1. home
  2. > Minnambalam
  3. > கழுதைகளைப் பயன்படுத்திய தேர்தல் அதிகாரிகள்!
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

கழுதைகளைப் பயன்படுத்திய தேர்தல் அதிகாரிகள்!

Apr 19, 2019 21:46 IST

பொதுவாக, வாக்குப்பதிவு இயந்திரங்களை இடம் மாற்றுவதற்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால், தமிழகத்தின் மலைப்பகுதிகளில் வாக்குப்பதிவு உபகரணங்களை இடம் மாற்ற அத்தகைய தொழில்நுட்பங்களுக்கு வேலையில்லை. மலை உச்சியிலுள்ள சில குக்கிராமங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச்செல்வது எளிதான வேலையல்ல. சில பகுதிகளுக்கு வாகனங்களால் சென்றுவிட முடியும். ஆனால், சில பகுதிகளுக்கு வாகனங்களில் செல்ல வழியே இல்லை. இதுபோல பல தொலைதூர கிராமங்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கின்றன. முக்கியமாக தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், தேனி ஆகிய மாவட்டங்களிலுள்ள தொலைதூர கிராமங்களில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் சுமார் 300 முதல் 1,100 வாக்காளர்கள் உள்ளனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியிலுள்ள கோட்டூர், நாமக்கல் மாவட்டம் போதமலை போன்ற பகுதிகள் பாறைகள் நிறைந்த கரடுமுரடான பகுதிகளாக உள்ளன. இத்தகைய சவால்களை எதிர்கொள்வதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்களையும், உபகரணங்களையும் முறையாக சாக்குப்பைகளில் கட்டி கழுதைகளிலும், குதிரைகளிலும் ஏற்றி தொலைதூர வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச்சென்றுள்ளனர் தேர்தல் அதிகாரிகள். சிலர் தங்களது பொருட்களைத் தலையில் சுமந்தபடி தூக்கிச்சென்றனர். மலைப்பகுதிகளில் 9 முதல் 11 கிலோமீட்டர் தொலைவுக்குப் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் வெள்ளக்கவி மற்றும் பள்ளத்துக்காடு, நாமக்கல்லின் கேடமலை, ஈரோட்டின் கதிரிப்பட்டி ஆகிய வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு உபகரணங்களை எடுத்துச்செல்ல கழுதைகள் பயன்படுத்தப்பட்டன. வெள்ளக்கவி கிராமம் போன்ற சில வாக்குச்சாவடிகள் அடர்ந்த மலைக் காடுகளுக்கிடையே இருப்பதால் நக்சல் தடுப்பு போலீசாரின் உதவியுடன் தேர்தல் அதிகாரிகள் பயணித்தனர்.