கொல்லிமலையில் 20 குழந்தைகள் மாயமாகி இருப்பது தனி குழுவினர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ராசிபுரத்தைச் சேர்ந்த அமுதவல்லி என்ற ஓய்வு பெற்ற செவிலியர் கடந்த 30 ஆண்டுகளாகக் கடவுள் புண்ணியத்தில் குழந்தை விற்பனை தொழில் செய்து வருவதாக கூறிய ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆடியோ தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சுகாதாரத் துறை உத்தரவின் பேரில் நாமக்கல், ராசிபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அமுதவல்லி, அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ரவிச்சந்திரன் ராசிபுரம் நகரக் கூட்டுறவு வங்கியின் ஆர்.புதுப்பாளையம் சாலை கிளையில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வந்துள்ளார். இருவரைத் தொடர்ந்து, இவர்களுக்கு உதவியதாக கொல்லிமலை செங்கரை பவர்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் கைது செய்யப்பட்டார். அமுதவல்லியிடம் நடத்திய விசாரணையில் அவர் சேலம், நாமக்கல், மதுரை ஆகிய பகுதிகளில் இருந்து 7 குழந்தைகளை விற்றிருப்பதாக வாக்குமூலம் அளித்திருக்கிறார். ஆனால் ஓட்டுநர் முருகேசன் கொல்லிமலை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 10 குழந்தைகளை அமுதவல்லியிடம் விற்றதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பின்னர் மூவரையும் ராசிபுரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மாலதி முன்னிலையில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் அவர்களை சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் குழந்தை கடத்தல் தொடர்பாக குமாரபாளையம், பவானி, திருச்செங்கோட்டைச் சேர்ந்த 3 பெண்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து அவர்களையும் போலீசார் கைது செய்திருக்கின்றனர். அதன்படி இதுவரை குழந்தை கடத்தல் விவகாரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 20 குழந்தைகள் மாயம் இதற்கிடையே குழந்தைகள் விற்பனை தொடர்பாக விசாரணை நடத்த மருத்துவர்கள் செவிலியர்கள் அடங்கிய 10 குழுக்கள் நடத்திய ஆய்வில் கொல்லிமலை சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 20 குழந்தைகள் மாயமாகியிருப்பது தெரியவந்திருக்கிறது. இந்த குழந்தைகளுக்கான பிறப்பு சான்றிதழ் உள்ள நிலையில் 20 குழந்தைகள் பெற்றோர்களிடம் இல்லை என்றும் தெரியவந்திருக்கிறது. இதைத்தொடர்ந்து அந்த குழந்தைகள் எங்கே என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.