ஓ.பன்னீர் நிம்மதியைக் கெடுத்த கபில் சிபல்

Updated : Jul 31, 2019 18:28
|
Editorji News Desk
தமிழக சட்டமன்றத்தில் அதிமுக கொறடா உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நிலையெடுத்து வாக்களித்தார்கள் ஓ.பன்னீர் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள். இவர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக கொறடா சக்கரபாணி தொடுத்த வழக்கு நேற்று காலை (ஜூலை 30) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் 2018 ஏப்ரல் 27ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அளித்த தீர்ப்பில், சக்கரபாணியின் மனுவைத் தள்ளுபடி செய்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் விசாரிக்க உகந்த வழக்குதான் என்று தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிற நீதிபதி, அதேநேரம் மக்கள் பிரதிநிதிகளைத் தகுதி நீக்கம் செய்ய நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறது என்பதை மனுதாரர்கள் வற்புறுத்தவில்லை என்றும் தீர்ப்பில் கூறியிருந்தார். ஓ.பன்னீர் தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன் நேற்று காலை உச்ச நீதிமன்றத்தில் இதைக் குறிப்பிட்டு, நீதிபதி இந்திரா பானர்ஜியின் இந்த வரிகளின் அடிப்படையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டிருக்கவே கூடாது என்று வாதாடினார். இதைக் கேட்ட நீதிபதிகள் வழக்கை மதியம் 2 மணிக்கு ஒத்தி வைத்தனர். ஒருவேளை வைத்தியநாதனின் கருத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்திருக்க வேண்டிய தேவையில்லை என்று சொல்லிவிடும் என்று ஓ.பன்னீர் தரப்பினர் நிம்மதியாக இருந்தனர். திமுக தரப்பிலும் டென்ஷன் அதிகமாக இருந்தது. மதியம் 2 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வந்தபோது திமுக கொறடா சக்கரபாணி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மிகுந்த ஆவேசத்தோடு வாதாடத் தொடங்கினார். “நீதிபதி இந்திரா பானர்ஜி அளித்த தீர்ப்பில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் செல்வதற்குத் தகுதியானது என்று குறிப்பிட்டிருக்கிறார். மனுதாரர்கள் வற்புறுத்தவில்லை என்று அந்தத் தீர்ப்பில் ஓர் இடத்தில் குறிப்பிட்டிருந்தால் நாங்கள் மனுவை வாபஸ் வாங்கிவிட்டோம் என்று அர்த்தமாகிவிடுமா? நான் சுமார் 40 ஆண்டுகளாக வழக்கறிஞர் பணியில் இருக்கிறேன். பொய் சொல்லி ஒரு வழக்கை ஜெயிக்க வேண்டிய அவசியம் எனக்கு என்றைக்குமே இருந்ததில்லை. என் வழக்கறிஞர் பணியை அறத்தோடு செய்து வருகிறேன். இதை நான் அபிடவிட் ஆகவே நீதிமன்றத்திடம் வழங்குகிறேன். எதிர்க்கட்சிக்காரரின் வழக்கறிஞர் அவ்வாறு வழங்கத் தயாரா?” என்று கபில் சிபல் உணர்ச்சிவசப்பட்டுக் கேட்க அதற்கு பன்னீர் தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதனிடம் பதில் இல்லை. இந்த நிலையில் வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது நீதிமன்றம். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிற்காது என்று 12 மணிக்கு மேல் 2 மணி வரை ஓ.பன்னீர் தரப்பினர் நிம்மதியாக இருந்த நிலையில் அந்த நிம்மதியைத் தனது கடுமையான வாதத்தின் மூலமாகக் கெடுத்துவிட்டார் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்.

Recommended For You

editorji | Partners

MPs talking about Rajinikanth in parliament

editorji | Partners

Is Prashanth Kishor grabbing the power of DMK District Secretaries?

editorji | Partners

What Happen To Vadivelu? | Minnambalam.com

editorji | Partners

Durka Stalin House was Sieged By DMK cadres

editorji | Partners

Job Recruitment: UPSC Invites Online Applications