டிஜிட்டல் திண்ணை: ரஜினியின் தொடர்பு எல்லைக்குள் காங்கிரஸ்
டிஜிட்டல் திண்ணை: ரஜினியின் தொடர்பு எல்லைக்குள் காங்கிரஸ்
மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
“கடந்த டிசம்பர் 12ஆம் தேதி ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் ஒரு காலத்தில் ரஜினியின் வீடு தேடி வந்த பிரதமர் மோடி, அன்று ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. தமிழக பாஜகவில் இருந்து ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் போன்றோர் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தாலும் கிருஷ்ணனாகவும், அர்ஜுனனாகவும் ரஜினி உருவகப்படுத்திய இரு பெரும் தலைவர்களான மோடி, அமித் ஷா ஆகியோர் ரஜினியை வாழ்த்தவில்லை.
மோடி சமூக தளங்களைப் பயன்படுத்துவதில் சமர்த்தர். மகாராஷ்டிரத்தில் காலை 8 மணிக்குள்ளாக முதல்வர் பதவியேற்ற பட்னாவிஸுக்கு உடனடியாக வாழ்த்து தெரிவித்தவர். இப்படி யாரை, எப்போது வாழ்த்த வேண்டும் என்பதில் மோடி தெளிவாக இருக்கிறார். அப்படிப்பட்ட மோடி, ரஜினியை வாழ்த்த வேண்டிய ஒரு நாளில் ஏன் வாழ்த்தவில்லை என்பது ஏதோ எதேச்சையாக நடந்தது அல்ல. திட்டமிட்டே மோடி ரஜினியை வாழ்த்தவில்லை. மோடி செய்வதை விட அவர் தவிர்ப்பதில்தான் அதிக அர்த்தம் இருக்கும் என்பார்கள் பாஜகவினர்.
தமிழக ஊடகங்களில் மிகவும் பெரிதாக இந்த சப்ஜெக்ட் விவாதிக்கப்படவில்லை. மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் மட்டும் ரஜினியை மோடி வாழ்த்தினாரா இல்லையா? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினியை மோடி வாழ்த்தாமல் தவிர்த்ததற்கான காரணங்கள் ரஜினியைச் சுற்றியிருப்பவர்களால் இப்போது மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கியிருக்கிறது. ரஜினிக்காக பல நாட்கள், பல மாதங்கள், பல வருடங்கள் காத்திருந்துவிட்டது பாஜக. பாஜகவில் இணைய வேண்டும் அல்லது தனிக்கட்சி ஆரம்பித்தால் பாஜகவோடு கூட்டணி வைக்க வேண்டும் என்று ரஜினியிடம் அமித் ஷா தொடர்ந்து வலியுறுத்தியும் ரஜினி இன்னமும் கழுவிய மீனில் நழுவிய மீனாகவே இருக்கிறார். ரஜினி அவ்வப்போது வெளிப்படுத்தும் கருத்துகளை வைத்து அவர் பாஜக சார்பாக இருக்கிறார் என்ற விவாதங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெறுகின்றன. அப்படியென்றால் தமிழகத்தில் தங்களுக்கு முக்கியமான ரஜினியை ஏன் மோடி வாழ்த்தவில்லை?
இந்தக் கேள்விக்குப் பதில்... சில வாரங்களாகவே ரஜினியோடு காங்கிரஸ் பிரமுகர்கள் தொடர்ந்து டச்சில் இருக்கிறார்கள். ரஜினிக்கு காங்கிரஸ் கட்சியில் ஏராளமான நண்பர்கள் உண்டு. கர்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திரம், கேரளம் போன்ற மாநிலங்களில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தொடர்ந்து ரஜினியோடு பேசி வருகிறார்கள். ஏ.கே.அந்தோனி, மராட்டியத்தில் சுப்ரியா சுலே போன்றவர்கள் ரஜினியோடு பேசி பாஜக உங்களுக்கு வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் பேசியதைப் பற்றி ரஜினி தனக்கு நம்பிக்கையான தமிழ்நாட்டு அரசியல் நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அதற்கு அவர்கள்,
‘பாஜகவோடு நீங்க கூட்டணி வெச்சா தமிழ்நாட்டுல உங்களால எதுவும் பண்ண முடியாது. பாஜகவுக்கு ஏற்கனவே தமிழகத்துல செல்வாக்கு இல்ல. ரஜினி என்றால் மதங்களைக் கடந்த ஆன்மிகவாதின்னு ஒரு நல்ல பெயர் இருக்கு. அதன் அடிப்படையில் காங்கிரஸோடு நீங்க சேரணும். நீங்க சரின்னு சொன்னா காங்கிரஸ் திமுக கூட்டணியை விட்டு வெளியே வரும். ரஜினியோடு காங்கிரஸ் வருவதாக இருந்தால் திமுக கூட்டணியில் இருந்து மேலும் சில கட்சிகளும் கூட வரலாம். காங்கிரஸின் தேசியம்தான் இப்போது உங்களுக்குச் சரியாக இருக்கும்’ என்று சொல்லியிருக்கிறார்கள். வழக்கம்போல் ரஜினி எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு, ‘பார்க்கலாம்’ என்று சொல்லியிருக்கிறார்.
தமிழகத்தில் தேர்தல் என்று வந்தால் திமுகவுக்கு ரஜினி பாதிப்பை ஏற்படுத்துவார் என்பதால்தான் , ரஜினியைச் சீண்டி உதயநிதி அண்மையில் கருத்துகளை வெளியிட்டிருந்தார். இதுபற்றி ரஜினி பதில் அளிக்கவில்லையென்றாலும் கடுங்கோபத்தில் இருக்கிறார். திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸைக் கழற்றிவிட்டால் திமுகவின் தார்மிக பலம் குறையும் என்ற கணக்கும் ரஜினி வட்டாரத்தில் போடப்படுகிறது. ரஜினியை ஏதோ பாஜகவின் ஆள் என்று பலரும் விமர்சித்துக் கொண்டிருக்கும் நிலையில் ரஜினியின் தொடர்பு எல்லைக்குள் காங்கிரஸ் இருப்பதே ஆச்சரியமான அரசியல் நகர்வுதான்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.