவிரமாகிறது.