டிஜிட்டல் திண்ணை : ஐடிவிங் மீது அதிருப்தியில் ஸ்டாலின்!

Updated : Nov 29, 2019 15:35
|
Editorji News Desk
மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. “திமுக தலைவராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் கலைஞர் இருந்தபோது முதல்வராக இருந்த எம்ஜிஆரும் சரி, ஜெயலலிதாவும் சரி., ஒவ்வொரு நாளும் டென்ஷனாக இருப்பது கலைஞரின் அறிக்கைக்காகத்தான். ’இன்னிக்கு என்ன ஏழரையைக் கூட்டப் போறாரோ?’ என்பதுதான் அவர்களின் அந்த டென்ஷனுக்குக் காரணம். ஏனெனில் ஆட்சியாளர்களுக்கு ஒரு நாள் சுமுகமாய் போனால் கூட அதற்கு பதிலாக நான்கு நாள் நம்மை அதாவது எதிர்க்கட்சித் தலைவர்களை சும்மா விடமாட்டார்கள் என்று கருதினார் கலைஞர். அதனால் அவர் தினமும் சந்திக்கும் திமுக பிரமுகர்கள், சக அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரமுகர்கள், இலக்கிய நண்பர்கள், ஏன் குழந்தைகளிடமிருந்து கூட அடுத்த நாள் முரசொலியில் தான் எழுத வேண்டிய கடிதத்துக்கான அறிக்கைக்கான எரிபொருளைப் பெற்றுக்கொள்வார் கலைஞர். அதேபோல தான் வாசிக்கும் தினமணியிலோ, தினத்தந்தியிலோ ஏதாவது ஒரு செய்தி கண்ணை உறுத்துகிறது என்றால் காலை 5 மணியாக இருந்தாலும் கன்னியாகுமரியோ, காஷ்மீரோ போன் போட்டு அந்தப் பிரச்சினையின் முழுமையான கோணம் என்ன என்பதை அறிந்துகொள்வார். இதுதான் அன்று பிற்பகலோ, மாலையோ சில சமயங்களில் இரவோ முரசொலிக்கு மடலாக வரும். கலைஞரின் கடிதம் கைக்கு வந்த உடனேயே, அதன் தீவிரத்தையும் எக்ஸ்க்ளுசிவ் தனத்தையும் உணர்ந்து, ‘இந்தப் பிரச்சினைதான் இன்னும் ஒரு வாரத்துக்கு கோட்டையை உலுக்கப் போகுது’ என்று முரசொலி ஊழியர்களே முன்கூட்டி கணித்துச் சொல்லும் காலம் இருந்தது. ஆனால் இன்று நிலைமை மாறி, எதிர்க்கட்சியான திமுகவையும் அதன் தலைவரையும் ஆளுங்கட்சியும் அதனுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் புகார்களால் தாக்குவதும், விமர்சனங்களால் தினமும் காயப்படுத்துவதும் தொடர் கதையாக இருக்கின்றன. அந்த வகையில்தான் முரசொலி பஞ்சமி, மிசா கைது உள்ளிட்ட சர்ச்சைகள் இருக்கின்றன. கலைஞர் எதன் மூலம் எதிர்க்கட்சிகளுக்குக் குடைச்சல் கொடுத்தாரோ அந்த முரசொலி மூலமாகவே எதிர்க்கட்சிகள் இப்போது திமுகவுக்கு குடைச்சல் கொடுக்கின்றன. எதிர்க்கட்சிதான் ஆளுங்கட்சியை தூங்கவிடாமல் செய்ய வேண்டும், ஆளுங்கட்சிதான் எதிர்க்கட்சிக்கு பதிலளிக்க வேண்டும். ஆனால் இப்போது ஆளுங்கட்சிக்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்கும் எதிர்க்கட்சியான திமுக பதிலளிக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. முரசொலி, மிசா பிரச்சினைகளில் திமுகவின் இரண்டாம் நிலை தலைவர்கள், மூத்த முன்னோடிகள் என்னதான் பதில் சொன்னாலும் கடைசியில்.... தலைவரான ஸ்டாலினே மேடைக்கு மேடை இதைப் பேச வேண்டிய நிலைமைக்கு ஆளாக்கிவிட்டது பாமக. சமூக தளங்களிலும், இணைய உலகத்திலும் உருவான இந்த திமுக மீதான தாக்குதல் இன்று விரிவாகி அனைத்து ஊடகங்களிலும் பரவிவிட்டது. இந்த நிலையில் திமுக ஐடி விங் இந்தப் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கிள்ளி எறியும் வகையில் பதில் சொல்லாததும், மத்திய, மாநில ஆளுங்கட்சிகளைத் திணறச் செய்யும் வகையில் திமுக சார்பில் அட்டாக் ஆட்டத்தை ஆடாததும் ஸ்டாலினை கடுமையான அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளன. தமிழகத்தில் இருக்கும் கட்சிகளிலேயே ஐடிவிங் முறையாக திட்டமிட்டுக் கட்டமைப்பட்டு அனைத்து அளவுகளிலும் நிர்வாகிகளும் இருப்பது திமுகவில்தான். ஆனால் திமுக ஐடிவிங் அண்ணா பதவியேற்ற நாள், கலைஞர் தலைமையேற்ற நாள் என்று ’ஆர்ச்சிவ்’களை ஆராய்ந்து போட்டோ கார்டு போடுகிறதே தவிர, அதிமுக அரசை நிலைகுலையச் செய்யும் அளவுக்கு முக்கியப் பிரச்சினைகளை கையிலெடுத்து எரிய வைக்கத் தவறிவிட்டது என்று கருதுகிறார் ஸ்டாலின். இதனால் ஐடிவிங் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார். ஐடி விங்கில் இருக்கும் இசை, நெல்லை ஜோக்கின், நாங்குநேரி எட்வின், மேலும் புதுக்கோட்டை அப்துல்லா போன்ற விரல் விட்டு எண்ணக் கூடிய நபர்கள் கொஞ்சம் விதிவிலக்காக தனித்துவமாக செயல்படுகிறார்கள் என்றபோதும் ஒட்டுமொத்த திமுகவின் ஐடி விங் செயல்பாடு ஸ்டாலினை திருப்திப் படுத்தவில்லை.எதிர்க்கட்சியாக இருக்கும்போது தாக்குதல் (அட்டாக் கேம்) ஆட்டம் ஆடாமல், காப்பாட்டம் ( டிஃபென்ஸ் கேம்) ஆடும் அளவுக்கு திமுகவை ஆக்கிவிட்டார்கள் என்று ஐடி விங் தலைவர் பிடிஆர். தியாகராஜன் மீதும் பல நிர்வாகிகள் தலைமைக்கு புகார் கூறி, தகுந்த ஆர்வமுள்ள இளைஞர்களைக் கொண்டு ஐடிவிங்கை பலப்படுத்துமாறு திமுக தலைமைக்கு கோரிக்கைகள் சென்றுள்ளன. எனவே ஐடிவிங்கின் முழு கட்டமைப்பையும் மாற்றலாமா என்று உதயநிதியும், ஸ்டாலினும் ஆலோசனை செய்துகொண்டிருக்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் சென்றது வாட்ஸ் அப்.

Recommended For You

editorji | Partners

MPs talking about Rajinikanth in parliament

editorji | Partners

Is Prashanth Kishor grabbing the power of DMK District Secretaries?

editorji | Partners

What Happen To Vadivelu? | Minnambalam.com

editorji | Partners

Durka Stalin House was Sieged By DMK cadres

editorji | Partners

Job Recruitment: UPSC Invites Online Applications