உள்ளாட்சித் தேர்தல்-அதிமுக குழப்புகிறதா? எடப்பாடி

Updated : Nov 30, 2019 16:56
|
Editorji News Desk
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான பணிகளையும் மாநிலத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாக வார்டு மறுவரையறை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்ய உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக மனுதாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், “ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி யாரவது நீதிமன்றத்திற்கு சென்று உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை பெறுவார்களா என்ற நோக்கத்தோடு அதிமுக அரசு செயல்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் அதிமுக அரசு பல குழப்பங்களை செய்துள்ளது” என்று குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத் துவக்க விழாவில் இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். தமிழகத்தின் 37ஆவது மாவட்டமான செங்கல்பட்டு மாவட்ட தொடக்க விழா நேற்று (நவம்பர் 29) நடைபெற்றது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். விழாவில், செங்கல்பட்டு மாவட்டத்தின் நிர்வாகப் பணிகளை தொடங்கிவைத்த முதல்வர், நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “வேண்டுமென்றே திட்டமிட்டு இந்தத் தேர்தலை தடை செய்வதற்காக, நிறுத்துவதற்காக ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டை சொல்லி வருகின்றார். உண்மையிலே, ஸ்டாலின் இந்தத் தேர்தலைக் கண்டு அஞ்சுகிறார் என்று தான் நான் நினைக்கிறேன். செல்லும் இடங்களில் அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை. எனவே, மக்களுக்கு முறையாக வசதிகள் கிடைக்கவில்லை என்று குற்றச்சாட்டுக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார். அதிமுக அரசு தேர்தல் நடத்த அஞ்சுகிறது என்று வீர வசனம் பேசிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். மாநிலத் தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை அறிவித்தால் அதை எதிர்கொள்ளக்கூடிய வலிமை அதிமுகவுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் இருக்கிறது. நீங்கள் நொண்டிச்சாக்குச் சொல்லிக் கொண்டு நீதிமன்றத்தை நாடப் பார்க்கின்றீர்கள். இந்தத் தேர்தலை நிறுத்துவதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகள் எதுவும் பலிக்காது” என்று சாடினார். மேலும், “உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவதற்குத் தான் இன்றைய தினம் வழக்குத் தொடர நீதிமன்றம் சென்றிருக்கின்றார்கள். இந்தத் தேர்தலை நிறுத்துவதற்கு அவர்கள் குறிப்பிட்ட காரணம் முற்றிலும் தவறான, பொய்யான காரணம். இந்தத் தேர்தலை சந்திக்க திமுக தலைவர் அஞ்சுகிறார் என்று தான் நான் கருதுகிறேன்” என்று கூறிய முதல்வர், திமுக தலைவர் ஸ்டாலின் அளித்த பேட்டியில் சொன்ன குற்றச்சாட்டுகளுக்கும் விளக்கம் அளித்தார். “உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 2016ஆம் ஆண்டு திமுக தொடர்ந்த வழக்கில் 1996, 2001, 2006 மற்றும் 2011 ஆகிய வருடங்களில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் கடைபிடிக்கப்பட்ட அதே அட்டவணையின் நடைமுறையின்படி 2016 உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையும் வெளியிடப்பட்டது என்ற வாதத்தை மாநிலத் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் எடுத்து வைத்தபொழுதும் அந்தத் தேர்தலை நீதிமன்றம் ரத்து செய்தது” என்று குறிப்பிட்ட முதல்வர், “இதன் பின்னர் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியான வார்டு மறுவரையறை அரசிதழில் வெளியிடப்பட்டது. பின்பு தமிழ்நாடு அரசு, ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான விகிதாச்சாரப்படி இடஒதுக்கீடு செய்துள்ளது. இவ்வாறு அனைத்துப் பணிகளையும் முறையாக செய்த பின்னர் திமுக பல்வேறு வழக்குளைப் தொடுத்து, உள்ளாட்சித் தேர்தலை நடத்த விடாமல் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது” என்று குற்றம்சாட்டினார். மேலும், “புதிதாக மாவட்டங்கள் தொடங்குவதற்கும் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இதற்காக 2018-ஆம் ஆண்டில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் சந்தேகம் இருந்திருந்தால், அப்பொழுதே திமுக நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கலாம். ஆனால், அப்பொழுது செல்லவில்லை. வார்டு வரையறுக்கப்பட்ட பிறகு பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டது. எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்சேப மனுக்களின் கோரிக்கையை பரிசீலித்து முறையாக வார்டு வரையறுக்கப்பட்டிருக்கிறது என்பதை தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கின்றது. இப்படி அனைத்தையும் முறையாக மாநிலத் தேர்தல் ஆணையம் செய்தும், தேர்தலைச் சந்திக்கத் தெம்பில்லாமல், திராணியில்லாமல், துணிவில்லாமல்,திமுக தலைவர் பேட்டியளித்திருக்கிறார்” என்று குற்றம்சாட்டினார்.

Recommended For You

editorji | Partners

MPs talking about Rajinikanth in parliament

editorji | Partners

Is Prashanth Kishor grabbing the power of DMK District Secretaries?

editorji | Partners

What Happen To Vadivelu? | Minnambalam.com

editorji | Partners

Durka Stalin House was Sieged By DMK cadres

editorji | Partners

Job Recruitment: UPSC Invites Online Applications