BJP's Sleeper Cell Prashanth Kishore? | | Editorji
  1. home
  2. > Minnambalam
  3. > BJP's Sleeper Cell Prashanth Kishore? |
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

BJP's Sleeper Cell Prashanth Kishore? |

Jan 29, 2020 19:06 IST

அமித் ஷாவின் ஸ்லீப்பர் செல்லா பிரசாந்த் கிஷோர்? திமுகவில் பரபரப்பு!
ஐக்கிய ஜனதா தளத்தின் துணைத் தலைவரும், தேர்தல் உத்தி வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோருக்கும், அக்கட்சித் தலைவரும், பிகார் முதல்வருமான நித்தீஷ்குமாருக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. இந்த மோதல் தமிழகம் வரைக்கும் எதிரொலிக்கிறது.

இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நித்தீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆதரித்தது. ஆனால் கட்சியின் இந்த முடிவை அதன் துணைத் தலைவரான பிரசாந்த் கிஷோர் எதிர்த்தார். எந்த அடிப்படையில் இந்த சட்டத்தை கட்சி ஆதரித்தது என்று நிதீஷ் விளக்க வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் குரல் கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை பாராட்டினார். சி.ஏ.ஏ.வை முழுமையாக நிராகரித்ததற்காக காங்கிரஸுக்கும் ராகுல் காந்திக்கும் நன்றி கூறினார் பிரசாந்த் கிஷோர்.


இதற்கிடையில் ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரான பவன் வர்மா கடந்த ஜனவரி 20 ஆம் தேதி கட்சித் தலைவர் நிதீஷ்குமாருக்கு ஒரு கடிதம் எழுதி அதை தன் ட்விட்டரிலும் வெளியிட்டார். அதில், “நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், நித்தீஷ்குமார் எந்த அடிப்படையில் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜகவோடு கூட்டணி வைத்தார் என்று விளக்க வேண்டும். இது அவரது சொந்த முடிவு” என்று விளாசியிருந்தார். மேலும் சிஏஏ, என்.ஆர்.சி. விவகாரத்தில் கட்சியின் கொள்கை என்ன என்பதை விளக்க வேண்டும் என்றும் பவன் வர்மா கோரினார்.


பிரசாந்த் கிஷோர், பவன் வர்மா போன்றவர்களால் கட்சிக்குள் பாஜகவுக்கு எதிரான குரல்கள் அதிகரித்திருப்பதை உணர்ந்த நித்தீஷ் குமார் கடும் கோபம் அடைந்தார். இந்நிலையில் நேற்று பாட்னாவில் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நித்தீஷ்குமார்,

“பிரசாந்த் கிஷோர் பல கட்சிகளோடு தொடர்பு வைத்துள்ளவர். அவர் ஒரு தேர்தல் உத்தி வகுப்பாளர். ஆனால் ஐக்கிய ஜனதா தளத்தின் உறுப்பினராக இருக்கும்போது இந்த கட்சியின் விதிகளைப் பின்பற்றியாக வேண்டும். அவரை எப்படி நான் கட்சியில் சேர்த்துக்கொண்டேன் தெரியுமா? பாஜக தலைவர் அமித் ஷாவின் அறிவுறுத்தலின் பேரில்தான் நான் பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்த்துக் கொண்டேன். இப்போது பிரசாந்த் கிஷோரின் நடவடிக்கைகள் வேறு மாதிரி இருக்கின்றன. அவர் இருந்தாலும் சரிதான், போனாலும் சரிதான்” என்று கடுமையாக பேசினார்.


அமித் ஷாவின் பேச்சைக் கேட்டுத்தான் பிரசாந்த் கிஷோரை ஐக்கிய ஜனதா தளத்தில் சேர்த்துக் கொண்டதாக பிகார் முதல்வர் நித்திஷ்குமார் கூறியிருப்பது பிகாரில் மட்டுமல்ல, அகில இந்திய அளவில் அரசியல் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள பிரசாந்த் கிஷோர் ”நான் ஐக்கிய ஜனதா தளத்தில் சேர்ந்தது பற்றி பொய் சொல்லியிருக்கிறீர்கள் நித்தீஷ்குமார். என்னையும் உங்கள் நிறத்துக்கு மாற்ற முயற்சி செய்கிறீர்கள். நீங்கள் சொல்வது உண்மை என்றால் கூட... அமித் ஷாவால் சிபாரிசு செய்யப்பட்டவரின் கருத்தை ஏற்க மறுக்கும் வலிமை உங்களுக்கு இருக்கிறது என்று யார் நம்புவார்கள்?” என்று கேட்டிருக்கிறார். மேலும் பிகார் வந்து விரிவாக பதிலளிப்பதாகவும் தெரிவித்துள்ளார் பிரசாந்த் கிஷோர்.

பிகாரில் எழுந்துள்ள இந்த ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் உள் விவகாரம் தமிழ்நாடு வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் ஜெ. மரணத்துக்குப் பின் ஸ்லீப்பர் செல் என்ற வார்த்தை பரபரப்பாக அடிபட்டது.தனது ஸ்லீப்பர் செல்கள் அதிமுகவில் இருப்பதாக தினகரன் அவ்வப்போது சொல்வார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனால் இப்போது தேசிய அளவில் ஸ்லீப்பர் செல் பற்றிய விவாதம் எழுந்துள்ளது.

"அமித் ஷா சொல்லிதான் பிரசாந்த் கிஷோரை சேர்த்துக் கொண்டதாக நித்தீஷ்குமார் தெரிவித்துள்ளார். அப்படியென்றால் மற்ற கட்சிகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதற்கு பிரசாந்த் கிஷோரை ஸ்லீப்பர் செல்லாக அமித் ஷா பயன்படுத்துகிறாரா? இந்த பிரசாந்த் கிஷோர்தானே திமுகவுக்கு தேர்தல் உத்தி வகுப்பாளராக வரும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். அப்படியென்றால் பிரசாந்த் கிஷோர் மூலமாக திமுகவின் உள் விவகாரங்கள் அமித் ஷாவுக்கு கிடைக்க வாய்ப்பிருக்குமா? நித்தீஷ்குமார் இப்படிப் பேசும் ஆளல்ல. ஆனால் அவரே பேசியிருக்கிறார் என்றால் நெருப்பில்லாமல் புகையுமா?” என்ற கேள்வி திமுகவின் நிர்வாகிகளிடையே எழுந்திருக்கிறது.

பனைமரத்தில் தேள்கொட்டினால் தென்னை மரத்தில் நெரி கட்டும் என்பார்கள். அதேபோல பாட்னாவில் இடித்த இடி சென்னையிலும் எதிரொலிக்கிறது.