திமுகவினரைக் காக்காபிடிக்கும் அதிகாரிகள்! | Editorji
  1. home
  2. > Minnambalam
  3. > திமுகவினரைக் காக்காபிடிக்கும் அதிகாரிகள்!
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

திமுகவினரைக் காக்காபிடிக்கும் அதிகாரிகள்!

Apr 29, 2019 18:41 IST

22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் முடிவுகள் மே 23 வெளியாகவுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் சிலர் திமுக மாவட்டச் செயலாளர்களை வீடு தேடிச் சந்தித்துவருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்ற பிறகு தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்ட பெரும்பாலான மாவட்ட ஆட்சியர்கள் நியமன ஐஏஎஸ் (கன்ஃபோர்டு)அதிகாரிகள்தான். அதாவது இவர்களுக்கு நேரடியாக தேர்வு எழுதி ஐஏஎஸ் ஆகத் தேர்வு செய்யப்படாமல் பதவி உயர்வின் மூலம் ஐஏஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கும். இவர்களில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்ட பல மாவட்ட ஆட்சியர்கள், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகவும், அவர்களின் பொருளாதாரம் கிடுகிடுவென்று வளர்ச்சியடைந்திருப்பதாகவும் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த மாவட்ட ஆட்சியர்களை, எதிர்க்கட்சியான திமுக எம்.எல்.ஏ.க்கள் மக்கள் பிரச்சினைகளுக்காகச் சந்திக்கச் சென்றால்கூட மணிக்கணக்கில் காத்திருக்க வைப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் தற்போது இருக்கும் அன்புச்செல்வன், இதற்கு முன்பிருந்த தண்டபாணி போன்ற மாவட்ட ஆட்சியர்கள் தங்களை சந்திக்க வரும் திமுக எம்.எல்.ஏ.க்களை மணிக்கணக்கில் காத்திருக்க வைத்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன. அதனை திமுக எம்.எல்.ஏ.க்கள் சபா.இராஜேந்திரன், சரவணன், வெ.கணேசன் போன்றவர்கள் வருத்தப்பட்டுச் சொல்லியதும் உண்டு. திட்டக்குடி எம்.எல்.ஏ கணேசன் தனது அனுபவத்தைச் சொல்கிறார்: “தலைமைச் செயலகத்தில் உள்ள நேரடியாக தேர்ச்சி பெற்றுவந்த ஐ.ஏ.எஸ், அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள் அப்பாய்மென்ட் இல்லாமல் சென்றால்கூட மக்கள் பிரதிநிதிகளைக் காத்திருக்க வைக்கக்கூடாது என்று உடனடியாக சந்தித்துப் பேசி அனுப்புவார்கள். ஆனால் மக்கள் பிரச்சினைகளுக்காக மனு கொடுக்கச் சென்றால் மீட்டிங்கில் இருப்பதாகச் சொல்லி காத்திருக்கச் சொல்லுவார்கள் மாவட்டத்தில் உள்ள கன்ஃபோர்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்” என்று வருத்தத்துடன் கூறினார். கடலூர் மாவட்டம் போலவேதான் தமிழகம் முழுவதும் இருப்பதாகச் சொல்லும் உடன் பிறப்புகள், இந்த நிலை சில வாரங்களாக மாறிவிட்டதாகக் கூறுகிறார்கள். மக்களவை மற்றும் மினி சட்டமன்ற தேர்தல் என்னும் சொல்லப்படும் 22 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் மே 23ஆம் தேதி வெளியாகவுள்ள சூழலில், மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், பொதுப்பணித் துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பலரும், திமுக மாவட்டச் செயலாளர்களையும் ஃபவர்புல் எம்.எல்.ஏ.க்களையும் வீடு தேடிச் சென்று சந்தித்து நெருக்கத்தைக் காட்டிவருவதாகச் சொல்கிறார்கள் வருவாய்த் துறை அதிகாரிகள். உதாரணமாக நேற்று முன்தினம் (ஏப்ரல் 27) மேற்கு மண்டலத்தில் உள்ள ஒரு மாவட்ட ஆட்சியர், திமுக மாவட்டச் செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான ஒருவரை அவரது வீட்டில் சந்தித்து, அடுத்தது உங்க ஆட்சிதான்’ என்று சான்று கொடுத்துவிட்டு, கேட்பதைச் செய்துகொடுப்பதாகவும் உத்தரவாதம் அளித்துவிட்டுச் சென்றிருக்கிறார். இதனைத் தொடர்ந்து பொதுப்பணித் துறை அதிகாரியும் அம்மாவட்டச் செயலாளரை சந்தித்துள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இதுபோலவே பல மாவட்டங்களில் சந்திப்புப் படலங்கள் தொடர்கின்றனவாம். ஆட்சி மாற்றம் ஏற்படும் முன்பே அதிகாரிகள் கூடுவிட்டுக் கூடு தாவும் வித்தையை தொடங்கிவிட்டதாகச் சொல்லிச் சிரிக்கிறார்கள் அதிகாரிகள்.