சூலூர்: அமமுகவுக்கு ஆதரவாக அதிமுக பிரபலம்! | Editorji
  1. home
  2. > Minnambalam
  3. > சூலூர்: அமமுகவுக்கு ஆதரவாக அதிமுக பிரபலம்!
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

சூலூர்: அமமுகவுக்கு ஆதரவாக அதிமுக பிரபலம்!

Apr 30, 2019 08:05 IST

நான்கு தொகுதி இடைத்தேர்தல் வேலைகளும், அதிருப்தியாளர்களின் உள்ளடி வேலைகளும் போட்டி போட்டுக் கொண்டு ஆரம்பித்திருக்கின்றன. சூலூர் தொகுதிக்கான அதிமுக வேட்பாளர் கந்தசாமி அறிமுகக் கூட்டமும், செயல் வீரர்கள் கூட்டமும் நேற்று (ஏப்ரல் 28) சூலூரில் அமைச்சர் வேலுமணி தலைமையில் நடந்தது. இதில் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் போன்ற பலர் கலந்துகொண்டனர். நாலாயிரம் பேர் கலந்துகொண்டாலும் பலரும், செ.ம. வேலுசாமி எங்கே என்றுதான் கேட்டார்கள். சூலூர் தொகுதிக்கு சீட் கேட்டு கிடைக்காமல் போன கோபத்தில் செ.ம. வேலுச்சாமி கூட்டத்துக்கு வரவில்லை. ‘நான் 72 லேர்ந்து கட்சியில இருக்கேன். ஆனா 96 க்குப் பிறகு கட்சிக்கு வந்த வேலுமணி கையிலதான் இன்னிக்கு எல்லாமே இருக்கு. எனக்கு சீட் கொடுக்கக் கூடாதுனு வேலுமணி முடிவெடுக்க, அதை எடப்பாடி கேட்டுக்கிட்டு இருக்காரு. நான் எதுக்கு தேர்தல் வேலை பாக்கணும்?’ என்ற கோபத்தில் வேலுச்சாமி நேற்று கூட்டத்துக்கு செல்லவில்லை. அவரை நினைவூட்டும் விதத்தில் கூட்டத்தில் பேசிய வேலுமணி, “நம்மகிட்ட தகுதியானவங்க 50 பேர் இருக்காங்க. ஆனா தொகுதி ஒன்னுதான் இருக்கு. அதனால ஒருத்தருக்குதான் கொடுக்க முடியும். விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வருது. அதனால இப்ப எந்தெந்த பகுதியில அதிக ஓட்டு வாங்குறீங்களோ, அந்த நிர்வாகிகளுக்கு உள்ளாட்சியில வாய்ப்பு வழங்கப்படும்’ என்று அறிவித்தார். அதிமுகவில் இப்படி நடந்துகொண்டிருக்க, அமமுகவிலோ செ.ம,.வேலுசாமியின் சொந்த ஊரான செங்கத்துறைக்குள் நேற்று நுழைந்து ஜாம் ஜாம் என்று வரவேற்பு பெற்றிருக்கின்றனர். இதன் மூலம் வேலுசாமி வேலை செய்வது அதிமுகவுக்கா, அமமவுக்கா என்ற கேள்விகளும் அதிமுகவுக்குள் எழுந்திருக்கின்றன. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அமமுக வை தனது சொந்த கிராமமான செங்கத் துறை, காடாம்பாடி ஆகிய ஊர்களில் வாக்கு கேட்க முடியாத நெருக்கடியை கொடுத்தார் வேலுசாமி. ஆனால் தற்போதைய நிலையே வேறு. செ.ம.வேலுசாமி பிறந்த ஊரான செங்கத்துறையில் ஏப்ரல் 28 ஆம் தேதி அமமுகவுக்கு தடபுடலான வரவேற்பு கொடுத்து அசத்தியிருக்கிறார்கள். செங்கத்துறை ஊராட்சி அதிமுக செயலாளர் செந்தில்குமார் அமமுகவில் நேரடியாக திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளர் சி.சிவசாமி முன்னிலையில் இணைந்ததோடு அந்தக் கிராமத்திலுள்ள 2600 வாக்குகளில் 2000 வாக்குகளும் டிடிவி தினகரனுக்கே கிடைக்கும் என சூளுரைத்துள்ளார். சமீபத்தில் பாமகவிலிருந்து விலகி அமமுகவில் இணைந்த பொங்கலூர் மணிகண்டனும் சூலூர் தொகுதியிலேயே வசிப்பவர். அவரது வீட்டில் நேற்று முன்னாள் எம்.பி சிவசாமி தலைமையில் 200க்கும் மேற் பட்டோர் கூடி ஆலோசித்துள்ளனர். அதில் அதிமுக அதிருப்தியாளர்களை அமமுகவின் பக்கம் இழுப்பது குறித்து சிவசாமி திட்டங்களை விளக்கியுள்ளார். இந்தக் கூட்டத்தை முடித்துக் கொண்டு செ.ம. வேலுசாமியின் கோட்டையாக உள்ள கிராமங்களுக்கு அமமுகவினர் நேரில் சென்றனர். அப்போதுதான் தினகரன் வேட்பாளருக்கு அதிமுகவினர் வரவேற்பு அளித்திருக்கின்றனர். சூலூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 15க்கும் மேற்பட்ட அதிமுக ஊராட்சி செயலாளர்கள் அமமு க வேட்பாளர் கே.சுகுமாரை மறைமுகமாக ஆதரித்து வருகின்றனர். இந்தத் தகவல் அமைச்சர் வேலுமணிக்கு போக அவர் அதிர்ந்துபோய் ஊராட்சி செயலாளர்களிடம் பேசிவருகிறார். இப்போது பின்னணியில் இருந்து வேலை செய்துவிட்டு, தேர்தலுக்குப் பிறகு செ.ம.வேலுசாமி அமமுகவில் ஐக்கியமாகும் வாய்ப்பு இருப்பதை சூலூர் தேர்தல் களம் உறுதி செய்கிறது.