போக்சோ: வயது வரம்பைத் திருத்த நீதிபதி ஆலோசனை!

  1. home
  2. > Minnambalam
  3. > போக்சோ: வயது வரம்பைத் திருத்த நீதிபதி ஆலோசனை!
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

போக்சோ: வயது வரம்பைத் திருத்த நீதிபதி ஆலோசனை!

Apr 27, 2019 17:36 IST

16 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்பப்பட்டு உடலுறவு கொண்டால் போக்சோ சட்டத்தில் குற்றமாகக் கருதாமல் விலக்கு அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (ஏப்ரல் 26) ஆலோசனை வழங்கியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சபரிநாதன் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை கடத்தி சென்று திருமணம் செய்ததாக பெலுகுறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அந்த வழக்கை விசாரித்த நாமக்கல் மகளிர் நீதிமன்றம், சபரிநாதனுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து 2018 ஜூன் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சபரிநாதன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி வி.பார்த்திபன் முன் விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கப்பட்ட சிறுமி தன்னை யாரும் கடத்தவில்லை என பல்டி சாட்சியம் அளித்ததைக் கருத்தில் கொள்ளாமல் வழங்கிய தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, வழக்கில் சபரிநாதனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை காவல்துறை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டதால் அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார். மேலும், போக்சோ சட்டம் குறித்து மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க அரசு துறைகளுக்கு உத்தரவிட்டார். அதனடிப்படையில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த எடுத்த நடவடிக்கைகளைப் பட்டியலிட்டு அரசு தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. போக்சோ சட்டத்தை விளம்பரப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும், அதுதொடர்பான குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருவதாக வேதனை தெரிவித்த நீதிபதி, இந்த குற்றங்களை குறைப்பதற்கு அதிக முயற்சிகளை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தினார். வளர் இளம் பருவ (டீன் ஏஜ்) உறவு பற்றி எடுக்கப்படும் திரைப்படங்களைத் திரையிடும் போது, அதில் போக்சோ சட்டம் குறித்த எச்சரிக்கையை இடம்பெறச் செய்ய வேண்டுமென உத்தரவிட்டார். 18 வயதுக்குக் கீழான ஆண் பெண் காதல் திருமணம் செய்யும் போது, 7 ஆண்டு முதல் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க போக்சோ சட்டம் பயன்படுத்தப்படுகிறது. இதை தடுக்க போக்சோ சட்டத்தில் 18 வயது வரை சிறுமிகள் என வரையறுத்துள்ளதை 16 வயதாக குறைக்க வேண்டும் என யோசனை தெரிவித்தார். 16 வயதை தாண்டியவர்கள் விருப்பப்பட்டு பாலுறவு கொண்டால், போக்சோ சட்டத்தில் குற்றமாகக் கருதாமல் விலக்கு அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கும்படியும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தினார்.சமூகத்தின் பிணியாக மாறியுள்ள போக்சோ குற்றங்கள் பெருகுவதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்ய மனநல ஆலோசகர்கள், சமூக ஆர்வலர்கள் அடங்கிய உயர்மட்ட குழுவை அமைக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார்.