அவெஞ்சர் திரைப்படம் தமிழகத்தில் சுமார் 4.5 கோடி ரூபாய் முதல் 7 கோடி ரூபாய் வரை முதல் நாள் மொத்த வசூல் செய்துள்ளது என கூறப்பட்டுள்ளது. முதல் வாரத்தில் சுமர் 25 கோடி வரை இப்படம் தமிழகத்தில் வசூல் ஆவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த வசூலுடன் தமிழ் படங்களின் வசூலை ஒப்பிடுகின்றன ஊடகங்கள். இது சரியான அணுகுமுறை இல்லை என்கின்றனர் விநியோகஸ்தர்கள். இந்தியாவில் ஆங்கிலப் படங்களுக்கு என்று குறிப்பிட்ட ரசிகர்கள் உள்ளனர். தமிழ் படங்களுக்கு அவ்வாறு இல்லை. சர்வதேச அளவில் ஆங்கிலப் படங்களை சந்தைப்படுத்தும் வகையில் விளம்பர யுக்திகள்கையாளப் படுவதால் எளிதாக மக்களை சென்றடைகின்றன. தமிழ் படங்களுக்கான சர்வதேச சந்தை விரிவடைந்திருக்கிறது. தயாரிப்பு நிறுவனங்கள் கார்ப்பரேட் நடைமுறைக்கு முழுமையாக தங்களை மாற்றிக் கொள்ளவில்லை. தனி மனித ஆராதனை, புகழ் பாடுதலில் இருந்து தமிழ் சினிமா இன்று வரை விடுபடவில்லை. இதனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரிக்கும் படங்கள் கூட சர்வதேச சந்தையில் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான விளம்பர யுக்திகளை கையாண்டு வெற்றி காண முடியவில்லை. ஆங்கில படங்களின் பட்ஜெட், வியாபாரம், வசூல் கணக்குகளில் நேர்மை இருக்கும். முதலீட்டுக்கு நியாயமான லாப சதவீதத்துடன் வியாபாரங்கள் முடிக்கப்படும். இந்திய சினிமாவில் குறிப்பாக தமிழ் சினிமாவில் இந்த நேர்மையையும், நாணயத்தையும் உலகமயமாக்கலுக்கு பின்னரும் நடைமுறைப்படுத்த முடியவில்லை. இத்தனை குறைபாடுகள், நெருக்கடிகளை கடந்து தான் இங்கு பெரும்பான்மையான தமிழ் சினிமாக்கள் தயாரிக்கப்பட்டு வெற்றியும் - தோல்வியையும் சந்தித்து வருகின்றன. அதனால் தான் ஆங்கில படங்களின் வசூல் கணக்குடன் தமிழ் படங்களை ஒப்பீடு செய்ய வேண்டாம் என்றனர் விநியோகஸ்தர்கள். பிரம்மாண்டமான விளம்பரங்களுடன் வெளியான அவெஞ்சர் அலையில் காஞ்சனா காணாமல் போய்விடும் எனக் கூறப்பட்டது. தமிழக திரையரங்குகளின் பிரதான வாடிக்கையாளர்களான பெண்கள் வராத படங்கள் வெற்றி பெறுவதில்லை. காஞ்சனா - 3 படத்திற்கு அவெஞ்சர் அலையிலும் பெண்கள் கூட்டத்தால் காரம் குறையாது காஞ்சனா கல்லா கட்டியது என்கிறது தியேட்டர் வட்டாரம். இதுவரை தமிழகத்தில் 50 கோடி ரூபாய் மொத்த வசூலை கடந்திருக்கிறது காஞ்சனா - 3.