கொரோனா: தமிழகத்தில் தயாராகும் தனி வார்டு!
உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா பாதிப்பு இந்தியாவில் யாருக்கும் இல்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். எனினும் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் விமான நிலையங்களில் தீவிர ஸ்க்ரீனிங் டெஸ்ட் எடுக்கப்பட்டு வருகிறது.
சீன கடல் உணவு மற்றும் இறைச்சி சந்தையில் இருந்து பரவியதாகச் சொல்லப்படும் கொரோனா வைரஸ் தற்போது இலங்கை, அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவில் மட்டும் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 3000க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வுகான் உள்ளிட்ட நகரங்களுக்குச் சென்று வர தடை விதிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ளவர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
கொரோனா பரவலால் அனைத்து நாடுகளின் விமான நிலையங்களிலும் ஸ்க்ரீனிங் டெஸ்ட் எனப்படும் தீவிர மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியா
அதுபோன்று சீனா சென்று வந்த இந்தியர்களும் விமான நிலையங்களில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி மகாராஷ்டிராவில் சந்தேகத்தின் அடிப்படையில் 6 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவிலும் சந்தேகத்தின் அடிப்படையில் 436 பேர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்தியக் குழு நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் ஆய்வு நடத்தி வருகிறது. கேரளாவுக்குச் சென்று திரும்பிய மருத்துவ அதிகாரி சவுகத் அலி, கேரளாவில் கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற அடிப்படையில் 436 பேர் 5 மருத்துவமனைகளில் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். கேரள மாநிலத்தில் இருந்து அனுப்பப்பட்ட ரத்த மாதிரிகளில் எதிலும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது என்று கூறினார்.
தமிழகம்
தமிழகத்தைப் பொறுத்தவரை யாருக்கும் கொரோனா பதிப்பு இல்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் திட்டவட்டமாகக் கூறி வருகிறார். விமான நிலையங்களில் ஸ்க்ரீனிங் டெஸ்ட் எடுக்கப்பட்டு வருவதாகவும், கொரோனாவை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஒருவேளை கொரோனா பாதிப்பால் யாரேனும் அனுமதிக்கப்பட்டால் அவர்களைத் தனிமைப் படுத்தி சிகிச்சை அளிக்கத் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தனிச் சிறப்பு வார்டும் தனி மருத்துவக் குழுவும் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. 2 நுரையீரல் சிகிச்சைப்பிரிவு மருத்துவர்கள் மற்றும் இந்தத் துறையைச் சேர்ந்த 2 பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்கள், 2 பொது மருத்துவத்துறை மருத்துவர்கள், செவிலியர்கள் என தனிக் குழு சிறப்பு வார்டில் தயார் நிலையில் உள்ளது.
யாரும் பீதியடைய வேண்டாம்
கொரோனா பாதிப்பு அச்சம் மக்களிடையே எழுந்துள்ள நிலையில், இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தியாவில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. யாரும் அச்சமடைய வேண்டாம். வைரஸ் பாதிப்பைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.
சீனாவில் இருக்கும் இந்தியர்களின் நிலை
இந்த வகை வைரஸால் சீனாவின் முக்கிய நகரங்கள் முடங்கியுள்ளன. இந்நிலையில் சீனாவில் உள்ள இந்தியர்களின் நிலை குறித்து அங்கிருக்கும் தூதரகம் மூலம் கண்காணித்து வருவதாக மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. சீனாவில் இருக்கும் இந்தியர்களை வெளியேற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். சீன தூதரக அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அதுபோன்று விமான போக்குவரத்துத் துறையுடன் இணைந்து அங்கிருக்கும் இந்தியர்களையும், மாணவர்களையும் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்காக 400 பேர் வரை பயணிக்கக் கூடிய ஏர் இந்தியா விமானம் தயார் நிலையில் இருப்பதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிக்கின்றன.
இதனிடையே சீனாவில் உள்ள இந்திய மாணவர்கள் இங்கிருந்து வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளோம், விரைவில் மத்திய அரசு எங்களை மீட்க வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர்.
பேஸ்புக் ஊழியர்களுக்குத் தடை
கொரோனா எதிரொலியாக அமெரிக்காவைச் சேர்ந்த பேஸ்புக் மற்றும் ரேஸர் ஆகிய நிறுவனங்கள், தனது பணியாளர்களைச் சீனா செல்ல தடை விதித்துள்ளது.
சீனா சென்று மீண்டும் அமெரிக்கா திரும்புவோர் வீட்டிலிருந்தே வேலை பார்க்குமாறு பேஸ்புக் அறிவித்துள்ளது. பேஸ்புக் நிறுவனம் சீனாவில் தடை செய்யப்பட்டிருந்தாலும், அந்நிறுவனம் உருவாக்கும் விர்ச்சுவல் ரியாலிட்டி சாதனங்களைத் தயாரிப்பதற்குச் சீனாவில் தான் அலுவலகங்கள் உள்ளன.