அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: எண்ட்கார்டே இல்லாத கதை!
அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தின் ரிலீஸைப் பொறுத்தவரைக்கும் யார் யாரெல்லாம் சாகப்போவது, யாரெல்லாம் உயிரோடு இருக்கப்போவது என்ற கேள்வியே அடிப்படை. பூமியின் பாதி சூப்பர் ஹீரோக்களும், பாதி பொதுமக்களும் தானோஸின் ஒரு சொடக்கில் அழிந்துபோனது ஏற்படுத்திய பாதிப்பின் தாக்கம் படத்தின் முதல் 30 நிமிடங்களிலேயே தெரிந்துவிடுகிறது. அதேசமயம், டிரெய்லரில் காட்டப்பட்ட 80% காட்சிகள் அந்த 30 நிமிடங்களுக்குள்ளாகவே முடிந்துவிடுவதால், அடுத்து நடக்கப்போவது என்னவென்று பார்க்க ரசிகர்களிடம் ஏற்பட்ட ஆர்வம் அவெஞ்சர்ஸ் படத்தின் வெற்றியைச் சொல்லிவிட்டது. அவெஞ்சர்ஸ் வெல்வதும், தானோஸ் அழிவதும் இதில் நடக்கும் என அனைவருக்கும் தெரியும் என்பதால், நாம் மாறுபட்ட விதத்தில் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் கதையை அணுகுவோம்
தானோஸை அழித்து, மனித இனத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் இருப்பது உண்மை தான். ஆனால், அதற்காக இன்னொரு இனத்தை அழிப்பதுதான் தீர்வா?
அவெஞ்சர்ஸின் பலம் மனித இனத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம். தானோஸின் பலம் யாரையும் காப்பாற்ற வேண்டிய தேவை இல்லாதது. இப்படிப்பட்ட இரு சக்திகளுக்கிடைப்பட்ட மோதல்தான் மக்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. தானோஸ் யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்ததற்குக் காரணம், அவருடைய சுயநலம் இல்லை. ஆனால், மனித இனத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் இருந்ததன் காரணம், அவெஞ்சர்ஸின் சுயநலமே.
தானோஸின் படைகளையும், அவெஞ்சர்ஸ் படையையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே இது தெரியும். தானோஸ் தன்னிடம் இருக்கும் சக்தியைத் தன்னுடைய படைகள் எல்லாவற்றுக்கும் மொத்தமாகப் பகிர்ந்து கொடுத்திருந்ததை, அவர்கள் கையிலேந்தி வந்த அதி நவீன விண்வெளி ஆயுதங்கள் மூலம் காண முடிந்தது. ஆனால், அவெஞ்சர்ஸ் கடைசி வரையிலும் தங்களுடைய தொழில்நுட்ப வளர்ச்சியைத் தங்களிடமே வைத்திருந்தார்கள். அயர்ன் மேனின் கவசத்தை அவரது மனைவிகூடப் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. ஆனால், அப்படியொரு அற்புதம் நிகழ்ந்த பிறகே தானோஸை அவெஞ்சர்ஸால் சமாளிக்க முடிந்தது. எந்த சக்தியுமில்லாத, தானோஸின் இயல்பு சக்தியை சமாளிக்கவே அயர்ன் மேன், கேப்டன் அமெரிக்கா, தொப்பை தோர் ஆகியோரால் முடியவில்லை எனும்போது தானோஸ் எத்தனை வலிமை மிகுந்தவன் என்பது தெரிகிறது.
எப்போதும் மக்களைக் காப்பாற்ற அரசாங்கங்களாலும், சூப்பர் ஹீரோக்களால் மட்டுமே முடியும் என்ற ஒரு கற்பனைக்குள் மக்களை வைத்திருப்பதால்தான், அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார் படத்தில் பாதி சூப்பர் ஹீரோக்கள் அழிந்ததும், பூமியே அழிந்த மாதிரி ஒரு மாயையை மக்கள் உணர்ந்திருந்தார்கள்.
சூப்பர் ஹீரோக்கள் அவ்வப்போது உருவாகக்கூடும். ஆனால், மனித இனம் எப்போதும் இருக்கும். அப்படிப்பட்ட சூப்பர் ஹீரோக்களையே நம்பிக்கொண்டு இருக்காமல், ஒவ்வொரு மனிதனும் சூப்பர் ஹீரோதான் என்று உணர வைக்க எந்த முயற்சியும் எடுக்காமல், ஒரு சூப்பர் வில்லன் வந்தால் ஐந்து சூப்பர் ஹீரோக்கள் வருவார்கள் என்ற மாயைக்குள்ளாகவே மக்களை அடைக்கும் டெக்னிக்தான் அவெஞ்சர்ஸ் மூலம் மார்வெல் சொல்லியிருக்கும் கதை. மனித இனம் தன்னையே சூப்பர் ஹீரோவாக நினைத்துக்கொண்டால், எந்த அரசாங்கத்தையும், பாதுகாப்புப் படையையும் நம்பியிருக்கவேண்டிய அவசியம் இல்லை. எனவே, அவர்களை ஒருவிதப் பதற்றத்துக்குள் வைத்துக்கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் எல்லா அரசாங்கத்துக்கும் உண்டு. அதை, சமீப காலமாகத் திரைப்படங்கள் மூலமாக சிறப்பாக செய்துவருகின்றனர். அதன் நீட்சியே அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்.
குழந்தைகளின் சூப்பர் ஹீரோ என்று விளம்பரப்படுத்தும் கேப்டன் அமெரிக்காவையும் கடைசியில் கெட்ட வார்த்தைகளைப் பேச வைத்து, அந்தக் குழந்தைகளின் நம்பிக்கையையும் தகர்த்தது படத்தில் ஏற்பட்ட கிரியேட்டிவ் குறைக்கு ஒரு நல்ல உதாரணம். கடவுளாகவே இருந்தாலும், பியர் குடித்தால் தொப்பை உருவாகும் என்ற தியரியின் மூலம், உங்கள் தொப்பையைப் பற்றிக் கவலைப்படாதீர்கள் என்ற அறிவுரையை, உடல்நலம் மீது கவனம் இல்லாத இளைஞர்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள்.
எல்லா சூப்பர் ஹீரோக்களும் ஆண்களாகவே இருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு பிறகு கொண்டுவரப்பட்ட கேப்டன் மார்வெல் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹீரோயின்ஸ் சேர்ந்து தானோஸை எதிர்க்கும் காட்சி, மார்வெல் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டை ஓரங்கட்டுவதற்காகச் செய்யப்பட்டதாக அந்த ஒரு சில நொடிகள் வரும் காட்சி மூலம் தெரிகிறது.
தங்களுடைய சூப்பர் பவர் எவ்வளவு பலமானது என்பதை, ஏதாவது ஒரு வில்லன் வரும்போது சூப்பர் ஹீரோக்கள் நிரூபிப்பது போல, டெக்னாலஜி எவ்வளவு வளர்ந்திருக்கிறதென்று காட்ட மார்வெல் அவ்வப்போது ஏதாவது ஒரு படத்தை எடுக்கிறது. அந்த டெக்னாலஜியின் வளர்ச்சி எப்படிப்பட்டதென்று பார்க்க தியேட்டருக்குச் சென்று பாருங்கள். பைரசில வரும் தரம், படத்தை தியேட்டரில் பார்க்கும் அனுபவத்தில் 10% தான் கொடுக்கும்.
தியேட்டர் அனுபவத்துக்கு நிறைய நல்ல காட்சிகள் இருந்தாலும், எது சரி எது தவறென்று யோசிக்கக்கூடிய ரசிகராக இருந்தால், தானோஸ் சம்பந்தப்பட்ட அத்தனை உயிர்களையும் பொருட்களையும் ஒரு சொடக்கில் அழித்தது சரியா என்ற ஒரு கேள்வி வரும். அதற்கு பதிலை அந்த தானோஸே வந்தாலும் கொடுக்க முடியாது.
அவெஞ்சர்ஸுக்கு அஞ்சலி செலுத்திய மனித இனமும், தானோஸுக்கு திதி கொடுக்கப்போகும் அவருடைய இனமும் ஒன்றுதான். அவர்கள் மார்வெலை கேள்வி கேட்டால், தானோஸை ஹீரோவாக வைத்து இன்னொரு படத்தையும் எடுத்துவிடும் மார்வெல். சொல்லப்போனால், காமிக்ஸ் வெர்ஷனில தானோஸ் தலைமையில் அவெஞ்சர்ஸ் வேலை செய்வதுபோல கதையே இருக்கிறது.