கடந்த வாரம் வெளியான காஞ்சனா - 3 பேயாட்டம் ஆடி தியேட்டர்களில் வசூலில் முன்னிலையில் உள்ளது.
கடந்த புதன்கிழமை இந்தியா தவிர்த்து வெளியான அவெஞ்சர் இறுதிப் பாகம் 48 மணி நேரம் தாமதமாக இந்தியா வந்தடைந்தது. இந்தப் படம் காஞ்சனா வசூலை வறுமையடைய செய்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. லோக்கல் காஞ்சனா பேயிடம் அமெரிக்காவில் இருந்து வந்த அவெஞ்சர் பேய் ஆட்டம் பலிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. காஞ்சனா - 3 திரையிட்ட திரையரங்குகளில் குவியும் பெண்கள் கூட்டம் அதை உறுதிப்படுத்துகிறது.
ஆயிரம் கோடியை கடந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் ஆங்கில படங்களின் 100% வசூல் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா போன்ற நாடுகளை நம்பியே இருக்கின்றது. இந்தியா போன்ற நாடுகளில் ஆங்கில படங்களை திரையிடுவதன் மூலம் கிடைக்கும் வருவாய் தயாரிப்பாளருக்கு கூடுதல் வருமானம் மட்டுமே.
ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட அவெஞ்சர் படத்தின் முதல் நாள் சென்னை மொத்த வசூல் (1.17 கோடி) ரஜினிகாந்த் நடித்த பேட்ட (1.12 கோடி), அஜித் நடித்த விஸ்வாசம் (88 லட்சம்) படங்களின் வசூலை சென்னை நகரில் முறியடித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டு வருகின்றன.
100 கோடியில் தயாரிக்கப்பட்ட தமிழ்ப் படத்தின் வசூலையும் 1000 கோடிக்கு மேல் செலவு செய்து தயாரிக்கப்பட்ட ஆங்கில படத்தின் வசூலையும் ஓப்பீட்டுக்கு உட்படுத்துவதே தவறானது. இந்தியாவில் மாநில மொழிப் படங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை காட்டிலும் வெளிநாட்டு படங்களுக்கு அதிகமான முக்கியத்துவமும், முன் உரிமையும் திரையரங்குகளால் கொடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கு வணிக ரீதியான லாப நோக்கமே காரணம். இந்திய மொழி படங்களை திரையிடுவதன் மூலம் குறைவான வரி வருவாய், டேம்ஸ் (30%) தியேட்டர்களுக்கு விநியோகஸ்தர்களால் படங்களை திரையிடும் தியேட்டர்களுக்கு வழங்கப்படுகிறது.
ஆங்கில படங்களை திரையிடுவதால் அதிகமான டேம்ஸ் (50% வரை) தியேட்டர்களுக்கு கிடைக்கிறது. வாரந்தோறும் அவெஞ்சர் போன்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படங்கள் வருவதில்லை. அதனால் காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பதற்கு ஏற்ப தியேட்டர் நிர்வாகங்கள் செயல்படுவதில் என்ன தவறு என்கிறது தியேட்டர் வட்டாரம்.
இந்தியா முழுவதும் சுமார் 2000 திரைகளுக்கு மேல் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளில் திரையிடப்பட்ட அவெஞ்சர் முதல் நாள் சுமார் 64 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது. இந்தியா முழுவதும் சுமார் 25 லட்சம் பேர் இப்படத்தை முதல் நாள் பார்த்துள்ளனர்.
வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் சுமார் 80 லட்சம் பேர் இந்தியா முழுவதும் பார்க்கக் கூடும். இப்படத்தை 3D, 2D யில் பார்ப்பதற்காக வழங்கப்படும் கண்ணாடிக்கு வசூலிக்கப்படும் தொகையும் சேர்த்தே மொத்த வசூல் 64 கோடி ரூபாய்.
ஆங்கிலப் படத்தின் வருகையால் காஞ்சனா - 3 வசூல் குறைந்து விடும் என்ற எதிர்பார்ப்பை பொய்யாக்கியுள்ளது வசூல் நிலவரம். முதல் வாரம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் இரண்டாவது வாரமும் இப்படம் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
சென்னை போன்ற பெருநகரங்களில் காட்சிகள் மட்டும் குறைக்கப்பட்டுள்ளது. சுமார் 1000 திரையரங்குகளுக்கு மேல் உலகம் முழுமையும் திரையிடப்பட்ட காஞ்சனா - 3 ரூபாய் 100 கோடி மொத்த வசூலை கடந்துள்ளது தமிழ் சினிமாவில் சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அவெஞ்சர் முதல் நாள் சுமார் 4.5 கோடி ரூபாய் கண்ணாடிக்கான கட்டணத்துடன் மொத்த வசூல் செய்துள்ளது.
இந்த வசூலுடன் தமிழ் படங்களின் வசூலை ஒப்பிடுவது சரியா? காஞ்சனா காரம் குறையாதற்கு என்ன காரணம்?