பிரச்சாரம்: உதயநிதிக்கு துர்கா, ஸ்டாலின் கொடுத்த டிப்ஸ்!

  1. home
  2. > Minnambalam
  3. > பிரச்சாரம்: உதயநிதிக்கு துர்கா, ஸ்டாலின் கொடுத்த டிப்ஸ்!
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

பிரச்சாரம்: உதயநிதிக்கு துர்கா, ஸ்டாலின் கொடுத்த டிப்ஸ்!

Apr 13, 2019 19:20 IST

திமுகவில் அதன் தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் உதயநிதியின் பிரச்சாரம் சூடுபறந்துகொண்டிருக்கிறது. உதயநிதியின் பிரச்சாரத்தில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ரசிகர் மன்றத்தின் பொருளாளர் சேலம் ராஜா, திண்டுக்கல் ஐ.பி.செந்தில் ஆகியோர் தவறாமல் இருக்கிறார்கள். பிரச்சாரத்துக்கு ஜீப்தான் தயார் செய்திருக்கிறார் உதயநிதி. அதைப் பார்த்த ஸ்டாலினோ, ‘இதெல்லாம் உனக்கு செட் ஆகாது. டெம்போ டிராவலர் எடுத்துக்கோ’ என சொன்னாராம். ஆனால் உதயநிதி கேட்கவில்லை. ஜீப்பில்தான் பிரச்சாரத்தை ஆரம்பித்திருக்கிறார். முதல் இரண்டு நாட்களிலேயே கட்சிக்காரர்கள், ரசிகர்கள் என பலரும் ஜீப்பில் முண்டியடித்து ஏறினார்களாம். யாரையும் கட்டுப்படுத்தவே முடியவில்லையாம். அதில் ஒரு தொண்டர் உணர்ச்சிவசப்பட்டு, ஜீப்பில் ஏறி தடுமாறி உதயநிதி மீது விழுந்து விட, உதயாவுக்கு கையில் லேசான அடிபட்டு இருக்கிறது. அதன் பிறகுதான் அப்பா பேச்சை கேட்பது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் உதயா. டெம்போ டிராவலர் வண்டிக்கு மாறியிருக்கிறார். டெம்போ டிராவலரில் டிரைவர் சீட்டுக்கு அருகே இருக்கும் சீட் மட்டும் ரோலிங் சீட். எந்தப் பக்கம் வேண்டுமனாலும் சுழலலாம்.டெம்போ டிராவலரில் நான்கு பக்கமும் ஸ்பீக்கர். உதயா பேசும் நேரங்களை தவிர மற்ற நேரங்களில் ஸ்டாலின் புகழ் பாடும் பாட்டுகள் ஒலிக்கத் தொடங்கிவிடுகிறது. ஜீரகம், இஞ்சி உள்ளிட்ட சிலவற்றை போட்டு கஷாயம் போல காய்ச்சி கொடுத்திருக்கிறார் உதயாவின் அம்மா துர்கா. எந்த பாயிண்ட்டில் பேசினாலும் பேசி முடித்ததும் அந்த கசாயத்தை கொஞ்சம் குடித்துக் கொள்கிறார். அன்றாடம் பிரச்சாரத்துக்கு சூடுபடுத்தி பிளாஸ்க்கில் எடுத்து செல்கிறார் உதயநிதி. இந்த கஷாயம் தீரத் தீர சென்னையில் இருந்து கொடுத்து அனுப்பிவிடுகிறாராம் துர்கா. இதைக் குடித்தால் தொண்டை கரகரப்பு இருக்காது என்பதால் அம்மாவின் கஷாயத்தை வண்டியிலேயே வைத்திருக்கிறார் உதயநிதி. உதயாவின் பிரச்சார வேனுக்கு முன்பாக சில அடி தூரம் விட்டு கலைஞர் டிவி யூனிட்டும் செல்கிறது. ஒவ்வொரு பாயிண்ட்டில் நிற்கும் போதும் டெம்போ டிராவலர் டாப் ஓப்பன் ஆகிறது. அதில் எழுந்து நின்றபடி பேசுகிறார் உதயநிதி. ஒவ்வொரு இடத்திலும் அந்த பகுதி நிர்வாகிகள் யார் என்பதை ஒரு துண்டு சீட்டில் எழுதி வாங்கிக் கொள்கிறார். அவர்கள் பெயரை குறிப்பிட்டுதான் பேச்சை ஆரம்பிக்கிறார். மோடியில் தொடங்கி, அன்புமணி வரை ஒருவரையும் விட்டு வைப்பதில்லை. உதயா பேசப் பேச வண்டிக்குள் உட்கார்ந்திருப்பவர்கள் குறிப்புகள் அடங்கிய சீட்டுகளை அவரிடம் கொடுத்தபடியே இருக்கிறார்கள். அதைப் பார்த்து பார்த்துதான் பேசுகிறார்கள். ‘டயர் நக்கி’ என்ற வார்த்தை உதயாவின் பேச்சில் எல்லா பாயிண்ட்களிலும் இருக்கிறது. அன்புமணியைத்தான் அதிகம் வம்புக்கு இழுக்கிறார். அதேபோல கூட்டத்தைப் பார்த்து கேள்விகள் கேட்டும் அவர்களிடம் இருந்து பதிலை வாங்கி அதிலிருந்து பேச ஆரம்பிக்கிறார். உதயநிதியின் பேச்சை டிவியில் பார்த்த ஸ்டாலின் அவருக்கு போன் செய்து, “எதுக்கு இவ்வளவு வேகமாக பேசுற... நீ பேசுறது மக்களுக்கு புரியணும். கொஞ்சம் நிறுத்தி நிதானமாக பேசு...” என சொல்லியிருக்கிறார். அதனால் இப்போது பேச்சில் வேகத்தை குறைத்திருக்கிறார். ஒரு பாயிண்ட்டில் இருந்து இன்னொரு பாயிண்ட்க்கு செல்லும் போது, ‘நான் பேசும்போது மக்கள் என்ன பண்றாங்க. எப்படி ரசிக்கிறாங்க என்பதை கவனிச்சீங்களா?’ என்பதையெல்லாம் வண்டிக்குள் இருக்கும் நண்பர்களிடம் கேட்கிறார். பிறகு மொபைலில் லேட்டஸ்ட் அப்டேட்களை படித்து வண்டியில் இருக்கும் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்கிறார். காலை 9.30 மணிக்கு தொடங்கும் பிரச்சாரத்தை மதியம் 1 மணிக்கு முடிக்கிறார். அதிலிருந்து 4 மணி வரை ஓய்வு. மீண்டும் 4 மணிக்கு டெம்போ டிராவலரில் ஏறினால் இரவு 10 மணிக்குதான் இறங்குகிறார் உதயநிதி.