தேசிய மருத்துவ ஆணையம்: மக்களவையில் அதிமுக எதிர்ப்பு!

Updated : Jul 30, 2019 15:19
|
Editorji News Desk
தேசிய மருத்துவ ஆணையத்துக்கு அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமார் மக்களவையில் நேற்று (ஜூலை 29) எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக, அதாவது 1956 முதல் மருத்துவக் கல்வி நடைமுறைகளை இந்திய மருத்துவக் கவுன்சில் கையாண்டு வருகிறது. தற்போது அதைக் கலைத்து தேசிய மருத்துவ ஆணையம் என்கிற புதிய அமைப்பை ஏற்படுத்துவதற்கான மசோதாவை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மக்களவையில் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்குப் பல கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையிலும் நேற்று (ஜூலை 29) மக்களவையில் நிறைவேறியது. இதன் மூலம் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்பை முடித்தாலும் நெக்ஸ்ட் தேர்வு எழுதினால் மட்டுமே மருத்துவராகப் பயிற்சி பெற முடியும். காங்கிரஸ், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இம்மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. ஏற்கனவே முத்தலாக் மசோதாவுக்கு அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமார் மக்களவையில் ஆதரவு அளித்தது வேலூர் தேர்தல் பிரச்சாரத்தில் எதிரொலித்து வருகிறது. வேலூர் மக்களவைத் தொகுதியில் இஸ்லாமியர் வாக்குகள் கணிசமாக உள்ளது. ஆனால் அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமார் முத்தலாக் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதைப் பயன்படுத்தி திமுக, அதிமுகவுக்கு எதிராகத் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்தச் சூழலில், தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு ரவீந்திரநாத் குமார் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து மக்களவையில் அவர், நமது சுகாதாரத் துறை அமைச்சர் 1994ஆம் ஆண்டில் போலியோ தடுப்பு திட்டத்தை டெல்லியில் வெற்றிகரமாகச் செயல்படுத்தியதற்காக அவரை வாழ்த்துகிறேன். பின்னர் இந்தத் திட்டம் தேசிய அளவில் எடுத்துச் செல்லப்பட்டு 88 லட்சத்துக்கு அதிகமான குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பிரதமர் மோடி இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்ற பிறகு ஊழல்வாதிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அன்றாடம் பிரஷர் மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர். சில சமயங்களில் அந்த பிரஷர் நாடாளுமன்றத்திலும் எதிரொலிக்கிறது. தேசிய மருத்துவ ஆணையம் குறித்த அமைச்சரின் கருத்தை நான் ஏற்கிறேன். இது ஒட்டுமொத்த மருத்துவ அமைப்புக்கும் முதுகெலும்பாக இருக்கப் போகிறது. அதே நேரத்தில் ஒட்டுமொத்த மருத்துவ அமைப்பும் ஊழலால் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் தரமான சுகாதார வசதிகளை வழங்க பிரதமர் மோடி முயற்சி மேற்கொண்டுள்ளார். மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மத்திய அரசு தலையிடக் கூடாது, மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு நீட் தேர்வு கூடாது என்று ஜெயலலிதா இறுதி வரை கூறி வந்தார். பல்வேறு நேர்மறையான அம்சங்கள் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் இருந்தாலும், நான் அதிமுக பிரதிநிதியாக வந்துள்ளேன். தமிழக அரசு நீட் விலக்கு, நெக்ஸ்ட் தேர்வுக்குத் தடை, விதிக்க கோரிக்கை வைத்துள்ளது. அதனால் இந்த மசோதாவை நான் எதிர்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். திமுக எம்.பி ஆ.ராசாவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அவர், 'தேசிய மருத்துவ ஆணையம் சமூக நீதிக்கும் ஜனநாயகத்துக்கும் முற்றிலும் எதிரானது. இந்த மசோதா ஏழைகளுக்கு எதிராகவும் மக்களாட்சியின் தன்மை இன்றியும் உள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில் ஒரு ஜனநாயக அமைப்பு. நாட்டில் ஜனநாயகம் இருக்க வேண்டும். எங்களுடைய தலைவர் கலைஞர், ஜனநாயகம் என்பது சமூக பொருளாதாரத்தில் கீழ் நிலையில் இருப்பவர்களின் விருப்பங்கள் அரசாங்கத்தில் எதிரொலிக்க வேண்டும் என்று கூறுவார்' எனச் சுட்டிக்காட்டினார். மேலும், தேசிய மருத்துவ ஆணையத்தில், மருத்துவக் குழு, ஆலோசனை வாரியம் மற்றும் சில குழுக்கள் என மூன்று பிரிவுகள் பிரிக்கப்படுகின்றன. இதில் 80 முதல் 90 சதவிகித நிர்வாகிகள் தேர்தல் இன்றி மத்திய அரசால் நியமிக்கப்படுபவர்கள் என்று கூறியவர், இதற்கு என்ன அர்த்தம் இதுவா ஊழலை ஒழிப்பது எனக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

Recommended For You

editorji | Partners

MPs talking about Rajinikanth in parliament

editorji | Partners

Is Prashanth Kishor grabbing the power of DMK District Secretaries?

editorji | Partners

What Happen To Vadivelu? | Minnambalam.com

editorji | Partners

Durka Stalin House was Sieged By DMK cadres

editorji | Partners

Job Recruitment: UPSC Invites Online Applications